இலங்கை

சொந்த ஊர் மக்களின் கடும் எதிர்ப்பில் அர்ச்சுனா எம்.பி; வாய் சவடால் மட்டும் போதுமா?’

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் பராமரிப்பற்ற காணிகளால் தமக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்து, அவரது பிறந்த ஊரான பெரியவிளான் மக்கள் பாரிய எதிர்ப்புப் போராட்டமொன்றை முன்னெடுத்தனர்.

தமக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டிய ஒரு மக்கள் பிரதிநிதியே, தனது சொந்தக் காணியைப் பராமரிக்காமல் பொதுமக்களுக்கு இடையூறு விளைவிப்பதாக அவர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

பெரியவிளான் பகுதியில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினருக்குச் சொந்தமான காணி, பல வருடங்களாகத் துப்பரவு செய்யப்படாமல் பற்றைக் காடாகக் காணப்படுவதாக மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

குறித்த காணிக்குள் விஷப் பாம்புகள் மற்றும் ஜந்துக்கள் பெருகியுள்ளன. இவை அருகில் உள்ள வீடுகள், கடைகள் மற்றும் வீதிகளுக்குள் புகுவதால் மக்கள் பெரும் அச்சமடைந்துள்ளனர்.

இந்தக் காணிக்குள் பாதுகாப்பற்ற பாழடைந்த கிணறு ஒன்றும் காணப்படுவதால் ஆபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

“ஆலயத்திற்கோ அல்லது கடைக்கோ கூட நிம்மதியாகச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. வீதியில் சிறுவர்கள் நடமாடுவது ஆபத்தாக மாறியுள்ளது” என அப்பகுதி மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

மக்களுக்கு முன்மாதிரியாக இருக்கவேண்டிய நாடாளுமன்ற உறுப்பினர், தான் பல நல்ல விடயங்களை செய்வதாக வாயால் மட்டுமே கூறிக்கொண்டு இருப்பவர் தனது காணி குறித்து அக்கறை இல்லாமல் இருப்பது விசனத்தை ஏற்படுத்துகிறது.

காணியை சுத்தம் செய்யா விட்டால், பிரதேச சபையினால் அந்த காணியானது சுத்தம் செய்யப்பட்டு பிரதேச சபைக்கு உரியதாக மாற்றவேண்டிய நிலைமை கூட ஏற்படலாம்.

பெரியவிளானில் காணிகள், வீடுகள் இன்றி பல குடும்பங்கள் வாழ்கின்றன. அவர் ஒரு நல்ல நோக்கம் உள்ளவர் என்றால், தன்னால் பராமரிக்க முடியாத காணிகளை அந்த மக்களுக்கு வழங்கலாமே?

அவர் ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கின்றார். ஆனால் அவர் பிறந்த ஊரான பெரியவிளான் பகுதியில் மிகவும் வறுமைக் கோட்டிற்குட்பட்ட மக்கள் இருக்கின்றனர். புனரமைக்கப்படாத வீதிகள் இருக்கின்றன. செய்யப்பட வேண்டிய அபிவிருத்திகள் பல உள்ளன. அவற்றை எல்லாம் அவரால் செய்ய முடியாது ஆனால் வாயால் வெட்டி பேச்சு பேச முடியும்.

உள்ளூராட்சி சபைத் தேர்தல் மற்றும் மாகாண சபை தேர்தல் ஆகியவற்றுக்கு பரீட்சை வைத்து அதில் சித்தி பெறுபவர்களையே போட்டியிட அனுமதிக்க வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் அருச்சுனா கூறுகிறார். அதை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். அதுபோல நாங்களும் ஒரு கோரிக்கையை முன்வைக்கிறோம்.

அதாவது, இனிமேல் நடைபெறுகின்ற நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் மனநிலை குறித்து பரீட்சித்து, அவர்கள் மனநலம் பாதிக்கப்படாமல் ஆரோக்கியமாக தான் இருக்கின்றார்களா என பரீட்சித்து பின்னரே தேர்தலில் போட்டியிட அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை முன்வைக்கின்றோம். இதை நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அருச்சுனாவும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என தெரிவித்தனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button