பயங்கரவாதத் தடைச் சட்டம்; யாழில் 28 ஆம் திகதி கண்டனப் பேரணி

சமூகநலன் சார்ந்த தமிழ்ப் பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் பயங்கரவாதத் தடைச் சட்டம் மற்றும் பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டத்துக்கு எதிராக நாளை மறுதினம் சனிக்கிழமை (28) யாழ்ப்பாணத்தில் மாபெரும் கண்டனப் போராட்டமும் பேரணியும் முன்னெடுக்கப்படவுள்ளதாகப் போராட்ட ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
யாழ். ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த போதே போராட்ட ஏற்பாட்டாளர்கள் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளனர்.
அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கோர முகத்தை நன்கு அறிந்த இனமாக , அதன் பாதிப்புக்களை முற்றுமுழுதாக அனுபவித்த இனமாக நாங்களிருக்கின்றோம். தற்போதைய தேசியமக்கள் சக்தி அரசாங்கமும் குறித்த சட்டமூலத்தால் பாதிப்புற்று எதிர்க்கட்சியிலிருக்கும் போது இந்தச் சட்டத்தை நீக்க வேண்டுமெனப் பல போராட்டங்களை முன்னெடுத்திருந்தது. எனினும், ஆட்சிப் பீடமேறிய பின்னர் வழமையான சிங்களப் பேரினவாத அரசுகள் போன்று தங்கள் ஆட்சியைத் தக்க வைப்பதற்காகச் செயற்பட்டு வருகின்றமையை அனைவரும் நன்கு அவதானிக்கின்றோம்.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இல்லாமலாக்குவோம் என்று ஆட்சிப் பீடமேறியவர்கள் தற்போது அதனைவிடப் பயங்கரமான சரத்துக்களை உள்ளடக்கியதாகப் பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம் என்று முற்றுமுழுதாக மக்களை விடுத்து அரசாங்கத்தைக் காப்பாற்றும் முகமாக மனித உரிமைகளுக்கெதிரான சட்டத்தைக் கொண்டு வருவதற்கு முயற்சிக்கின்றது. இதனைப் பாதிப்பின் உச்சத்திலிருக்கும் தமிழ்மக்களாகிய நாம் பாரிய எதிர்ப்பின் மூலம் தடுத்து நிறுத்த வேண்டும். பெரும்பான்மைப் பலத்துடனிருக்கும் அரசு எவ்வாறாயினும் இதனை நிறைவேற்றியே தீருமென்ற அடிப்படையிருந்தாலும் இதற்குத் தமிழ்மக்களின் முற்றுமுழுதான எதிர்ப்பிருந்தது என்பதை உலகுக்கு நாம் பறைசாற்ற வேண்டும்.
அதன் அடிப்படையில் சனிக்கிழமை முற்பகல்-11.30 மணியளவில் யாழ்ப்பாணம் பொதுநூலகத்துக்கு முன்பாக மாபெரும் கண்டனப் போராட்டம் ஆரம்பமாகிப் பின்னர் பேரணியாக யாழ் சுண்டுக்குளியில் அமைந்துள்ள வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தைச் சென்றடைந்து நிறைவடையும்.
தமிழ்த்தேசியம் சார்ந்து செயற்படும் கட்சிகளின் பிரதிநிதிகள், சிவில் அமைப்புக்கள், பல்கலைக்கழக மாணவர்கள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் என அனைத்துத் தரப்பினரும் குறித்த போராட்டத்தில் கலந்து கொண்டு பூரண ஆதரவை வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.
![]()