இலங்கை

யாழ். மாவட்ட செயலக கூட்டத்தில் வேடிக்கை பார்த்த அமைச்சர் சந்திரசேகரன்! சபா குகதாஸ் குற்றச்சாட்டு

யாழ்ப்பாணத்தில் நடைபெறுகின்ற அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டங்களில் திட்டமிட்டு குழப்பங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. இதனை அனுர கண்டும் காணாமல் இருப்பாரேயானால் அது எதிர்காலத்தில் அவரது அரசியல் இருப்புக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினரும் ரெலோ கட்சியின் யாழ்ப்பாண மாவட்ட அமைப்பாளருமான சபா குகதாஸ் தெரிவித்துள்ளார்.

நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இதனை தெரிவித்துள்ளார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

அண்மை கலங்களாக நடைபெற்று வரும் யாழ்ப்பாண மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டமாக இருக்கலாம் அல்லது பிரதேச செயலகரீதியாக நடைபெற்றுவரும் அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டங்களாக இருக்கலாம் அவை கடந்த காலத்தை விட தற்போது கடுமையான விமர்சனத்திற்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன.

அந்தக் கூட்டங்களை தலைமை தாங்குகின்ற தலைவர்கள் அதனை சரியாக வழி நடத்துவதற்கு தவறுவது மாத்திரமல்ல, மறைமுகமான ஒரு நிகழ்ச்சி நிழலும் அதற்குள் உள்வாங்கப்பட்டிருக்கின்றது.

தமிழ்த தேசியத் தரப்புகள் மிகவும் பலவீனப்பட்டு இருக்கின்றார்கள், அவர்களுக்கு நிர்வாகம் நடத்த தெரியாது, அவர்கள் தான் எல்லாவற்றையும் குழப்புகிறார்கள் என்ற வகையில் காட்டுவதற்கு, குறிப்பாக தமிழ் தேசியம் சார்ந்த மக்கள் பிரதிநிதிகள் பேச முற்படுகின்றபோது சுயேட்சை குழு நாடாளுமன்ற உறுப்பினரை வைத்து பேசுவதை தடுப்பதற்கு தூண்டி விடுகின்ற செயற்பாடு நடைபெறுகின்றது.

யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் மிகக் கேவலமான சபைக்கு ஒவ்வாத சொல்லாடல்களை பயன்படுத்தும்போது அதனை கட்டுப்படுத்தாமல் அமைச்சர் சந்திரசேகரன் வேடிக்கை பார்த்தமை வேதனைக்குரிய விடயம்.

யாழ்ப்பாண மக்களோ அல்லது புத்திஜீவிகளோ அல்லது உலகத்தில் வாழ்கின்ற நாகரிகமான மக்களோ இதனை விரும்பவில்லை. தமிழ் மக்களுடைய நிர்வாகம், ஆளுமை, பண்பாடு, கலாச்சாரம், நாகரீகம் போன்றவற்றை எல்லாம் பலவீனப்படுத்துகின்ற நோக்குடனேயே இவ்வாறான செயற்பாடுகள் இடம்பெறுகின்றன.

இறுதியாக நடைபெற்ற யாழ்ப்பாண மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தின் போது ஊடகவியலாளர்களின் கேமராக்களில் பிடிபட்ட காட்சிகளை பார்க்கின்ற போது சுயேட்சை குழு நாடாளுமன்ற உறுப்பினரை ஆளும் தரப்பு எவ்வாறு கையாளுகின்றது என்று தெளிவாக தெரிகின்றது. இது அருவருக்கத்தக்க செயல்.

ஒரு தனிமனிதனை தேவையற்ற வகையில் குற்றம் சாட்டுவது, சபைக்கு உதவாத சொற்பிரியோகங்களை பயன்படுத்துவது எல்லாமே ஏற்றுக்கொள்ளக் கூடியது அல்ல. இவற்றினால் அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டங்களின் தார்ப்பரியமே இல்லாமல் போகின்ற ஒரு நிலை காணப்படுகின்றது.

தீர்வு காணப்பட வேண்டிய விடயங்கள் பல இருந்தும் அவை குறித்து பேசி தீர்வு காணாமல் தேவையற்ற விடயங்களை இதில் பேசுவது, அல்லது தங்களுக்கு பாதிப்புகள் ஏற்படுத்தக்கூடிய விஷயங்களை திசை திருப்புவது, அதாவது தையிட்டி விகாரை விடயத்தை திசை திருப்பி அதை வேறு வகையில் கொண்டு செல்வது, அல்லது அந்த நீதி கூறுகின்ற மக்களை விமர்சிக்கின்ற வகையில்தான் அந்த ஒருங்கிணைப்புக்குழு கூட்ட மாறியது.

இந்த விடயம் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட வேண்டும். ஜனாதிபதி இது குறித்து தெரிந்தும் தெரியாமல் இருக்கின்றார் என்றால் அது அவருடைய எதிர்கால ஆட்சிக்கு நல்லதாக இல்லை. தெருச்சண்டியர்கள் போல் அல்லது வீதியோரத்தில் நின்று சண்டை பிடிக்கின்றவர்கள் போல் கூட்டத்தை நடத்துவது வேதனைக்குரியதாகவே பார்க்கப்படுகின்றது என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button