யாழில் மாணவன் எடுத்த நடவடிக்கை: 18 குடும்பங்களுக்கு 25 ஆயிரம் ரூபா

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் மாணவன் ஒருவர் செய்த முறைப்பாட்டை அடுத்து அவர்களின் தலையீட்டினால்,வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட வீட்டை சுத்தப்படுத்துவதற்கான 25,000 ரூபா கொடுப்பனவுக்கு 18 வீடுகள் சிபாரிசு செய்யப்பட்டுள்ளது.
நவாலி கிழக்கு கிராம அலுவலர் பிரிவில் வெள்ளநீர் புகுந்த வீட்டிற்கு அரசினால் வழங்கப்படும் 25,000 ரூபா நிவாரணம் வழங்கப்படாமை தொடர்பாக மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்திய அலுவலகத்திற்கு முறைப்பாடு செய்யப்பட்டது.
இது தொடர்பில் சண்டிலிப்பாய் பிரதேச செயலாளரிடம் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு விளக்கம் கோரியிருந்தது.இதன் படி பிரதேச செயலகத்தால் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்திய அலுவலகத்துக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.
இதன்பிரகாரம் முறைப்பாட்டாளர் உட்பட்ட 18 வீடுகளுக்கான சேதவிபரம் சிபாரிசு செய்யப்பட்டு அரசாங்க அதிபருக்கு நிதி ஒதுக்கீட்டுக்காக அனுப்பப்பட்டுள்ளது என்றும் முறைப்பாட்டாளரோ அல்லது அவரது பிரதிநிதியோ நேரில் சமூகமளிக்கும் போது வெள்ள நிவாரணம் தொடர்பான சுற்றுநிருபங்கள் மற்றும் நிதிப்பிரமாணம் என்பவற்றின்படி முறைப்பாட்டாளருக்கான கொடுப்பனவை வழங்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் முறைப்பாட்டாளர் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டபோது நேரில் வந்து உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு கொடுப்பனவை பெற்றுக்கொள்ளும்படி பிரதேச செயலாளரால் முறைப்பாளருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்திய இணைப்பாளர் த.கனகராஜ் தெரிவித்தார்.
![]()