கிணற்றிலிருந்து பெண்ணின் சடலம் கண்டுபிடிப்பு குற்றுயிராயிருந்த மற்றுமொரு பெண்ணும் மீட்பு; வயலில் கிடந்த குழந்தை; மட்டக்களப்பில் பெரும் பரபரப்பு

மட்டக்களப்பு, வவுணதீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொத்தியாபுலையில் வெள்ளிக்கிழமை (20) கடத்தப்பட்ட பெண் ஒருவர் கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நெல்லிக்காடு வயல் பிரதேசத்தில் உள்ள பொதுக் கிணற்றினுள் இருந்து குற்றுயிராக மீட்கப்பட்ட அதேநேரம், அந்தக் கிணற்றிலிருந்து யுவதி ஒருவரின் சடலமும் மீட்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது.
கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நெல்லிக்காடு, பால்பண்ணை என்னும் பகுதியில் உள்ள வயல் பகுதியில் வெள்ளிக்கிழமை (20) காலை பால்பண்ணைக்குச் செல்லும் சிலர் குறித்த பொதுக் கிணற்றினுள் இருந்து அலறல் சத்தம் வருவதைக் கேட்டு அங்கு சென்று பார்த்தபோது பெண் ஒருவர் கழுத்தளவு நீரில் மூழ்கி குற்றுயிராக கிடப்பதை அவதானித்துள்ளனர். அத்துடன் வயல் வெளியில் குழந்தை ஒன்றையும் மீட்டுள்ளனர்.இதனைத்தொடர்ந்து கொக்கட்டிச்சோலை பொலிஸ் அவசர பிரிவிற்கு தகவல் வழங்கியதையடுத்து விரைந்துவந்த பொலிஸார் குறித்த பெண்ணை மீட்டு வைத்தியசாலைக்கு அனுப்பிவைத்ததுடன், குற்றுயிராய் கிடந்த பெண் வழங்கிய தகவலின் அடிப்படையில் குறித்த கிணற்றினுள் மேலுமொரு பெண்ணின் சடலத்தையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.
வெள்ளிக்கிழமை கொத்தியாபுலையினை சேர்ந்த 26 வயதுடை முருகமூர்த்தி ரனுஜா என்னும் பெண் மகளுடன் வீதியில் சென்றவேளையில், மகளை இழுத்துவீசிவிட்டு குறித்த பெண் கடத்தப்பட்டு தாக்கப்பட்டதுடன், குறித்த கிணற்றினுள் போடப்பட்டதாக முதற்கட்ட பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அத்துடன்,கிணற்றினுள் சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் சடலம், கடந்த மாதம் வெல்லாவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாற்பதுவட்டை பகுதியில் காணாமல் போன பெண் என சந்தேகிக்கப்படுகின்றது.
சடலம் கண்டெடுக்கப்பட்ட பகுதியில் காணப்பட்ட பாதணியைக் கொண்டு காணாமல் போன பெண் என உறவினர்கள் அடையாளம் காட்டியபோதிலும் முறையான மரண விசாரணை மற்றும் டிஎன்ஏ சோதனையின் மூலமே அடையாளம் உறுதிப்படுத்தப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த பகுதிக்கு வந்த மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற பதில் நீதிபதி தியாகேஸ்வரன் சடலம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்ததுடன், சடலத்தினை பிரேத பரிசோதனைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்ல பணிப்புரை விடுத்தார்.மேலும், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி மற்றும் வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி த.தவக்குமார் ஆகியோரும் விசாரணைகளை முன்னெடுத்தனர்.
சடலத்தினை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசென்று பிரேத பரிசோதனை முன்னெடுத்து அதன் அறிக்கையினை நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறும் காப்பாற்றப்பட்ட பெண் தொடர்பிலும் முழுமையான விசாரணைகளை முன்னெடுத்து அறிக்கையினை சமர்ப்பிக்குமாறும் பதில் நீதிவானால் பொலிஸாருக்கு பணிப்புரைகள் விடுக்கப்பட்டுள்ளன.
இதேவேளை இச் சம்பவத்தில் உயிர் தப்பிய தாய் தான் சம்பவதினம் மட்டு போதனா வைத்தியசாலைக்கு சென்று மருந்து எடுத்து கொண்டு ஈட்டு கடையில் 34 ஆயிரம் ரூபாவுக்கு அடைவில் இருந்த தங்க ஆபரணம் ஒன்றை மீட்டெடுத்துக் கொண்டு பஸ்வண்டியில் ஏறி வவுணதீவு கொத்தியாபுலையில் உள்ள தனது வீட்டிற்கு பயணித்து தாண்டியடி பகுதியில் பஸ்வண்டியில் இருந்து இறங்கி வீடு நோக்கிச் சென்றதாகவும் அதன் பின்னர் என்ன நடந்தது என பொலிசாரின் ஆரம்பட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதேவேளை இச் சம்பவத்தினால் பாதிக்கப்பட்ட அவர் பெரும் அதிர்சியடைந்து பயந்த நிலையில் இருப்பதால் அவரிடம் தொடர்ந்து தற்போது விசாரணை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
இதேவேளை குறித்த இளம் தாய் கடத்தப்பட்டாரா? கொள்ளையர்கள் வாகனத்தில் கடத்திச் சென்றனரா? தங்க ஆபரணங்கள் கொள்ளையடிக்கப்பட்டதா? என பல கோணங்களில் கொக்கட்டிச்சோலை, வவுணதீவு, பொலிசார், மாவட்ட புலனாய்வு பிரிவினர், விரிவான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் வவுணதீவில் கடத்தப்பட்ட பெண்ணும் வெல்லாவெளி பொலிஸ் பிரிவில் கடத்தப்பட்ட பெண்ணும் கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவில் உள்ள கிணற்றில் போடப்பட்டுள்ளமை தொடர்பில் அப்பகுதி மக்களினால் பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்பட்டுள்ளன.
குறித்த பெண்கள் கடத்தப்பட்டு அவர்களின் தங்க நகைகள் களவாடப்பட்ட பின்னர் கிணற்றில் போடப்பட்டிருக்கலாம் என அப்பகுதி மக்கள் சந்தேகம் வெளியிட்டுள்ள நிலையில், இது தொடர்பான முறையான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டதன் பின்னரே பின்னணி குறித்து வெளியிடமுடியும் என கொக்கட்டிச்சோலை பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் கொக்கட்டிச்சோலைப் பொலிசாரினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
![]()