இலங்கை

கேப்பாபிலவில் காணிகளை விடுவிக்க வலியுறுத்தி 45 வது நாளாக தொடரும் போராட்டம்; வலுக்கும் ஆதரவு

முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கேப்பாப்பிலவு பகுதியில், இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் தமது பூர்வீகக் காணிகளை விடுவிக்க வலியுறுத்தி அப்பகுதி மக்கள் முன்னெடுத்து வரும் தொடர் கவனயீர்ப்பு போராட்டம் நேற்று (06) இரண்டாவது கட்டத்தின் 45வது நாளை எட்டியது.

கேப்பாப்பிலவு பகுதியில் இராணுவக் கட்டுப்பாட்டிலே உள்ள 55 குடும்பங்களுக்கு சொந்தமான 59.5 ஏக்கர் பூர்வீக வாழ்விடக் காணிகளை முதற்கட்டமாக விடுவிக்க கோரி தொடர் போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர்.

தமக்குச் சொந்தமான காணிகளை மீள ஒப்படைக்குமாறு வலியுறுத்தி, காணி உரிமையாளர்கள் தொடர்ச்சியாக அமைதியான முறையில் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். தமது பூர்வீக வாழ்விடங்களில் மீளக் குடியேறுவதற்கான உரிமையை உறுதிப்படுத்தி, காணிகளை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்பதே அவர்களின் பிரதான கோரிக்கையாகும்.

இந்நிலையில், போராட்டம் 45வது நாளைக் கடந்துள்ள போதிலும் இதுவரை அதிகாரிகளிடமிருந்து எவ்வித நிரந்தரத் தீர்வும் எட்டப்படாத நிலையில், போராட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இதன்போது போராட்டகாரர்கள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது, இன்று இரண்டாம் கட்டத்தின் 45 வது நாளாக போராடிக்கொண்டு இருக்கின்றோம். இன்றுவரை சாதகமான முடிவுகள் எவையும் எட்டவில்லை. எமது பூர்வீக காணிகள் கிடைக்கும் வரை இந்த போராட்டத்தை கைவிடப்போவதில்லை என்ற எதிர்பார்ப்புடனே இவ்விடத்தில் இருக்கின்றோம். கடும் வெப்பமான நிலையிலும் இவ்விடத்திலே போராடி வருகின்றோம். எதிர் காலத்தில் மழை இருந்தாலும் போராட்டத்தை கைவிடுவதில்லை என்ற உறுதிப்பாட்டுடனே போராடி வருகின்றோம்.

ஆளுனரோ, அரசாங்க அதிபரோ, பிரதேச செயலாளரோ இதுவரை எமது தார்ப்பரியமான நிலையை பார்த்ததும் இல்லை மாற்று வழி தேடியதும் இல்லை. கடந்த வாரம் பிரதி செயலாளர் வருகை தந்து காணியை விடுவிப்பதற்கு குழு அமைத்து அதனை பரிசீலனை செய்து காணி விடுவிப்பதற்கான ஏற்பாடுகள் செய்வதாக கூறி சென்றிருக்கின்றார். சாதகமான பதில் கிடைக்கும் என எதிர் பார்த்து இருக்கின்றோம்.

இவ்வாறிருக்கையில் எமது தொடர் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் இன்று 7 ஆம் திகதி மெசிடோ நிறுவனத்தின் ஒழுங்குபடுத்தலில் மன்னார் மக்களின் ஆதரவுடன் மன்னாரில் மாபெரும் போராட்டத்தின் ஊடாக ஆதரவினை வழங்கவுள்ளார்கள். மன்னார் மாவட்டம் மட்டுமல்ல ஏனைய மாவட்ட மக்களும் எமது காணி விடுவிப்பு போராட்டத்திற்கு வலு சேர்க்கும் முகமாக தாங்களும் போராட்டத்தை முன்னெடுப்பதாக உறுதியளித்துள்ளார்கள். எங்களுடைய காணி மீட்பிற்கு இலங்கை பூராகவும் உள்ள சிவில் அமைப்புக்கள் வலு சேர்த்து எமது காணியை விரைவில் மீட்டெடுக்க ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்பதனை கேட்டு நிற்கின்றோம் எனத் தெரிவித்தனர்.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button