2016 ஆம் ஆண்டு ஏர்பஸ் ஊழல்; மகிந்தவுக்கு 60 மில். ரூபா வழங்கப்பட்டதாக சாட்சியம்

2016ஆம் ஆண்டு இடம்பெற்ற சர்ச்சைக்குரிய ஏர்பஸ் (Airbus) கொடுக்கல் வாங்கலில் கையூட்டாகப் பெறப்பட்ட 60 மில்லியன் ரூபா, அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் ஒப்படைக்கப்பட்டதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி கபில சந்திரசேன தெரிவித்துள்ளதாக லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு நேற்று வியாழக்கிழமை கொழும்பு நீதவான் நீதிமன்றில் தெரிவித்தது.
நீதிமன்றத்தில் லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு கூறுகையில் :
சந்தேக நபரான கபில சந்திரசேன வழங்கிய வாக்குமூலத்தின்படி, தமக்குக் கிடைத்த 60 மில்லியன் ரூபா பணம் மூன்று தவணைகளாக முன்னாள் நிறைவேற்று அதிகாரி மஹிந்த ராஜபக்ஷவிடம் வழங்கப்பட்டுள்ளது. அத்துடன், மேலும் 20 மில்லியன் ரூபா முன்னாள் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிரியங்கர ஜயரத்னவிடம் வழங்கப்பட்டுள்ளது.
சந்திரசேனவின் மனைவியின் பெயரில் புரூணையில் ஒரு போலி நிறுவனம் (Shell Company) ஆரம்பிக்கப்பட்டு, சிங்கப்பூரில் உள்ள வங்கியில் அதன் கணக்கு பராமரிக்கப்பட்டுள்ளது. இந்த ஏற்பாட்டின் மூலம், ஐரோப்பிய ஏரோநோட்டிக் டிஃபென்ஸ் அண்ட் ஸ்பேஸ் (EADS) நிறுவனத்திடமிருந்து 1,454,645.54 யூரோக்கள் லஞ்சமாகப் பெறப்பட்டதாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிதி அவுஸ்திரேலியாவின் கொமன்வெல்த் வங்கியில் உள்ள சந்தேக நபரின் கணக்கிற்கு மாற்றப்பட்டதும், பின்னர் அந்த லஞ்சப் பணத்தின் ஒரு பகுதி ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் பணிப்பாளர் ஒருவருக்கும் மற்றும் பல உயர் அரசாங்க அதிகாரிகளுக்கும் விநியோகிக்கப்பட்டதும் விசாரணையில் தெரியவந்துள்ளதாகவும் தெரிவித்தது.
இந்தக் குற்றச்சாட்டுகளின் கீழ் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 2ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் அசங்க எஸ். போதரகம உத்தரவிட்டார்.
![]()