முச்சந்தி
ஆசியான் மாநாடு: இந்திய அரசின் வகிபாகமும் சீன- அமெரிக்க முரண் உறவும்!…. ஐங்கரன் விக்கினேஸ்வரா

உலகளாவிய சவால்களை எதிா்கொள்வதில், ஆசிய நாடுகளின் முன்னுரிமைகளை ஆதரிப்பதுடன், கூட்டு முயற்சிகளை மேற்கொள்ள ஆசியான் (ASEAN) ஒத்துழைப்பு கூட்டமைப்பு உறுதி பூண்டுள்ளது.புரூணே, மியான்மா், கம்போடியா, இந்தோனேசியா, லாவோஸ், மலேசியா, பிலிப்பின்ஸ், சிங்கப்பூர், தாய்லாந்து, வியட்நாம் ஆகிய நாடுகளை உள்ளடக்கிய ‘ஆசியான்’ (தென்கிழக்கு ஆசிய நாடுகள்) கூட்டமைப்பின் 47-ஆவது உச்சி மாநாடு, மலேசிய தலைநகா் கோலாலம்பூரில் அக்டோபர் 26 ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
இக்கூட்டமைப்புடன் ஒத்துழைக்கும் நாடுகளாக இந்தியா, அமெரிக்கா, ரஷ்யா, சீனா, ஜப்பான், அவுஸ்திரேலியா, கனடா, நியூஸிலாந்து, தென்கொரியா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பிரிட்டன் உள்ளன. ஆசியான் மாநாட்டில் பங்கேற்க அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உள்ளிட்ட உலகத் தலைவா்கள் பலர் மலேசியாவுக்கு வந்தனர்.
உலக அளவில் நிச்சயமற்றத் தன்மை அதிகரித்துள்ள தற்போதைய சூழலிலும், ஆசியான் நாடுகள் இடையிலான விரிவான வியூகக் கூட்டாண்மை நிலையான முன்னேற்றம் கண்டு வருகிறது. பலதரப்பு ஆழமான பொருளாதார, கலாசார உறவுகளும் வலுவடைந்துள்ளன.
மலேசிய ஆசியான் உச்சிமாநாடு:
மலேசியாவின் தலைமையிலான 2025 ஆசியான் உச்சிமாநாடு வெற்றிகரமாக நிறைவடைந்தாக மலேசிய அரசு தெரிவித்துள்ளது. இந்த மாநாட்டின் மூலம் பல முக்கிய மைல்கற்கள் எட்டப்பட்டுள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோலாலம்பூர் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானதன் மூலம் பிராந்திய நிலையிலான மோதல்களைத் தீர்ப்பதில் ஆசியானின் மத்தியப் பங்கை உறுதிப்படுத்துகிறது.26 ஆண்டுகளுக்குப் பிறகு ஆசியான் வட்டாரத்தின் ஒருமைப்பாட்டை வலுப்படுத்தும் விதமாக, கிழக்குத் திமோர் புதிய உறுப்பினராக இணைந்துள்ளது. மேலும் அமெரிக்காவுடன் இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. ஆசியான் நாடுகளில் முதன்முறையாக, மலேசியா இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இது முதலீட்டாளர் நம்பிக்கையை அதிகரித்து, மலேசியாவில் சாதகமான இயக்கத்தைக் கொண்டு வந்துள்ளது.
அத்துடன் உலகளாவிய அங்கீகாரமாக, அமெரிக்கா, சீனா, ஐ.நா. பொதுச்செயலாளர், பிரிக்ஸ் (BRICS), ஜி20 (G20), ஐரோப்பிய ஒன்றியம் (EU) போன்ற உலகத் தலைவர்களின் பங்கேற்பு, உலக அரங்கில் மலேசியாவின் வளர்ந்து வரும் முக்கியத்துவத்தை எடுத்துக் காட்டியுள்ளது. மேலும் ஃபிஃபா ஆசியான் கோப்பை அறிமுகம் (FIFA ASEAN Cup) செய்யப்பட்டுள்ளது. விளையாட்டு, மற்றும் பிராந்திய நிலையிலான ஒற்றுமை, சுற்றுலாத் திறனை மேம்படுத்தும் புதிய முயற்சியாகும்.
இவை ஒருமைப்பாட்டையும், எதிர்காலத்தையும் உறுதி செய்த முக்கிய முடிவுகள் என மலேசிய அரசு தெரிவித்துள்ளது. இந்த உச்சி மாநாடு, ஆசியான் வட்டாரத்தின் ஒற்றுமையையும், உலகளாவிய சவால்களை எதிர்கொள்ளும் திறனையும் உறுதிப்படுத்திய ஒரு வரலாற்றுத் தருணம் என்று தெரிவிக்கப்படுகிறது.
கடல்சார் ஒத்துழைப்பு மேம்பாடு:
கடல்சாா் பாதுகாப்பு மற்றும் நீலப் பொருளாதாரத்தில் பரஸ்பர ஒத்துழைப்பு வேகமாக வளா்ந்து வருகிறது. அந்த அடிப்படையில், 2026-ஆம் ஆண்டை ஆசியான்-இந்தியா கடல்சாா் ஒத்துழைப்பு மேம்பாட்டுக்கான ஆண்டாக இந்திய அரசு அறிவித்துள்ளது.
தற்போதைய இருபத்தோராம் நூற்றாண்டு இந்தியா-ஆசியான் நாடுகளுக்கானது. உலக
மக்கள்தொகையில் நான்கில் ஒரு பங்கை பிரதிநிதித்துவப்படுத்தும் இந்தியா, தெற்குலகின் கூட்டாளிகளாக விளங்குகிறது. உறுதியான கூட்டாண்மை, உலகளாவிய ஸ்திரத்தன்மை மற்றும் வளா்ச்சிக்கு ஆற்றல்மிக்க அடித்தளமாக இந்த அமைப்பு உருவெடுத்துள்ளது.
மக்கள்தொகையில் நான்கில் ஒரு பங்கை பிரதிநிதித்துவப்படுத்தும் இந்தியா, தெற்குலகின் கூட்டாளிகளாக விளங்குகிறது. உறுதியான கூட்டாண்மை, உலகளாவிய ஸ்திரத்தன்மை மற்றும் வளா்ச்சிக்கு ஆற்றல்மிக்க அடித்தளமாக இந்த அமைப்பு உருவெடுத்துள்ளது.ஒவ்வொரு தருணத்திலும், ஆசியான் நட்பு நாடுகளுக்கு இந்தியா உறுதுணையாக இருந்து வருகிறது. இந்திய – பசிபிக் பிராந்தியம் குறித்த ஆசியான் நாடுகளின் கண்ணோட்டம் மற்றும் மையத்தன்மைக்கு இந்தியா எப்போதும் முழு ஆதரவளிக்கிறது. இந்தியாவின் கிழக்கு நோக்கிய கொள்கையில் ஆசியான் முக்கியத் தூணாகும் என இந்திய பிரதமர் நரேந்திர மோடி மேலும் தெரிவித்துள்ளார்.
ஒட்டுமொத்த மனிதகுலத்தின் எதிா்காலத்தை பிரகாசமாக்க, ஆசியானுடன் தோளோடு தோளாக ஒத்துழைக்க இந்தியா தயாராக உள்ளது. கல்வி, சுற்றுலா, அறிவியல், தொழில்நுட்பம், சுகாதாரம், பசுமை எரிசக்தி, இணையப் பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளிலும் இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்த தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும் பகிரப்பட்ட கலாசார பாரம்பரியத்தைப் பாதுகாக்கவும், மக்கள் ரீதியிலான தொடா்புகளை வலுப்படுத்தவும் தொடா்ந்து பணியாற்றுவோம் என்று இந்திய அரசின் சாா்பில் பிரதமா் மோடி உறுதி அளித்துள்ளார்.
சீன- அமெரிக்க முரண் உறவு:
அமெரிக்க சீன அதிபர்கள் இந்த மாநாட்டின் பின்னர் சந்திக்க உள்ள நிலையில், இரு தரப்பு வர்த்தக அரசியல் குறித்தும் விவாதிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. சீனாவும் அமெரிக்காவும் தமக்கிடையிலான உறவுகளை மீள ஆய்வு செய்யும் ஒரு முக்கியமான தருணத்தில் உள்ளதாக கூறப்படுகிறது.
பொருளாதார உறவுகளைப் பொறுத்தவரை இருநாடுகளும் நன்றாக பிணைக்கப்பட்டு இருந்தாலும், இந்த ஆண்டின் டிரம்பின் வரிவிதிப்புகளால் இரு நாட்டு உறவில் ஏற்பட்டுள்ள பின்னடைவு குறித்து இந்த சந்திப்பில் விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இருதரப்பு ஒத்துழைப்பு மற்றும் சமரச முயற்சிகள் குறித்த அனைத்து பேச்சுவார்த்தைகளையும் பொறுத்தவரை அதில், கேந்திர முரண்தன்மைக்கு மிகவும் யதார்த்தமான சாத்தியம் இருக்கிறது என்று எமது இராஜ்ஜிய விவகாரஙங்களுக்கான ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

உக்ரேனிய போரால் ஏற்பட்டிருக்கும் கொந்தளிப்புகளின் காரணமாக சீனாவின் மீதான தாக்கத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடுமையாக அதிகரித்து வருகிறார்.
ஆனாலும் சீனாவும், அமெரிக்காவும் ஒருவர் அடுத்தவரது அரசியல் முறையை விரும்ப வேண்டும் என்பதில் உறுதியாக இல்லை. ஆனால் சீன- அமெரிக்க பொருளாதார உறவு மேம்பட இருதரப்பும் இணைந்து செயல்பட முனைகின்றன. டிரம்பின் ஆட்சிக்கு முன்னராக இரு தரப்பு வர்த்தக உறவுகள் வலுவாக இருந்தன. அத்தகைய வர்த்தக உறவு எதிர்காலத்தில் மேலும் வலுவடையுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். ஏனெனில் டிரம்ப் அரசின் கடுமையான வரி விதிப்பால், சிக்கலான உறவு நிலையே நீடிக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
வல்லரசாகும் சீனா:
இதேவேளை தனது கடந்தகால மனித உரிமைச் செயற்பாடுகள் குறித்த அமெரிக்காவின் விமர்சனத்துக்கு சீனா கடுமையாக பதிலளித்து வருகிறது. அமெரிக்காவை பொறுத்தவரை கலாச்சார மற்றும் பொருளாதார முன்னேற்றத்தில் தாம் வேறு ஒரு படிநிலையில் இருப்பதாக சீனா கூறியுள்ளது.
சீனாவின் மனித உரிமைகள் முன்னேற்றம் என்பது ஒரு புறவயப்பட்ட உண்மை என்றும், அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகள் என்பது, சமத்துவம் மற்றும் இருதரப்பும் ஒருவரை ஒருவர் மதித்தல் என்பவற்றை அடிப்படையாகக்கொண்டு நடத்தப்பட வேண்டும் என்றும் சீன அரசு தெரிவித்துள்ளது.
கடந்த தசாப்த காலத்தில் அமெரிக்காவின் கேந்திர ரீதியிலான கவனம் எல்லாம் மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பிய நாடுகளில் குவிக்கப்பட்டிருந்ததாக சீனாவில் ஒரு கருத்து நிலவுகிறது.
தற்போது அமெரிக்காவின் கவனம் சீனா நோக்கி முனைப்புக்கள் அதிகரித்து வருவதாக சீனா தெரிவித்துள்ளது. இதில் சீனாவின் கவலை என்னவென்றால், இந்த நிலைமைகளில் அமெரிக்காவின் கவனம் இனிமேல் ஆசிய பசுபிக் பிராந்தியத்தின் மீது திரும்பினால், என்னாவது என்பதுதான்.

அதுவும் நிச்சயமாக சீனா தானும் ஒரு உலக வல்லரசாக வளர்ந்து வருகிறது. அதனது பூகோள பொருளாதார ஆர்வங்கள் நிச்சயமாக அதனது படைவல்லமையை ,அதுவும் குறிப்பாக கடற்படை வல்லமையை விரிவுபடுத்த விளையும் என்பதில் எந்தவிதமான சந்தேகமுமில்லை.
சீனா தானே தயாரித்த பல விமானந் தாங்கிக் கப்பல்கள் பல சர்வதேச கடலில் ஓடுகின்றன. ஒரு வளர்ந்துவரும் வல்லரசுக்கான பாதையில் சீனா பாரியளவில் முன்னேறி இருக்கிறது.
சீனாவின் கடந்தகால வரலாற்றைப் பார்த்தால் இது பிராந்தியத்திலும், உலகிலும் உள்ள முக்கிய வல்லரசுகளுடன் ஒரு உரசல் நிலையை ஏற்படுத்துவதற்கே அதிக சாத்தியத்தைக் காட்டுகின்றது. நிச்சயமாக அமெரிக்காவுடனும் நிலைமை அப்படித்தான் இருக்கிறது.
![]()