இலங்கை

மாகாண சபைத் தேர்தலை மேலும் பிற்போடும் சிலரின் முயற்சிக்கு தடை போட்ட சாணக்கியன்!

மாகாணசபைத் தேர்தல் தொடர்பில் பாராளுமன்ற தெரிவுக்குழு ஒன்றை நியமிக்க யோசனை நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் அதே விடயங்கள் குறித்து ஆராய்வதற்கு பிறிதொரு தெரிவுக்குழுவை நியமிக்க எடுத்த முயற்சி தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற குழுத் தலைவரும் எம்.பி.யுமான இரா.சாணக்கியனின் கடும் எதிர்ப்பால் கைவிடப்பட்டது.

பாராளுமன்றத்தில் நடைபெற்ற அமர்வின் போது புதிய ஜனநாயக முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க ஜனாதிபதித் தேர்தல், பொதுத்தேர்தல்,மாகாணசபைத் தேர்தல், உள்ளுராட்சிமன்றத் தேர்தல்கள் முறைமை பற்றி ஆராய்ந்து அறிக்கையிடுவதற்கு பாராளுமன்ற தெரிவுக்குழு ஒன்றை நியமிக்கும் யோசனையை முன்வைத்தார்.

இதன்போது எழுந்த தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற குழுத் தலைவரான இரா .சாணக்கியன் எம்.பி ,பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க முன்வைத்துள்ள திருத்த யோசனையில் மாகாணசபை தேர்தல் முறைமையும் உள்ளடக்கப்பட்டுள்ளது. மாகாணசபைத் தேர்தல் முறைமை தொடர்பில் குழு ஒன்றை நியமிக்க பாராளுமன்றத்தில் யோசனை முன்வைக்கப்பட்டு, அது நிறைவேற்றப்பட்டுள்ளது.நாங்கள் இதற்கு எமது எதிர்ப்பை வெளிப்படுத்துகிறோம்.

பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க திருத்தம் ஒன்றையும் முன்வைத்துள்ளார்.மாகாணசபை தேர்தல் என்ற பதத்தை நீக்கி இந்த யோசனையை நிறைவேற்ற முடியுமா என்பது குறித்து ஆலோசனை கேளுங்கள்.அல்லது இந்த திருத்தத்தை திருத்தம் செய்து மீண்டும் முன்வைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

இதன்போது சபாநாயகர், ரவி கருணாநாயக்கவிடம் ‘நீங்கள் இந்த யோசனையை திருத்தம் செய்து மீண்டும் முன்வையுங்கள்’ என்றார்.

இதனைத் தொடர்ந்து எழுந்த சபை முதல்வரான அமைச்சர் பிமல் ரத்நாயக்க, அனைவரும் இணக்கம் தெரிவிக்கப்பட்டதன் பின்னரே இந்த யோசனை முன்வைக்கப்பட்டது.குழு கூடியதன் பின்னர் ஒரு தீர்மானத்தை எடுக்கலாம். எவ்வாறாயினும் இரண்டு தெரிவுக்குழுக்கள் இருக்கும். அவ்வளவுதான் என்றார்.

இதனைத் தொடர்ந்து மீண்டும் எழுந்த சாணக்கியன் எம்.பி., இதனை ஏற்றுக்கொள்ள முடியாது. சபாநாயகரே நீங்கள் ஒரு ஒழுங்குவிதியை குறிப்பிடுங்கள்.மாகாணசபைத் தேர்தல் தொடர்பில் பாராளுமன்ற தெரிவுக்குழு ஒன்றை நியமிக்க யோசனை நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் அதே விடயங்கள் குறித்து ஆராய்வதற்கு பிறிதொரு தெரிவுக்குழுவை எவ்வாறு நியமிக்க முடியும்?ஆகவே இந்த திருத்தத்தை தற்போது நிறைவேற்றாமல், திருத்தங்களுடன் சமர்ப்பிக்குமாறு குறிப்பிடுங்கள்.

மாகாணசபைத் தேர்தல் முறைமை தொடர்பில் இரண்டு தெரிவுக்குழுக்கள் நியமிக்கப்படும் போது எந்த குழுவின் அறிக்கையை ஏற்றுக்கொள்வது என்பதில் பாராளுமன்றத்துக்குள் சட்ட சிக்கல் ஏற்படும்.ஆகவே இரண்டு தெரிவுக்குழுக்களை ஒரே கட்டத்தில் நியமிக்க முடியாது.அது முறையற்றது என்றார்.

இதன்போது குறித்த யோசனையை திருத்த யோசனையில் மாகாண சபை முறைமை தேர்தல் முறைமையை தவிர்த்து ஏனைய தேர்தல் முறைமை பற்றி ஆராய்வதற்கு தெரிவுக்குழுவை நியமிக்க தீர்மானிக்கப்பட்டது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button