வடக்கு சிங்கள மக்களின் உரிமை; யாழில் பௌத்த பிக்குகள், சிங்களவர்கள் ஊர்வலம்

வடக்கு மாகாணத்தில் வாழும் சிங்கள மக்களின் உரிமைகள் மற்றும் அவர்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்புகள் குறித்து அதிகாரிகளின் கவனத்தை ஈர்க்கும் நோக்கில், யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு வரை “சிங்ஹிந்தியா” எனும் பெயரில் சமாதான நடைபயணம் மற்றும் வாகன ஊர்வலம் நடைபெற்றது.
யாழ்ப்பாணம் ஆரிய குளம் நாக விகாரையில் நேற்று காலை ஆரம்பமான பேரணி ஊர்வலமாக நகர்ந்து, வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தை சென்றடைந்து ஆளுநரிடம் மகஜரொன்று கையளிக்கப்பட்டது.
பௌத்த கொடிகள் மற்றும் தேசிய கொடிகள் தாங்கியவாறு பௌத்த பிக்குகள், சிங்கள பௌத்த மக்கள் என கணிசமானோர் தனி சிங்கள மொழியிலான பதாகைகளை தாங்கியவாறு பேரணியில் பங்கேற்றனர்.
பேரணியில் பங்கேற்றவர்கள் கருத்து தெரிவிக்கும் போது,
கடந்த 78 ஆண்டுகளாக பல்வேறு அரசுகள் நாட்டில் ஆட்சி செய்தபோதிலும், வடக்கில் வாழும் சிங்கள மக்களின் அடிப்படை பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை. மற்ற இனங்களின் பிரச்சினைகள் அரசியல் வழிகளில் முன்வைக்கப்பட்டாலும், வடக்கு சிங்கள மக்களின் உரிமைகள் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டுள்ளன.
30 ஆண்டுகள் நீண்ட உள்நாட்டுப் போருக்கு முன்பும், அதன் போதும், பின்னரும் அவர்கள் பல்வேறு இழப்புகளையும் அநீதிகளையும் சந்தித்துள்ளனர். இதுவரை எந்த அரசும் அவர்களுக்கு நிலையான தீர்வுகளை வழங்கவில்லை.
இந்த பிரச்சினைகள் குறித்து பேசப்படும் ஒவ்வொரு முறையும், அவை இனவாதமாகக் குற்றம் சாட்டப்பட்டு, தேசிய ஒற்றுமைக்கு எதிரானதாகக் கூறி ஒதுக்கப்படுகின்றன.
நில எல்லை பிரச்சினைகள், மீள்குடியேற்ற சிக்கல்கள்,சிங்கள புத்த மத பாரம்பரிய இடங்களின் பாதுகாப்பு,
சிங்கள மொழியில் கல்வி பெறுவதில் சிரமம்,சிங்கள பாடசாலைகளில் ஆசிரியர் பற்றாக்குறை, அரசு அலுவலகங்களில் சிங்கள பணியாளர்கள் இல்லாமை, மதஸ்தல பராமரிப்பு சிக்கல்கள்,
கிராமங்களில் அடிப்படை வசதிகள் குறைவு உள்ளிட்ட பல பிரச்சனைகளை சிங்கள மக்கள் எதிர்கொள்வதாக போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.
![]()