முச்சந்தி

ஈரான் போரில் நேட்டோவின் முரண் நிலை: மேற்குலக நாடுகளுடன் பகைக்கும் டிரம்ப் !…. ஐங்கரன் விக்கினேஸ்வரா

(ஈரான் மீதான போர் நடவடிக்கைகளில் இருந்து நேட்டோ (NATO) கூட்டமைப்பின் முக்கிய நாடுகள் அடுத்தடுத்து விலகி வருவது, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிற்குப் பாரிய இராஜதந்திரப் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானியாவைத் தொடர்ந்து அமெரிக்காவைக் கைவிட்ட ஜெர்மனி, கிரீஸ் நாடுகளை டிரம்ப் கடுமையாக சாடியுள்ளார். அமெரிக்காவிற்கு உதவாத நேட்டோவிற்கு இருண்ட எதிர்காலம் என டிரம்ப் தெரிவித்துள்ளார்)
ஈரான் மீதான போர் நடவடிக்கைகளில் அமெரிக்கா ஈடுபட்டுள்ள நிலையில், தமக்கு உதவாத நேட்டோ (NATO) கூட்டமைப்பு நாடுகள் மீது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடுமையான அதிருப்தியை வெளியிட்டுள்ளார். குறிப்பாக பிரித்தானியாவையும், ஐரோப்பிய நாடுகளையும் கடுமையாகச் சாடிய டிரம்ப், அமெரிக்க அரசு இந்த நாடுகளின் எதிர்கால பாதுகாப்பு குறித்து கவலைப்படாது என்றும் தெரிவித்துள்ளார்.
ஆனாலும் ஒரு திட்டம் இல்லாத ஈரான் போருக்கு வரமுடியாது எனப் பிரித்தானியப் பிரதமர் உத்தியோகபூர்வமாக அறிவித்திருந்த நிலையில், தற்போது ஜெர்மனி மற்றும் கிரீஸ் ஆகிய நாடுகளும் இந்தப் போரில் இணையப்போவதில்லை எனத் திட்டவட்டமாக அறிவித்துள்ளன.
தற்போதைய ஈரான் மீதான போர் நடவடிக்கைகளில் இருந்து நேட்டோ (NATO) கூட்டமைப்பின் முக்கிய நாடுகள் அடுத்தடுத்து விலகி வருவது, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிற்குப் பாரிய இராஜதந்திரப் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
ஐரோப்பிய நாடுகளின் நிலைப்பாடு:
டிரம்பின் அழுத்தங்களை நிராகரித்து நெத்தியடி கொடுத்த பிரித்தானியப் பிரதமர், மத்திய கிழக்கில் ஈரான் மீதான போர் தீவிரமடைந்துள்ள நிலையில், அந்த யுத்தத்தில் பிரித்தானியா இணையப் போவதில்லை எனப் பிரித்தானியப் பிரதமர் கீர் ஸ்டார்மர் (Keir Starmer) உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.
ஒரு திட்டம் இல்லாத போருக்கு வரமுடியாது என பிரித்தானியா அரசு திட்டவட்டமாகக் கூறியுள்ளதுடன், போரில் இணையுமாறு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விடுத்த அழுத்தங்களை முற்றாக நிராகரித்துள்ளது.
பிரித்தானிய இராணுவத் தளங்களை அமெரிக்கப் போர் விமானங்கள் பயன்படுத்துவதற்குக் கட்டுப்பாடுகளை விதித்ததுடன், மத்திய கிழக்கு நோக்கிப் பிரித்தானியாவின் விமானம் தாங்கிக் கப்பலை அனுப்பவும் மறுப்புத் தெரிவித்துள்ளது. இது குறித்து டிரம்ப் கடும் அதிருப்தி வெளியிட்டிருந்த நிலையில், நான் எனது கொள்கைகளில் உறுதியாக நிற்கின்றேன் என இங்கிலாந்து பிரதமர் தெரிவித்துள்ளார். டிரம்பின் அழுத்தங்களுக்குப் பணியமாட்டேன் எனப் பிரித்தானியப் பிரதமர் தெரிவித்துள்ளமை அவரது கொள்கைகளில் உறுதியாக இருப்பதனை உணர்த்துகிறது.
அதே வேளை சட்டபூர்வமான மற்றும் முறையான திட்டம் இருந்தால் மட்டுமே பிரித்தானியப் படைகள் களமிறக்கப்படும் என அவர் வலியுறுத்தியுள்ளார். முழுமையான கள நிலவரம் தெரியாமலும், போரிலிருந்து வெளியேறும் (Exit Plan) திட்டமும் இல்லாமலும் எமது படைகளை ஆபத்தில் தள்ள முடியாது. அவ்வாறு திட்டமில்லாமல் பிறரைப் பின்பற்றிச் செல்வது தலைமைத்துவம் அல்ல, அது வெறும் பின்தொடர்தல் என டிரம்பிற்கும், தன்னை விமர்சிக்கும் பிரித்தானிய எதிர்க்கட்சிகளுக்கும் அவர் பகிரங்கப் பதிலடி கொடுத்துள்ளார்.
ஜெர்மனி அரசாங்கமும் ஈரானில் நடைபெறும் இந்த யுத்தத்திற்கும் நேட்டோ கூட்டமைப்பிற்கும் எவ்வித சம்பந்தமும் கிடையாது என்று தெரிவித்துள்ளது. ஹார்முஸ் ஜலசந்தியைத் (Strait of Hormuz) திறந்து வைப்பதற்கான எந்தவொரு இராணுவ நடவடிக்கையிலும் ஜெர்மனி பங்கேற்காது எனத் தெரிவித்துள்ளது. இதே நிலைப்பாட்டை எதிரொலித்துள்ள கிரீஸ் அரசாங்கப் பேச்சாளர் பாவ்லோஸ் மரினாகிஸ் (Pavlos Marinakis), ஹார்முஸ் ஜலசந்தியில் நடைபெறும் எவ்வித இராணுவ நடவடிக்கைகளிலும் தமது நாடு ஈடுபடப் போவதில்லை என உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.
இதனால் இந்த போரில் தனித்து விடப்படுகிறாரா டிரம்ப் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.வான்வழித் தாக்குதல்கள் மூலம் மாத்திரம் ஒரு யுத்தத்தை வெல்ல முடியாது எனவும், ஹார்முஸ் ஜலசந்தி போன்ற ஒரு பாரிய கடற்பரப்பைப் பாதுகாக்கப் பல நாடுகளை உள்ளடக்கிய சர்வதேசக் கடற்படைக் கூட்டமைப்பு (Naval Coalition) அவசியம் எனவும் இராணுவ ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
மேலும் டிரம்பின் படைபலம் தோற்றுப்போனதா என்பது குறித்தும் பல ஆய்வாளர்கள் ஆய்வு அவர் உலகின் மிகப்பெரிய மற்றும் அதிநவீன இராணுவப் பலத்தினைக் கொண்டுள்ள அமெரிக்காவால், ஈரானைத் தனித்து நின்று வெல்ல முடியாதா என்ற பாரிய கேள்வி தற்போது சர்வதேச அரசியல் அரங்கில் எழுந்துள்ளது.
எல்லாவற்றிற்கும் மேலாக, அமெரிக்கா தனித்துப் போரிட்டால் அது அத்துமீறிய ஆக்கிரமிப்பாக யகருதப்படும் என்பதால், நேட்டோ நாடுகளை இணைத்து இதனை ஒரு சர்வதேசப் போர் ஆகக் காண்பிப்பதற்கே டிரம்ப் முயற்சிப்பதாக விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.
நேட்டோ உறவில் முறுகல் :
தற்போதைய ஈரான் போரில் நேட்டோ உறுப்பு நாடுகள் பங்கேற்காது என்பது உறுதியாகியுள்ளது. ஆனால் கடந்த ஆண்டு 2025 ஆரம்பத்தில் நேட்டோ நாடுகள் தங்கள் பாதுகாப்பு செலவினங்களை அதிகரிக்க வேண்டும் என்று டிரம்ப் கோரிக்கை விடுத்திருந்தார். அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் உட்பட 32 நாடுகளை உள்ளடக்கிய வடக்கு அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பு (நேட்டோ) டிரம்பின் பொருளாதர வெறுப்புக்குரிய விஷயங்களில் ஒன்றாகியது.
டிரம்ப் அதிபராக இருந்த முதல் பதவிக் காலத்தின் போது, மற்றய நேட்டோ உறுப்பு நாடுகள் ‘தங்களது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) 2 சதவீதத்தை பாதுகாப்புக்காக செலவிட வேண்டும்’ என்ற ஒப்புக் கொள்ளப்பட்ட இலக்கை அடையத் தவறினால், நேட்டோவிலிருந்து அமெரிக்காவை விலக்கிக் கொள்வதாக அவர் அப்போது அச்சுறுத்தினார்.
மேலும் தனது பங்கை செலுத்தாத ஒரு உறுப்பு நாடு தாக்கப்பட்டால், அமெரிக்கா அதை பாதுகாக்காது என்றும் டிரம்ப் கூறியது பலத்த சர்ச்சையை ஐரோப்பிய நாடுகளில் ஏற்படுத்தியதும் அறிந்ததே.
டிரம்பை எதிர்த்த துணை அதிபர்
ஈரான் போர் வேண்டாம் என டிரம்பின் முடிவை ஆரம்பத்திலேயே எதிர்த்த துணை அதிபர் ஜேடி வான்ஸ் (JD Vance) டிரம்புடன் கருத்து வேறுபாடுகள் தற்போது அம்பலமாகி உள்ளன. அமெரிக்காவின் இராணுவம் ஈரான் மீது ‘Operation Epic Fury’ என்ற பெயரில் முன்னெடுத்துள்ள பாரிய போர் நடவடிக்கைகளுக்கு, துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் ஆரம்பத்தில் கடும் எதிர்ப்புத் தெரிவித்திருந்தமை தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
அமெரிக்கக் கடற்படையின் முன்னாள் வீரரான ஜே.டி. வான்ஸ், அமெரிக்கா முதலில் (America First) என்ற கொள்கையைத் தீவிரமாகப் பின்பற்றுபவர். ஈரானுடனான இந்தப் போரினால் அமெரிக்கப் பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்படும் எனவும், தேவையற்ற போர்களில் அமெரிக்க வீரர்களை ஈடுபடுத்தக் கூடாது எனவும் அவர் அதிபர் டிரம்பிடம் நேரடியாகவே வாதிட்டுள்ளார்.
மேலும் போரில் ஈடுபடுவதில் ஜேடி வான்ஸிற்கு ஆரம்பத்தில் விருப்பம் இருக்கவில்லை என்பதைப் பகிரங்கமாக ஒப்புக்கொண்டார். போர் தொடங்கியதன் பின்னர் அரசாங்கத்திற்குள் பிளவு இருப்பதை வெளிக்காட்டக் கூடாது என்பதற்காகவே துணை அதிபர் தற்போது அமைதி காத்து வருவதாக அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
நேட்டோவிற்கு இருண்ட எதிர்காலம் ?
வளைகுடாவில் ஈரான் மீதான போர் நடவடிக்கைகளில் அமெரிக்கா ஈடுபட்டுள்ள நிலையில், தமக்கு உதவாத நேட்டோ (NATO) கூட்டமைப்பு நாடுகள் மீது அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கடுமையான அதிருப்தியை வெளியிட்டுள்ளார்.
தற்போது அமெரிக்கவிற்கு உதவாத நேட்டோவிற்கு இருண்ட எதிர்காலம் எனவும் அவர் கூறியுள்ளார். பிரித்தானியா மற்றும் ஐரோப்பாவைக் கடுமையாகச் சாடிய டிரம்ப் இந்த இராஜதந்திர எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
உக்ரைன் போரில் எவ்வித கட்டாயமுமின்றி நாம் அவர்களுக்கு உதவினோம். ஆனால், தற்போது ஹார்முஸ் ஜலசந்தியைத் திறக்கும் எமது நடவடிக்கைகளுக்கு அவர்கள் உதவாவிட்டால், நேட்டோ பாரியதொரு இருண்ட எதிர்காலத்தைச் சந்திக்க நேரிடும். நான் நீண்டகாலமாகக் கூறிவருவதைப் போல நேட்டோ என்பது ஒரு வழிப்பாதையில் மட்டுமே பயணிக்க வேண்டிய நிலைக்கு வந்துள்ளது. இவ்வாறு டிரம்ப் நேட்டோ மீதான கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.
அமெரிக்காவின் நீண்டகால நண்பன் எனக் கருதப்படும் பிரித்தானியா, போர் ஆரம்பிக்கப்பட்ட வேளையில் உதவ மறுத்துவிட்டு, அமெரிக்கா ஈரானின் அபாயங்களை முற்றாக அழித்த பின்னரே இரண்டு கப்பல்களை அனுப்ப முன்வந்ததாகக் குற்றம் சாட்டியுள்ளார். வெற்றி பெற்ற பின்னர் அல்ல, வெற்றி பெறுவதற்கு முன்னரே எமக்குக் கப்பல்கள் தேவை என அவர் பிரித்தானியாவைக் கடுமையாகச் சாடியுள்ளார்.
அதேவேளை வளைகுடாப் பிராந்தியத்தின் ஹார்முஸ் ஜலசந்தி ஊடான எண்ணெய் விநியோகத்தினால் அமெரிக்காவை விட சீனாவும் ஐரோப்பாவுமே அதிக பயன்பெறுகின்றன. ஆனால் இந்த நாடுகள் அனைத்தும் தங்கள் சுயநலத்திற்காக உள்ளன என்று டிரம்ப் தெரிவித்துள்ளார்.
எனவே, அவர்கள் தான் இப்பகுதியைப் பாதுகாக்கும் பொறுப்பை ஏற்க வேண்டும் என வலியுறுத்தியுள்ள டிரம்ப், இது தொடர்பில் சீன அதிபர் ஜி ஜின்பிங் (Xi Jinping) உடனான தனது சந்திப்பில் கலந்து உரையாட உள்ளதாக தெரிவித்துள்ளார்.
ஈரானுடன் போரில் மேற்குலக நாடுகள் இணைந்து செயல்பட வாய்ப்பு இல்லாத நிலையில், நேட்டோவின் நோக்கம் மற்றும் பணியை ‘அடிப்படையில் இருந்தே மறு மதிப்பீடு செய்வது’ அவசியம் என டிரம்ப் தெரிவித்து உள்ளார். ஆயினும் நேட்டோ கூட்டணியில் இருந்து அமெரிக்காவை விலக்கிக் கொள்ள வாய்ப்பு உள்ளதா என்பது குறித்து கருத்து வேறுபாடுகள் அவரது கட்சிக்கு உள்ளயே நிலவுகிறது.
ஆனால் நேட்டோவில் இருந்து வெளியேறாமல் கூட இந்தக் கூட்டணியை பலவீனப்படுத்த அவருக்கு இன்னும் வழிகள் உள்ளன என்று இராணுவ அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
குறிப்பாக ஐரோப்பாவில் உள்ள அமெரிக்க துருப்புகளின் எண்ணிக்கையைக் குறைப்பதன் மூலம் அதனை அவரால் சாதிக்க முடியும் என்றும் கூறப்படுகிறது.
என்றாலும் தற்போதய சூழ்நிலையில் அமெரிக்க எதிரபார்த்த நேட்டோ நாடுகளின் பங்களிப்பு ஈரான் போரில் கிடைக்காதது டிரம்பின் இராஜதந்திர தோல்வியாகவே கருதப்படுகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *