இலங்கை

அரசியல் தலைவர்கள் எத்தனை வாக்குறுதிகளை வழங்கினாலும் நாட்டின் அடித்தளம் இன்னும் பலவீனமாகவே உள்ளது

இலங்கை தற்போது மிகவும் ஆபத்தான ஒரு பொருளாதாரக் காலகட்டத்தில் உள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் ஆலோசனைகளைப் பின்பற்றினாலும், வறுமை, பொருளாதார ஏற்றத்தாழ்வு மற்றும் கடன் சுமையால் மக்கள் பெரும் நெருக்கடிக்குள்ளாகியுள்ளனர். அரசியல் தலைவர்கள் எத்தனை வாக்குறுதிகளை வழங்கினாலும் நாட்டின் அடித்தளம் இன்னும் பலவீனமாகவே உள்ளதாக பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார்.

நாட்டின் 78ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு கத்தோலிக்க ஆராதனைகள் பொரளை அனைத்து புனிதர்கள் தேவாலயத்தில் நடைபெற்றன. இதன்போதே பேராயர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

இலங்கை பிரித்தானியர்களிடமிருந்து சுதந்திரம் பெற்று 78 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இந்த நீண்ட காலத்தில் ஆன்மீக, சமூக மற்றும் பொருளாதார முன்னேற்றத்தை அடைய நாம் எவ்வளவு முயற்சி செய்தாலும், சுதந்திரம் குறித்த ஆரம்பகால கனவை இன்னும் நனவாக்க முடியாமல் இருப்பது கவலைக்குரியது.

1948இல் நாம் செய்தது வெளிநாட்டுத் தலைமையிடமிருந்து அதிகாரத்தை இலங்கையர்களிடம் ஒப்படைத்தது மட்டுமே. ஆனால், வெளிநாட்டு ஆதிக்கத்தின் சட்டங்கள், மரபுகள் மற்றும் பொருளாதாரப் பாதையே இன்றும் தொடர்கின்றன.

சுதந்திரத்திற்குப் பிறகு அறிமுகப்படுத்தப்பட்ட திறந்த பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் உலகமயமாக்கல் ஆகியவை நமது உள்நாட்டு உற்பத்தி முறையை முழுமையாகச் சீர்குலைத்துவிட்டன.

அன்று அநேகமானவற்றில் தன்னிறைவு பெற்றிருந்த நாம், இன்று ஒரு சிறிய ஊசி முதல் கப்பல்கள் வரை அனைத்தையும் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம்.

அன்று 20 ரூபா வரையில் இருந்த அமெரிக்க டொலரின் மதிப்பு இன்று பலமடங்கு உயர்ந்து நமது பொருளாதாரத்திற்குப் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது.

நமது சமூகத்தில் முன்பு இருந்த ஒழுக்கம், நேர்மை மற்றும் தேசபக்தி இன்று எங்கே மறைந்துவிட்டது என்ற கேள்வி எழுகிறது. மதங்கள் மனிதர்களை மிருகங்களாக மாற்றாமல், பண்புள்ளவர்களாக மாற்றும் ஒரு வழியாகும்.

இலங்கையின் ஆன்மீகச் சிந்தனை கிமு 3ஆம் நூற்றாண்டில் மிஹிந்து மகாரஹத்தனால் கொண்டுவரப்பட்ட பௌத்த தர்மத்தின் விழுமியங்களிலேயே பெரிதும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த மதப் பாரம்பரியத்தைப் பாதுகாத்து மக்களை ஆன்மீக எழுச்சியை நோக்கி வழிநடத்துவது அரசியல் தலைவர்களின் பொறுப்பாகும்.

மதத் தலைவர்கள் மற்றும் பௌத்த பிக்குகள் பொதுப் பிரச்சினைகளில் கருத்துத் தெரிவிக்க உரிமை இல்லாதவர்கள் போலச் சிலர் கருதும் நிலை தற்போது வலுத்து வருகிறது. சில அமைச்சர்கள் கூட மதத் தலைவர்களை இழிவுபடுத்தும் வகையில் பேசுவதை நாம் கண்டிக்க வேண்டும்.

ஒரு நாட்டின் உண்மையான பொருளாதார முன்னேற்றம் என்பது அந்த நாடு தார்மீகக் கொள்கைகளின் அடிப்படையில் கட்டியெழுப்பப்பட்டால் மட்டுமே சாத்தியமாகும்.

கடந்த காலங்களில் ஐரோப்பிய நாடுகள் மதமற்ற நாகரிகத்தை உருவாக்க முயன்றன. குறிப்பாக இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு மதத்தை ஒதுக்கிவிட்டுச் சுயநலமான ஒரு சமூகத்தை உருவாக்கினார்கள்.

இதன் விளைவாக இன்று அந்த நாடுகள் பெரும் இன்னல்களைச் சந்தித்து வருகின்றன. மதமோ, சரியான கொள்கைகளோ இல்லாத சமூகம் நீண்ட காலம் நிலைக்காது என்பதற்கு இன்றைய ஐரோப்பாவே சான்று. அத்தகைய சூழலை இலங்கையில் உருவாக்க முயல்வது முட்டாள்தனமான செயலாகும்.

இலங்கை தற்போது மிகவும் ஆபத்தான ஒரு பொருளாதாரக் காலகட்டத்தில் உள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் ஆலோசனைகளைப் பின்பற்றினாலும், வறுமை, பொருளாதார ஏற்றத்தாழ்வு மற்றும் கடன் சுமையால் மக்கள் பெரும் நெருக்கடிக்குள்ளாகியுள்ளனர். அரசியல் தலைவர்கள் எத்தனை வாக்குறுதிகளை வழங்கினாலும் நாட்டின் அடித்தளம் இன்னும் பலவீனமாகவே உள்ளது.

நமது கலாச்சாரம் மற்றும் நாகரிகத்திற்குப் பொருந்தாத சிந்தனைகளைத் திணிக்க முயலாமல், நமது நாட்டில் நிலவும் மத மற்றும் தார்மீக விழுமியங்களின் அடிப்படையில் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டும். மதச் சிந்தனையைப் புறக்கணிக்காமல் அதையே முன்னேற்றத்தின் அளவுகோலாகக் கொண்டால், இன்னும் சிறந்ததொரு நாட்டை நம்மால் உருவாக்க முடியும் என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *