முச்சந்தி

அரசைக் கவிழ்க்க எதிரணி முயற்சி; பிரதமர் ஹரிணி சாடல் 

நாட்டுக்கு என்ன நடந்தாலும் பிரச்சினையில்லை எந்த வழியிலாவது அரசாங்கத்தை கவிழ்க்க முடியுமா என்றே எதிர்க்கட்சியினர் சிந்திக்கின்றனர் என்றும் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை மத்திய கிழக்கின் போரினால் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமை தொடர்பிலான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது பிரதமர் மேலும் தெரிவிக்கையில்,

நாங்கள் எரிபொருள் விநியோகத்தை முறையாக முன்னெடுக்க வேலைத்திட்டங்களை முன்னெடுக்கின்றோம். எரிபொருள் விநியோகத்தில் ஏற்படக்கூடிய பிரச்சினைகளை தடுக்கவே கியூஆர் முறைமையை அறிமுகப்படுத்தியுள்ளோம். இது தொடர்பான பிரச்சினைகளை தீர்த்து வருகின்றோம். பொருளாதார ஸ்திரத் தன்மையை ஏற்படுத்தவும், அத்தியாவசிய சேவைகளை முறையாக முன்னெடுக்கவும் நடவடிக்கை எடுத்துவருகின்றோம். தற்போதைய நிலைமையில் பொருளாதாரத்திற்கு ஏதேனும் பாதிப்புகள் ஏற்படலாம். வருமான வழிகளுக்கு பிரச்சினைகள் ஏற்படலாம். இது தொடர்பில் நடவடிக்கை எடுக்க குழுக்களை அமைத்து வருகின்றோம்.

தற்போதைய நிலைமையை எதிர்க்கட்சியினர் புரிந்துகொள்ள வேண்டும். ஆனால் இருக்கும் அரசாங்கத்தை எப்படியாவது கவிழ்த்து மக்களுக்கு என்ன நடந்தாலும் பிரச்சினையில்லை ஆட்சியை பிடிக்க வேண்டும் என்றே எதிர்க்கட்சியினர் சிந்திக்கின்றனர். அவர்களிடம் இந்த நாட்டை கட்டியெழுப்ப வேண்டும் என்ற எண்ணம் இருக்கின்றதா? அதற்கான வேலைத்திட்டங்கள் இருக்கின்றனவா? யார் இந்த நாட்டை சீரழித்தார்களோ அவர்களே இப்போது மீண்டும் செயற்படுகின்னர். அவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளில் இருந்து தப்பிப்பதற்காக அவர்கள் எதனையாவது செய்வதற்கு முயற்சிக்கின்றனர். இது மிகவும் கவலைக்குரிய விடயமே என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *