முச்சந்தி
இஸ்ரேலை அச்சுறுத்தி அதிர வைக்கும் ஈரானின் ட்ரோன் தொழில்நுட்ப வளர்ச்சி… ஐங்கரன் விக்கினேஸ்வரா

உறுதி செய்யாவிடினும், இந்த ஏவுகணை ஆபத்தை உணர்ந்து உள்ளதாக தெரிகிறது)
வளைகுடாவில் ஈரானின் ஏவுகணை தாக்குதல்கள் பாரிய அதிர்வலைகளை உண்டாக்கி இருக்கின்றன. இந்த ஏவுகணை போர் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்து விட்டதை அமெரிக்கா அரசு அச்சமடையும் வண்ணம், கலிபோர்னியாவில் ஈரான் ட்ரோன் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனை அமெரிக்கா அரசு உடனடியாக
உறுதி செய்யாவிடினும், இந்த ஏவுகணை ஆபத்தை உணர்ந்து உள்ளதாக தெரிகிறது.
கலிபோர்னியாவில் ஈரானிய ட்ரோன்?
கலிபோர்னியாவில் ஈரான் ட்ரோன் தாக்குதல் எச்சரிக்கையை வெள்ளை மாளிகை அதிகாரிகள் மறுத்துள்ளனர். வளைகுடாவில் ஈரானுடனான போரில் அமெரிக்கா மிகவும் மூர்க்கமாக தாக்குதலை நடத்தி வரும் நிலையில், கலிபோர்னியாவை குறிவைத்து ஈரானிய ட்ரோன் சதித்திட்டம் தீட்டப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்ட்டது.

இதனை முதலில் அமெரிக்க உளவு நிறுவன FBI செய்தி வெளியிட்டில் எச்சரிக்கையை வெளியிட்டது. இதனை தொடர்ந்து அமெரிக்க உளவு அமைப்பு இதனை போலியான தகவல் என அறிவித்துள்ளது. தற்போது வளைகுடாவில் ஈரானின் ஏவுகணைப்பலம் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்து விட்டதை அமெரிக்கா உறுதி செய்துள்ளது. இந்த போர் தொடங்கியதிலிருந்து முதல் முறையாக செஜ்ஜில் (Sejjil missile) ஏவுகணையை ஈரான் ஏவியுள்ளது, இதை கண்டறிவதும் இடைமறிப்பதும் மிகவும் கடினமானது என்றும் கூறப்படுகிறது.
இப்பொழுது ஏவப்படும் ஏவுகணைகளையே சமாளிக்க முடியாமல் இருக்கும் பொழுது இதை எப்படி இஸ்ரேல் சமாளிக்க போகின்றது? அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தப்பு கணக்கு மிகப்பெரிய அழிவுகளை ஏற்படுத்தப் போகின்றது என்று இராணுவ ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள்.
ஈரானின் செஜ்ஜில் ஏவுகணை முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்பட்டதாகும். நீண்ட தூரம் சென்று தாக்கக் கூடிய செஜ்ஜில் திட எரிபொருள் நிரப்பப்பட்ட ஏவுகணை ஆகும். திட எரிபொருள் நிரப்பப்பட்ட செஜ்ஜில் ஏவுகணைகளை நடமாடும் ஏவுதளத்தில் இருந்தே ஏவ முடியும். ஈரானின் செஜ்ஜில் ஏவுகணை 23 டன் எடையும் 60 அடி உயரமும் கொண்டதாகும்.
செஜ்ஜில் என்பது இரண்டு கட்ட நடுத்தர தூர பாலிஸ்டிக் ஏவுகணையாகும், இது சுமார் 2,000 முதல் 2,500 கிலோமீட்டர் வரை மதிப்பிடப்பட்ட வரம்பைக் கொண்டுள்ளது, இது ஈரானிய பிரதேசத்திலிருந்து மத்திய கிழக்கின் பெரும்பகுதி முழுவதும் உள்ள இலக்குகளை அடைய அனுமதிக்கிறது.
வளைகுடாவில் உள்ள அமெரிக்க படைத் தளங்கள் மற்றும் இஸ்ரேல் மீது செஜ்ஜில் ஏவுகணைகளை வீசி ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது. நடனமாடும் ஏவுகணை என வர்ணிக்கப்படும் செஜ்ஜில்,எதிரியின் ஏவுகணை தடுப்பு கேடயங்களையும் தாண்டி தாக்க கூடியது. ஏவுகணை எதிர்ப்பு குண்டுகள் வந்தால் அதனை எதிர்கொண்டு பாதையை மாற்றிச் சென்று செஜ்ஜில் தாக்கக் கூடியது. செஜ்ஜில் ஏவுகணை தனது பாதையை விரும்பியபடி மாற்றிக் கொண்டே செல்வதால் அவற்றை தடுத்து அழிப்பது எளிதல்ல என்றும் தெரிவிக்கப்படுகிறது.

அவசியமற்ற போரில் அமெரிக்கா
இந்த ஆண்டின் அவசியம் அற்ற ஓர் இராணுவ நடவடிக்கை ஒன்றைச் சொல்ல வேண்டுமானால், அது அமெரிக்கா ஈரான் மீதான ஆதிக்க – ஆக்கிரமிப்பு செலுத்தும் தாக்குதலாகும். அது மாத்திரமன்றி ஈரானுக்கு அருகில் பல போர்க் கப்பல்களை கொண்டு வந்து நிறுத்தி வளைகுடா பிராந்தியத்தையே பயப்பீதியில் அமெரிக்கா வைத்திருந்தது.
ஆழம் அறியாமல் காலை விட்டது போல அமெரிக்க அரசு இஸ்ரேலை நம்பி இந்த அநாவசிய போருக்கு ஒப்புக் கொண்டது. தற்போது உலக எண்ணெய் சந்தையில் பாரிய தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளமைக்கு இந்த போரே காரணம் என்பது தெளிவாகிறது. இந்த அமெரிக்காவின் போர் தற்கொலை முயற்சிக்கு ஒப்பானது என்று சொன்னால் அது மிகையாகாது.
இதற்கு மிக முக்கியமான காரணம் தான். ஈரானின் அசுரத்தனமான ட்ரோன் (Drone) தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக தற்போதய போரில் ஈரானின் பலம் அதிகரித்துள்ளது. ஈரானிய ட்ரோன் தொழில்நுட்பத்தின் ஆழம் தெரியாமல் அமெரிக்கா காலை விட்டு படுகுழியை பார்க்க முற்பட்டுள்ளது என்றுங்கூட கூறலாம்.
2011 சம்பவமே ஈரானின் இன்றைய ட்ரோன் பலத்திற்கு அடித்தளமிட்டது. அமெரிக்காவின் அவமானம் மிக்க ஒரு மிகப்பெரிய சறுக்கல் தான் இந்த சம்பவம். அமெரிக்காவின் அதிநவீன உளவு ட்ரோனான Lockheed Martin RQ-170 Sentinel, ஈரானிய எல்லைக்குள் நுழைந்தபோது, ஈரானிய தொழில்நுட்ப வல்லுநர்கள் அதன் கட்டுப்பாட்டு அமைப்பிற்குள் ஊடுருவி (Electronic hijacking), அதை எவ்வித சேதமுமின்றி பத்திரமாக தரையிறக்கினர்.
அதிநவீன ட்ரோன் ஆய்வு
உலகமே வியக்கும் வண்ணம், அந்த அதிநவீன ட்ரோனை முழுமையாக ஆய்வு செய்து (Reverse-engineering), அதன் நகலாக Shahed 171 Simorgh என்ற புதிய வகை ட்ரோனை ஈரான் உருவாக்கியது. அமெரிக்காவின் ரகசிய தொழில்நுட்பத்தையே அமெரிக்காவிற்கு எதிராகத் திருப்பும் வித்தையை அன்று ஈரான் உலகிற்கு நிரூபித்தது.

ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான ட்ரோன்கள் ஒரு தேனீக் கூட்டம் போல பாய்ந்து வரும்போது, உலகின் எவ்வளவு பெரிய பாதுகாப்பு அமைப்பாக இருந்தாலும் நிலைகுலைந்து போகும். அமெரிக்காவின் ஏவுகணை தடுப்பு அமைப்புகள் (Missile Defense Systems) மிக வலிமையானவை என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால், ஈரானின் மலிவான மற்றும் அதிவேக ட்ரோன்கள் ஆயிரக்கணக்கில் ஒரே நேரத்தில் தாக்கும்போது, அமெரிக்காவின் ரேடார் மற்றும் பாதுகாப்பு அமைப்புகளால் அவை அனைத்தையும் இடைமறிக்க முடியாது என்ற நிலையே ஏற்பட வாய்ப்புள்ளது.
ஈரானின் ட்ரோன்கள் வெறும் உளவு பார்ப்பதோடு நின்றுவிடாமல், வெடிமருந்துகளைச் சுமந்து கொண்டு தற்கொலைப்படைத் தாக்குதல் (Kamikaze Drones) நடத்துவதில் வல்லமை பெற்றவை. அமெரிக்கா ஒரு ட்ரோனைச் சுட்டு வீழ்த்த பயன்படுத்தும் ஏவுகணையின் விலை பல மில்லியன் டாலர்கள். ஆனால், ஈரானின் ஒரு ட்ரோனின் விலை மிகக் குறைவு.$20,000 டாலர்கள் மட்டுமே செலவாகும் என்று கூறப்படுகிறது.
மேலும் ரேடார்களில் சிக்காமல் பறக்கும் (Stealth) தொழில்நுட்பத்தில் ஈரான் இன்று உக்ரைனுடன் போரிட ரஷ்யாவிற்கே ட்ரோன்களை வழங்கும் அளவிற்கு வளர்ந்துள்ளது. உக்ரேனிய நாட்டில் பல்லாயிரம் ஈரான் ட்ரோன்கள் போரில் பயன்படுத்தப்படுகின்றன.
எதிரியை பலவீனப்படுத்தும் உத்தி
இஸ்ரேலிய இலக்குகள் மற்றும் பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது தொடர்ந்து ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை ஈரான் ஏவுகிறது. இந்தத் தாக்குதல்களில் பல ராணுவ, பொருளாதார இலக்குகள் தொடர்ந்து குறிவைக்கப்படுகின்றன.
முதலாவதாக, அவை அமெரிக்காவையும் இஸ்ரேலையும் தங்கள் வான் பாதுகாப்பு அமைப்புகளைப் பயன்படுத்தி உள்ளே நுழையும் ஏவுகணைகளைத் தடுக்க கட்டாயப்படுத்துகின்றன. எம்.ஐ.எம்-104 பேட்ரியாட், தாட் போன்ற அமைப்புகள் மிகவும் மேம்பட்டவை. ஆனால், அவை மிகவும் விலை உயர்ந்தவை மற்றும் எண்ணிக்கையில் குறைவாகவே உள்ளன.

பெரும்பாலும், தாக்குதலை நிறுத்தப் பயன்படுத்தப்படும் ஏவுகணைகள், அவை அழிக்கும் ட்ரோன்கள் அல்லது ஏவுகணைகளை விட அதிக விலை கொண்டவை. இரண்டாவதாக, தொடர்ச்சியான தாக்குதல்கள் எதிரியின் ஆயுத விநியோகம், போக்குவரத்து அமைப்புகள், ராணுவ தயார்நிலையில் அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடும். மோதலின் முதல் வாரத்துக்குள் அமெரிக்க படைகள் ஏற்கெனவே அதிக எண்ணிக்கையிலான துல்லியமான ஆயுதங்கள் மற்றும் பாதுகாப்பு ஏவுகணைகளைப் பயன்படுத்தி வருவதாக தி வாஷிங்டன் போஸ்டின் செய்தி கூறுகிறது.
ட்ரோன் தொழில்நுட்ப அசுர வளர்ச்சி
பாரசீக வளைகுடா (Persian Gulf) என்பது புவியியல் ரீதியாக மிகவும் குறுகலான ஒரு பகுதி. அமெரிக்கா தனது பலத்தைக் காட்ட விரும்பி, தனது படைகளை ஈரானின் ஏவுகணைகளுக்கும் ட்ரோன்களுக்கும் மிக எளிய இலக்காக மாற்றிவிட்டது. ஈரானின் வீட்டு வாசலுக்கே வந்து, அவர்களின் பலமான ட்ரோன் தாக்குதல் எல்லைக்குள் படைகளை நிறுத்தியது அமெரிக்காவின் இந்த நூற்றாண்டின் ராஜதந்திரமற்ற செயலாகும் என்று கூறப்படுகிறது.
ட்ரோன் தொழில்நுட்பத்தில் ஈரான் அடைந்திருக்கும் அசுர வளர்ச்சியை உணராமல் எடுக்கப்பட்ட இந்த முடிவு, எதிர்காலத்தில் அமெரிக்காவிற்கு ஒரு கசப்பான பாடத்தை புகட்டப்போவது உறுதி.
ஈரான் போர் வியூகம்
ஆக்கிரமிப்புக்கு ஈரானின் பதிலடி, ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவால் கட்டுப்படுத்தப்படவில்லை எனவும், மோதல் பல மாதங்கள் அல்லது அதற்கு மேலும் தொடரக்கூடும் என்றும் ஈரான் அதிகாரிகள் கூறுகின்றனர்.
அமெரிக்காவை போலன்றி, ஈரான் ஒரு நீண்ட போருக்குத் தன்னைத் தயார் படுத்திக்கொண்டுள்ளமை தெரிகிறது. அத்துடன் யுத்த நிறுத்த பேச்சுவார்த்தைகளுக்கான வாய்ப்பையும் ஈரான் நிராகரித்துள்ளது.
இது அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் வழக்கமான ராணுவ மேலாதிக்கத்தை எதிர்கொள்ள உருவாக்கப்பட்ட ஈரானின் நீண்டகால போர் கோட்பாட்டைப் பிரதிபலிப்பதாக இராணுவ ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஈரானுக்குள்ளும் உலகளவிலும் இந்த மோதலின் விளைவாக ஏற்படும் பொருளாதார விளைவுகள், போர் எவ்வளவு காலம் நீடிக்க முடியும் என்பதைத் தீர்மானிப்பதில் ஒரு தீர்க்கமான முடிவை எவராலும் எடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
ஈரான் அதிகாரிகள் நீண்டகால மோதலுக்குத் தயாராக இருப்பதாகத் தொடர்ந்து கூறி வருகின்றனர். ஈரான் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை பயன்படுத்தி அமெரிக்க, இஸ்ரேலிய பாதுகாப்பு அமைப்புகளைப் பலவீனப்படுத்துவதாகவும் பிராந்தியத்தில் அவர்களின் நிதி மற்றும் தளவாடச் செலவுகளை அதிகரிப்பதாகவும் தெரிகிறது.
நீண்ட காலம் ஆயுத விநியோகம்
ஈரான் அதிகாரிகள் தங்கள் ஆயுத விநியோகம் நீண்ட காலம் நீடிக்கும் என்கிறார்கள். தற்போதைய சூழ்நிலையில் குறைந்தது ஆறு மாதங்களுக்குத் தங்கள் ராணுவம் அதிக தீவிரம் கொண்ட போரைத் தொடர முடியும் என்று அவர்கள் கூறுகின்றனர். ஈரான் தளபதிகள் தங்கள் ஏவுகணைகள் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டுப் பல உற்பத்தித் தளங்களில் அதிக எண்ணிக்கையில் சேமித்து வைக்கப்பட்டு இருப்பதாகக் கூறுகிறார்கள்.

இதன் காரணமாக, ஈரான் காலப்போக்கில் அதன் தாக்குதல்களைப் பரவலாக்கி வருவதாகத் தெரிகிறது. இது அதன் எதிரிகளை ஒரேயொரு பெரிய தாக்குதலை எதிர்கொள்வதற்குப் பதிலாகத் தொடர்ந்து தங்களைத் தற்காத்துக் கொள்வதற்கு கட்டாயப்படுத்துகிறது.
இந்த உத்தி, ஈரான் பல ஆண்டுகளாக உருவாக்கி வரும் ராணுவ அணுகுமுறையின் ஒரு பகுதியாகும். ஈரான் – ஈராக் இடையிலான போருக்குப் பிறகு, ஈரான் சமச்சீரற்ற போருக்கு தயாராகும் வகையில் அதிகளவில் முதலீடு செய்தது. இந்த வகையான போர், பாரம்பரிய வழியில் போராடாமல் வலுவான ராணுவங்களுக்கு சவால் விடக்கூடிய முறைகளில் கவனம் செலுத்துகிறது.
ஒரு வலுவான எதிரியை நேரடியாகத் தோற்கடிப்பது அவர்களின் இலக்கு அல்ல. மாறாக, போரை நீண்டதாகவும், செலவுமிக்கதாகவும், கடினமானதாகவும் அவர்களுக்கு மாற்றுவதே ஆகும் என்று ஈரான் இராணுவ அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
![]()