முச்சந்தி

ஆப்கான் – பாகிஸ்தான் மோதல்: புதுடெல்லியின் மறைமுக போரா?… ஐங்கரன் விக்கினேஸ்வரா

(ஆப்கானிஸ்தானில் உள்ள தலிபான் அரசு டெல்லி ஆதரவுடன் முடிவுகளை எடுக்கிறது என்றும், தற்போது காபூல் அரசு டெல்லியின் மறைமுக போரை நடத்தி வருகிறது எனவும் பாகிஸ்தான் குற்றம் சாட்டியுள்ளது. தலிபான்களை சமாளிக்க திணறும் பாகிஸ்தான் அரசு, இந்தியா மீது தேவையற்ற குற்றச்சாட்டை சுமத்தி வருகிறது என இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.
அண்மையில் ஆப்கானிய தலிபானின் வெளியுறவு அமைச்சர் அமீர் கான் முத்தகி, தனது ஆறு நாள் இந்தியப் பயணத்தின் போது சில மறைமுகமான திட்டங்களை வகுத்துள்ளார் என்றும் கூறப்படுகிறது)
பனிப் போர் காலத்திலும், அதன் பின்னர் பல தசாப்தங்களாக, தலிபன்களை ஆதரிப்பதை பாகிஸ்தான் தேசிய நலன் சார்ந்த விஷயமாகக் கருதி வந்தது. தற்போது எங்கு தவறு நடந்தது, கடந்த காலத்திலா தற்போதா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆப்கானிஸ்தான் பாகிஸ்தான் இடையே இரண்டாயிரம் கிலோமீட்டருக்கும் அதிக நீளம் கொண்ட எல்லை உள்ளது, இது டுரண்ட் கோடு (Durand Line) என்று அழைக்கப்படுகிறது. இந்த எல்லையில் தொடர்ந்தும் மோதல்கள் நடந்து வருகின்றன.
பல மாதங்களாக இரு நாடுகளின் உறவில் பதற்றம் நிலவி வந்த நிலையில், சமீபத்திய மோதல்களால் இரு நாடுகள் உறவு மேலும் மோசமடைந்திருப்பதை காட்டுகிறது.
ஆப்கானிஸ்தானில் உள்ள தலிபான் அரசு, இந்தியாவுக்காக மறைமுக போரில் ஈடுபடுவதாக பாகிஸ்தான் குற்றம் சாட்டியுள்ளது. பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் காவ்ஜா ஆசிப் இந்த குற்றச்சாட்டை வைத்துள்ளார்.
இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே ஆப்கானிஸ்தானில் செயல்படும் டிடிபி எனும் தெஹ்ரிக் இ தாலிபான் அமைப்பினருக்கும், பாகிஸ்தான் ராணுவத்துக்கும் இடையே மோதல் நீடித்து வருகிறது.
இருமுனை போரில் பாகிஸ்தான்:
ஆப்கானிஸ்தானுடன் எல்லையில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், பாகிஸ்தான் இருமுனை போருக்கு தயாராக உள்ளதாக அந்நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சர் கவாஜா ஆசிஃப் தெரிவித்துள்ளார்.
மேலும் எல்லையில் இந்தியா அத்துமீற வாய்ப்பு இருப்பதாக குறிப்பிட்ட கவாஜா, அதற்கு பதில் அளிப்பதற்கான உத்திகளை பாகிஸ்தான் ஏற்கெனவே வகுத்துள்ளதாகவும் கூறினார். எனினும் இதுகுறித்து பொதுவெளியில் விவாதிக்க முடியாது எனவும், எந்தவொரு சூழ்நிலைக்கும் தாங்கள் தயாராக உள்ளதாகவும் தெரிவித்தார்.
சட்டவிரோதமாக பாகிஸ்தானில் வசிக்கும் ஆப்கானிஸ்தானை சேர்ந்தவர்களுக்கு எதிராக பாகிஸ்தான் அரசு நடவடிக்கையை தொடங்கியுள்ளதாகவும், சட்டவிரோத குடியேறிகள் வெளியேற வேண்டும் என்றும் வலியுறுத்தினார். கடந்த காலங்களில் ஆப்கானிஸ்தானின் அனைத்து ஆட்சியாளர்களும் பாகிஸ்தானில் முன்பு தஞ்சம் புகுந்ததாக குறிப்பிட்ட கவாஜா, ஆனால் அவர்கள் யாரும் பாகிஸ்தானின் உதவியை ஒருபோதும் ஒப்புக் கொண்டதில்லை என்றார். பாகிஸ்தானுக்கு, பயங்கரவாதத்தை தவிர ஆப்கானியர்கள் வேறு எதையும் தரவில்லை என்றும் கவாஜா விமர்சித்தார்.
ஆப்கான் பாகிஸ்தான் மோதல்:
ஆப்கானிஸ்தான் பாகிஸ்தான் மோதலில், டிடிபி தலிபான் தலைவர்களை குறி வைத்து பாகிஸ்தான் ராணுவம் போர் விமானங்கள் மூலமாக தாக்குதலை நடத்தியது. எல்லை தாண்டி பாகிஸ்தான் நடத்திய இந்த தாக்குதலால் கோபமடைந்த தாலிபான்கள், பதிலடி கொடுத்தனர். இதில் பாகிஸ்தான் தரப்பில் 58 ராணுவ வீரர்கள் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இரு தரப்பும் மாறி மாறி தாக்குதல் நடத்தியதால் எல்லையில் பதற்றம் ஏற்பட்டது.
இதையடுத்து சவுதி அரேபியா மற்றும் கட்டார் நாடுகள் இந்த விவகாரத்தில் தலையிட்டு மோதலை முடித்து வைக்க முயன்றன. எனினும் நீண்ட நாட்கள் இது நீடிக்கவில்லை. டெல்லி தான் காரணம் என பாகிஸ்தான் தரப்பில் கூறப்பட்டது. ஆனாலும் ஆப்கானிஸ்தானின் கந்தகார் மாகாணத்தில் உள்ள ஸ்பின் போல்டாக் மாவட்டத்தில் இருநாடுகளின் எல்லையில் தற்போது போர் வலுத்துள்ளது.
இதில் பாகிஸ்தான் தாக்குதலில் ஆப்கானிஸ்தானை சேர்ந்த 15 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். 100க்கும் அதிகமானவர்கள் காயமடைந்தனர். அதேபோல் ஆப்கானிஸ்தான் நடத்திய தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் பலர் கொல்லப்பட்டுள்ளதாக ஆப்கான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் மறைமுக போர்?
இத்தகைய சூழலில் மீண்டும் கட்டார,சவுதி அரேபியா அரசுகள் தலிபான்கள் மற்றும் பாகிஸ்தானிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டன. இதில் ஓர் குறுகிய உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் தாக்குதலை நிறுத்தினர். இதனால் 48 மணி நேரம் போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது.
ஆனாலும் இதனையடுத்தும் போர் நிறுத்தம் பேணப்படவில்லை. இதற்கு எல்லாம் டெல்லி தான் காரணம் என பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் காவ்ஜா ஆசிப் குற்றச்சாட்டு வைத்துள்ளார். இந்தியாவுக்காக மறைமுக போரை ஆப்கானிஸ்தானில் உள்ள தலிபான் அரசு, ஈடுபடுவதாக பாகிஸ்தான் தொடர்ந்து குற்றம் சாட்டியுள்ளது.
ஆயினும் போர் நிறுத்தம் நீடிக்குமா என்பதில் எனக்கு சந்தேகம் உள்ளது. ஏனெனில், ஆப்கானிஸ்தானில் உள்ள தலிபான் அரசு டெல்லி ஆதரவுடன் முடிவுகளை எடுக்கிறது. ஏனென்றால் அண்மையில் தலிபானின் ஆப்கான் வெளியுறவு அமைச்சர் அமீர் கான் முத்தகி, தனது ஆறு நாள் இந்தியப் பயணத்தின் போது சில மறைமுகமான திட்டங்களை வகுத்துள்ளார் என்று கராச்சி தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
ஆப்கான் அமைச்சர் வர்த்தகம் மற்றும் இருதரப்பு உறவுகளை மையப்படுத்தி இந்தியாவுக்கு சென்றதாக கூறினாலும் மறைமுக திட்டங்கள் வகுக்கப்பட்டு இருப்பதாக பாகிஸ்தான் அரசு கூறியுள்ளது.
பல ஆண்டு மோதல் போக்கு:
கடந்த சில மாதங்களாக பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் எல்லையில் பல பகுதிகளில் இரு தரப்பினருக்கும் இடையே மோதல்கள் பதிவாகியுள்ளன. எல்லையில் உள்ள பாகிஸ்தான் சோதனைச் சாவடிகளையும் தலிபான்கள் கைப்பற்றியுள்ளனர்.
இந்நிலையில் ஆப்கானிஸ்தானை ஆட்சி செய்துவரும் தலிபான்கள் இருநாட்டு எல்லையில் கிளை அமைப்பை தொடங்கி பயங்கரவாத செயல்களில் ஈடுபடுவதாக பாகிஸ்தான் குற்றஞ்சாட்டி வருகிறது. குறிப்பாக தெஹ்ரீக் இ தலிபான் (TTP) என்ற அமைப்பு பாகிஸ்தானில் தாக்குதல் நடத்துவதாக குற்றஞ்சாட்டி வருகிறது.
மேலும், இந்த பயங்கரவாத அமைப்பை அழிப்பதாக கூறி ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலில் பாகிஸ்தான் விமானப்படை கடந்த சில நாட்களுக்கு முன் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலுக்கு ஆப்கானிஸ்தானை ஆட்சி செய்யும் தலிபான்கள் அரசு கண்டனம் தெரிவித்தது. இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கப்படும் என்று எச்சரித்தது.
பாகிஸ்தான் – தலிபன் உறவு:
பாகிஸ்தானில் தாக்குதல்களை நடத்திய தெஹ்ரிக்-இ-தலிபன் பாகிஸ்தான் எனப்படும் TTP குழுவுக்கு தலிபன்கள் அடைக்கலம் கொடுப்பதாக பாகிஸ்தான் குற்றம் சாட்டுகிறது. இந்த விவகாரத்தால் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் மோசமடைந்து வந்தன. ஆகஸ்ட் 2021இல் தலிபன்கள் ஆட்சிக்கு வந்ததில் இருந்து பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் இடையிலான பதற்றம் பல முறை வெடித்துள்ளது.
காபூலை விட்டு அமெரிக்கா வெளியேறிய பின்னர், தலிபன்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்ததை பாகிஸ்தான் தொடக்கத்தில் வரவேற்றது. இது அதன் மேற்கு எல்லையை உறுதிப்படுத்தும் என பாகிஸ்தான் நம்பியது. மேலும், தலிபனுடன் சித்தாந்த ரீதியாக தொடர்புடைய குழுவான TTPஇன் தாக்குதல்களையும் தாலிபன் கட்டுப்படுத்தும் என பாகிஸ்தான் நம்பியது.
ஆனால் வன்முறையே அதிகரித்தன. எல்லை தாண்டி TTP நடத்திய தாக்குதல்களில் நூற்றுக்கணக்கான தங்கள் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாக பாகிஸ்தான் கூறுகிறது. ஆனால், இதை மறுக்கும் ஆப்கானிஸ்தான் அரசு, பாகிஸ்தானின் இந்த குற்றச்சாட்டுகள் அரசியல் உள்நோக்கம் கொண்டவை என்கிறது.
மேலும் டுரண்ட் கோட்டில் (Durand Line) வேலி அமைப்பது தொடர்பாகவும் சமீபத்திய ஆண்டுகளில் இருதரப்பும் மோதிக்கொண்டன. ச்சமன், குர்ரம் மற்றும் பாஜோர் போன்ற பகுதிகளில் எல்லை தாண்டிய பல தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இதனால் முக்கிய வர்த்தக பாதைகளை பல சந்தர்ப்பங்களில் மூட வேண்டியிருந்தது.
நீண்டகால பதற்றம்:
இரு தரப்பினருக்கும் இடையே நம்பிக்கையின்மை, பொருளாதார பதற்றங்கள் ஆகியவை ஒரு காலத்தில் வெளியுலகுக்கு தெரியாமல் இருந்தன. தற்போது இந்த மோதல் வெளிப்படையான விரோதமாக மாற்றியுள்ளது.

அத்துடன் பாகிஸ்தானில் பயங்கரவாத தாக்குதல்களை நடத்தும் TTPக்கு எதிராக தீர்க்கமான

Map of Afghanistan showing the location of Bagram Air Base.]

நடவடிக்கை எடுக்க ஆப்கான் ஆட்சி மறுப்பதால் பாகிஸ்தானுக்கு குறைந்த தேர்வுகளே உள்ளன. தலிபன்களிடம் செல்வாக்கு கொண்டிருக்கும் சீனா, சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ளிட்ட நாடுகளிடமிருந்து பாகிஸ்தான் உதவியை நாடியுள்ளது. அதன் மூலம் TTPக்கு எதிராக நடவடிக்கை எடுக்க அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது.

மறுபுறம் பாகிஸ்தான் ராணுவத்தை நேரடியாக எதிர்த்துப் போராடும் திறன் தலிபன்களுக்கு இல்லை.மேலும் பாகிஸ்தானும் சவுதி அரேபியாவும் சமீபத்தில் ஒரு பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. அந்த ஒப்பந்தம் இரு நாடுகளுக்கும் எதிரான எந்தவொரு தாக்குதலும் இரு நாடுகள் மீதான தாக்குதலாகவே கருதப்படும் என கூறுகிறது. எனவே இந்தப் போரில் ஆப்கான் நிலமை மோசமாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *