உலகம்

இஸ்ரேலின் படுகொலைகளுக்கு பதிலடி வழங்க ஈரான் உறுதி: டெல் அவிவ் மீது குண்டு மழை

ஈரான் பாதுகாப்புத் துறை தலைவர் அலி லரிஜானி மற்றும் மற்றொரு முக்கிய அதிகாரி ஒருவர் படுகொலை செய்யப்பட்டதற்கு எதிராக இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா மீது பழிதீர்ப்பதாக எச்சரித்த ஈரான், பதிலடியாக இஸ்ரேல் மீது கடுமையான ஏவுகணை தாக்குதல்களை நடத்தியுள்ளது.

ஈரான் இஸ்லாமிய குடியரசு தொடர்பில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு புரிதல் இல்லை என்றும் அது வலுவான அரசியல் அமைப்பை கொண்டிருப்பதால் எந்த ஒரு தனி நபரிலும் தங்கியில்லை என்றும் ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி தெரிவித்துள்ளார்.

மூத்த அதிகாரிகளின் மரணங்கள் அரசுக்கு இடையூறை ஏற்படுத்தாது என்றும் அரசு தொடர்ச்சியாக இயங்கும் என்றும் அரக்சி, அல் ஜசீரா செய்தி நிறுவனத்திற்கு நேற்று (18) தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் கொத்து குண்டுகளைச் சுமந்த ஈரானிய ஏவுகணைகள் இஸ்ரேலின் டெல் அவிவ் நகரை கடுமையாகத் தாக்கியுள்ளது. லரிஜானியின் படுகொலைக்கான பதில் தாக்குதல் என்று இதனை ஈரான் அரச தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.

ஈரான் புராட்சிக் காவல் படையின் பேச்சாளர் ஒருவர் அந்நாட்டு அரச ஊடகத்தில் விடுத்த அறிவிப்பில், பல குண்டுகளைச் சுமக்கக் கூடிய கொர்ராம்ஷஹர் 4 மற்றும் கத்திர் ஏவுகணைகள் உட்பட ஆயுதங்களைப் பயன்படுத்தி தாக்குதல் நடத்தியதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதல்களில் டெல் அவிவ் நகரின் சனநெரிசல் மிக்க பகுதியில் இருவர் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் நிர்வாகம் தெரிவித்தது. இங்கு முக்கிய இராணுவ நிலைகளும் உள்ளது. இதன்மூலம் இந்தப் போரில் இஸ்ரேலில் கொல்லப்பட்டவர்கள் எண்ணிக்ைக 14 ஆக அதிகரித்துள்ளது.

ஈரான் தொடர்ச்சியாக கொத்து குண்டுகளை பயன்படுத்துவதாக இஸ்ரேல் குறிப்பிட்டுள்ளது. இவ்வாறான குண்டுகள் நடுவானில் சிறு குண்டுகளாக பரவிச் செல்வதால் அவற்றை இடைமறிப்பது கடினம் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த செவ்வாய்க்கிழமை இரவு டெல் அவிவில் இடம்பெற்ற இந்த குண்டு மழையால் பலருக்கும் காயம் ஏற்பட்டிருப்பதோடு டெல் அவிவ் ரயில் நிலையம் உட்பட கடுமையான பொருட் சேதங்களுக்கும் காரணமாகி இருப்பதாக இஸ்ரேலிய ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

இஸ்ரேலின் வான் தாக்குதலில் கடந்த செவ்வாயன்று படுகொலை செய்யப்பட்ட லரிஜானி மற்றும் பஸ்ஜி துணைப்படை தளபதியின் இறுதிக் கிரியை நேற்று இடம்பெற்றது.

மீண்டும் ‘பங்கர் பஸ்டர்’

இந்நிலையில் ஈரான் மீதான அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் வான் தாக்குதல்கள் நேற்றும் இடம்பெற்றதோடு நாட்டின் பல இடங்களிலும் உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. தெற்கு ஈரானின் லரஸ்தானில் உள்ள நீதித் துறை வளாகத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் ஒன்றில் பொதுக்கள் கொல்லப்பட்டு பலரும் காயமடைந்திருப்பதாக அந்நாட்டு நீதித் துறையில் மீசான் செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

மேற்கு ஈரானில் மேலும் பல இடங்களில் தாக்குதல்கள் இடம்பெற்றிருப்பதோடு டொரும் நகரின் சனநெரிசல் மிக்க பகுதி ஒன்றில் இடம்பெற்ற தாக்குதலில் ஏழு பேர் கொல்லப்பட்டு 56 பேர் வரை காயமடைந்துள்ளனர். செகேனி பிராந்தியத்தின் தொலைதூரப் பகுதியில் இடம்பெற்ற மற்றொரு தாக்குதலில் நால்வர் கொல்லப்பட்டதாக டஸ்னிம் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதனிடையே ஈரானின் உளவுத் துறை அமைச்சர் இஸ்மைல் காதிப்பை படுகொலை செய்ததாக இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ராயேல் காட்ஸ் நேற்று அறிவித்தார். ஈரான் தரப்பில் இது தொடர்பில் உடன் எந்த பதிலும் அளிக்கப்படவில்லை. இஸ்ரேலின் இந்த அறிவிப்பு உறுதி செய்யப்படும் பட்சத்தில் கடந்த இரண்டு நாட்களுக்கு ஈரானின் மூன்றாவது முக்கிய தலைவரின் படுகொலையாக இது அமையும்.

இஸ்ரேலின் மொசாட் உளவுப் பிரிவுடன் தொடர்ப்பட்டவர்களை சுற்றிவளைக்கும் நடவடிக்கையை ஈரான் தீவிரப்படுத்தி இருப்பதோடு இவ்வாறு கூட்டுச் சேர்ந்ததாக குற்றம்சாட்டப்படும் ஒருவர் மீது மரண தண்டனை நிறைவேற்றியதாக ஈரான் நிர்வாகம் கூறியது.

ஈரான் ஏவுகணை தளம் மீது ‘பங்கர் பஸ்டர்’ குண்டுகளை வீசி அமெரிக்கப் படைகள் தாக்குதல் நடத்தியுள்ளது. சர்வதேச கப்பல் போக்குவரத்திற்கு அச்சுறுத்தலாக இருந்ததால், இந்தத் தாக்குதல்களை நடத்தியதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

சர்வதேச எண்ணெய் விநியோகத்தில் சுமார் 20 வீத பங்கு வகிக்கும் ஹோர்முஸ் நீரணையை ஈரான் முடக்கி இருக்கும் நிலையில் அதனை திறப்பதற்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், நேட்டோ கூட்டணி மற்றும் உலக நாடுகளிடம் உதவி கோரி இருந்தார்.

இந்நிலையில், ஹோர்முஸ் நீரிணைக்கு அருகே அமைந்துள்ள ஈரானின் ஏவுகணைத் தளங்கள் 2,200 கிலோ எடையுள்ள ‘பங்கர் பஸ்டர்’ குண்டுகளை வீசி ஈரானின் கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகளை தகர்த்ததாக அமெரிக்க இராணுவ மத்திய கட்டளையகம் குறிப்பிட்டுள்ளது.

பங்கர் பஸ்டர் குண்டுகள் பூமிக்கடியில் 20.7 அடி ஆழம் முதல் 200 அடி ஆழம் வரை துளைத்துச் சென்ற பின்னரே வெடிக்கும். ஈரானுக்கு எதிராக இவ்வாறான குண்டு ஒன்றை அமெரிக்கா வீசி இருப்பது இது இரண்டாவது முறையாகும். கடந்த ஆண்டு ஜூனில் இஸ்ரேல் – ஈரான் இடையே நீடித்த 12 நாள் போரின்போதும் அமெரிக்கா ஈரான் அணு நிலை மீது இந்த பங்கர் பஸ்டர் குண்டை வீசியது.

கடந்த பெப்ரவரி 28 ஆம் திகதி ஈரான் உயர்மட்டத் தலைவரின் படுகொலையுடன் வெடித்த இந்தப் போரில் ஈரான் பிராந்திய நாடுகள் மீது தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகிறது. சவூதி அரேபியா, பஹ்ரைன், ஐக்கிய அரபு இராச்சியம், கட்டாரில் நேற்றும் ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா விமானங்கள் இடைமறிக்கப்பட்டன. இந்நிலையில் சவூதி அரேபியா அரபு மற்றும் முஸ்லிம் நாடுகளின் அவசரக் கூட்டம் ஒன்றை நேற்று நடத்தியமை குறிப்பிடத்தக்கது.

லெபனானில் 1,000 ஐ நெருங்கும் பலி

லெபனானிலும் தாக்குதல்களை தீவிரப்படுத்தி இருக்கும் இஸரேல் தலைநகர் பெய்ரூட்டின் மையப்பகுதியில் இருக்கும் கட்டடம் ஒன்றை தாக்கியதாக லெபனான் தேசிய செய்தி நிறுவனம் குறிப்பிட்டது. இந்தத் தாக்குதலில் குறைந்தது ஆறு பேர் கொல்லப்பட்டதாக அந்நாட்டு சுகாதார அமைச்சு கூறியது.

லெபனான் தலைநகர் தொடக்கம் நாட்டின் கிழக்கு மற்றும் தெற்கு பகுதி வரை பரவிய இஸ்ரேலின் தாக்குதல்களில் நேற்று 20இற்கு அதிகமானவர்கள் கொல்லப்பட்டதாக சுகாதார அமைச்சு கூறியது. இதில் பெய்ரூட்டில் இருக்கும் 15 மாடி கட்டடமே நேற்று தாக்குதலுக்கு இலக்கானது. இதனால் அந்தக் கட்டடம் முற்றாக தரைமட்டமாக்கப்பட்டுள்ளது. இங்கு ஹிஸ்புல்லா அமைப்பு பணத்தை பதுக்கி வைத்திருப்பதாக இஸ்ரேல் இராணுவம் கூறியது.

ஹிஸ்புல்லா அமைப்புடன் தொடர்புபட்ட அல் மனார் தொலைக்காட்சியின் அரசியல் நிகழ்ச்சிப் பிரிவின் பணிப்பாளர் மற்றும் அவரது மனைவியும் மத்திய பெய்ரூட்டில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டதாக அது தெரித்தது.

தெற்கு லெபனானில் மட்டுப்படுத்தப்பட்ட தரைவழி நடவடிக்கையை மேற்கொண்டு வருவதாக குறிப்பிடும் இஸ்ரேல் இராணுவம் சஹ்ரானி நதி மற்றும் டைரே பகுதிக்கு அருகே இருக்கும் நான்கு சிறு நகரங்களைச் சேர்ந்த குடியிருப்பாளர்களை வெளியேறும்படி உத்தரவிட்டுள்ளது. அவர்களை வடக்கை நோக்கி உடன் வெளியேறும்படி எச்சரிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு லெபனானில் பக்கா பள்ளத்தாக்கில் சஹ்மார் நகரில் உள்ள நான்கு வீடுகளை இலக்கு வைத்து இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் குறைந்தது நால்வர் கொல்லப்பட்டதாக அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.

லெபனானில் இஸ்ரேல் தொடர்ந்து நடத்தும் உக்கிர தாக்குதல்களில் குறைந்தது 912 பேர் கொல்லப்பட்டிருப்பதோடு இவர்களில் 111 சிறுவர்களும் அடங்குவதாக லெபனான் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. மேலும் 2,200 இற்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர். இதனால் இரண்டு மில்லியனுக்கும் அதிகமானவர்கள் தமது வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டிருக்கும் நிலையில் இஸ்ரேல் குடியிருப்புக் கட்டடங்கள் மற்றும் சிவில் உட்கட்டமைப்புகள் மீது நடத்தி வரும் தாக்குதல்கள் சர்வதேச மனிதாபிமான சட்டத்தின் கீழ் போர் குற்றங்களாக அமையக் கூடும் என்று ஐக்கிய நாடுகள் நிறுவனம் எச்சரித்துள்ளது.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *