அபிவிருத்தி நடவடிக்கைகள்; மன்னார் தீவு மக்களின் மனித உரிமைகளை மீறக்கூடாது


காற்றாலை மின் திட்டம் (கட்டம் 2) குறித்து சமூகத்துடன் கலந்தாலோசிக்கக் கோரி, சுமார் 60 நாட்களாக இரவும் பகலும் சத்தியாக்கிரகம் நடத்தி வந்த மன்னார் மக்கள் மீது செப்டம்பர் 27 அதிகாலை நடத்தப்பட்ட மிலேச்சத்தனமான காவல்துறை அடக்குமுறை, அனைத்து நல்லெண்ணம் கொண்ட மக்களாலும் கடுமையாக கண்டிக்கப்படல் வேண்டும்.
மன்னார் வாசிகளுக்கு இத்திட்டத்தால் கணிசமான நீண்டகால எதிர்மறைப் பாதிப்புகள் ஏற்படும் சாத்தியக்கூறுகள் நிறைய இருக்கும்போது, அவர்களின் சமூக நல்வாழ்வு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்புக் குறித்து உரிய கவனம் செலுத்தப்படுவது அவசியம். மக்கள் மீது அரசாங்கத்தின் விருப்பத்தை திணிப்பதும், அமைதியான போராட்டக்காரர்களுக்கு எதிராக அதிகப்படியான காவல்துறைப் பலத்தைப் பிரயோகிப்பதும் ஒருபோதும் தீர்வாக இருக்க முடியாது. மாறாக, எந்தவொரு நிலையான வளர்ச்சிக்கும், பங்கேற்பு ஜனநாயகமே வழிகாட்ட வேண்டும்.
மேனாள் பேராசிரியர் நிமால் குணதிலக்கவின் கூற்றுப்படி, முன்மொழியப்பட்டுள்ள 2ஆம் கட்ட காற்றாலை மின் திட்டம் , 1ஆம் கட்ட தம்பபவனி காற்றாலைத் திட்டத்தைவிட பாரிய ஆபத்தை மன்னார் பிரதேசத்திற்கு ஏற்படுத்தும் வாய்ப்புகளைக் கொண்டுள்ளது. மத்திய ஆசிய பறக்கும் பாதையில் (Central Asian Flyway) உயிரினங்களுக்கான மிக முக்கிய இடம்பெயரும் வழித்தடங்களில் ஒன்றான ‘ஆதாம் பாலம் தேசிய பூங்கா’, வங்காலை சரணாலயம் (ஒரு ராம்சார் ஈரநிலத் தளம்), மற்றும் ‘விடத்தல்தீவு இயற்கை ஒதுக்கம்’ போன்றன அமைந்துள்ள தீவின் வடக்குப்பகுதி முழுவதும் உள்ளடங்கலாக, தீவு முழுவதும் 52 பெரிய காற்றாலைகள் பரவலாக நிறுவப்படவுள்ளன. [The Island. – 1 ஏப்ரல் 2024]
பல பல்லுயிர் விஞ்ஞானிகள் மற்றும் இயற்கைவளப் பாதுகாவலர்களின் அவதானிப்பின்படி, மன்னார்த் தீவு பல சுற்றுச்சூழல் ரீதியாக பாதுகாக்கப்பட்ட சரணாலயங்களால் சூழப்பட்டுள்ளதால், அது இயற்கைச் செல்வம், பாதுகாப்பு மற்றும் உயிர்வாழ்விற்கான அடிப்படை உரிமைகளைக் கொண்ட ஒரு ‘உயிரின அமைப்பாக’ (a living entity) கருதப்படல் வேண்டும்.

மன்னார் குடிமக்களின் பிரதிநிதிகள், தங்கள் தீவை சமூக ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும், புவியியல் ரீதியாகவும் பாதிக்கும் சுற்றுச்சூழல் அபாயங்கள் பற்றிய தமது ஆட்சேபனைகளை முதன்முதலாக 2011 இல் எழுத்துவடிவில் தெரிவித்திருந்த போதிலும், அன்றைய அரசாங்கத்தால் அவை உதாசீனம் செய்யப்பட்டதாக முறையிடுகின்றனர். பின்னர் 2020 இல் 30 காற்றாலைகள் நிறுவப்பட்டதிலிருந்து, எழுத்து மூலமாகவும், நேருக்கு நேர் சந்திப்புகளிலும் அடிக்கடி எதிர்ப்புகள் எழுப்பப்பட்டன. 1ஆம் கட்ட காற்றாலைத் திட்டத்தினால் விளைந்த எதிர்மறைத் தாக்கங்களில் சில பின்வருமாறு:
(1) ஆண்டுதோறும் குடியிருப்புப் பகுதிகளில், குறிப்பாக பேசாலை இயற்கை நீர்த் தேக்கப் பகுதியில் வெள்ளம் ஏற்படுதல்.
(2) முருங்கை மரங்கள் மற்றும் பனை மரங்கள் அழிவால் விவசாய வருவாய் இழப்பு. கிட்டத்தட்ட 10,000 பனை மரங்கள் வெட்டப்பட்டதால் பனம்பொருள் உற்பத்தித் துறைக்கு கணிசமான வருமான இழப்பு ஏற்பட்டுள்ளது.
(3) காற்றாலை விசையாழியின் ஒலியால் ஆழமற்ற நீரில் வாழும் மீனினங்களுக்கு ஏற்படும் தாக்கம் காரணமாக மீன்பிடித் தொழில் பாதிப்படைவதாக மீனவர்கள் முறைப்பாடு.
(4) நிறுவப்படும் ஒவ்வொரு விசையாழிக்கும் ஏழு ஏக்கர் குடியிருப்பு/விளைச்சல் நிலங்கள் ஒதுக்கப்படுகிறது. இதனால் தீவில் வருங்கால வீட்டுத் திட்டங்களுக்குத் தடங்கல் ஏற்படும் வாய்ப்புகளுண்டு.
(5) இவ்வாண்டு ஜனவரியில், மத்திய ஆசிய பறக்கும் பாதை வழியாக இடம்பெயரும் பறவைகளின் வருகை கணிசமாகக் குறைந்துள்ளது, இதனால் சுற்றுலாப் பயணிகளால் கிடைக்கும் வருமானம் குறைந்துள்ளது. மன்னாருக்கு மட்டும் 150 பறைவையினங்களைச் சார்ந்த சுமார் ஒரு மில்லியன் பறவைகள் வருவதுண்டு.
மன்னார் தீவுவாசிகளின் வாழ்வாதாரம் மற்றும் சமூக நல்வாழ்வைப் பாதிக்கும் இந்த நியாயமான பிரச்சினைகள் ஒப்புக் கொள்ளப்பட்டு, உள்ளூர் மக்களின் ஒத்துழைப்புடன் காற்றாலைத் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை வழங்க பொருத்தமான மாற்றுத் தளங்கள் கண்டறியப்பட வேண்டும். உண்மையில், மன்னார் மக்கள் கோருவதெல்லாம் மன்னார் மாவட்டத்திற்குள், ஆனால் மன்னார் தீவுக்கு வெளியே, ஆற்றல் உற்பத்தி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மற்றும் சமூக நல்வாழ்வு ஆகியவற்றுக்கிடையே ஒரு நுட்பமான சமநிலை திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும் என்பதேயாகும்.
எந்தவொரு செலவு-பயன் பகுப்பாய்வோ அல்லது மன்னார் பெருநிலப் பகுதியிலுள்ள மாற்று இடங்கள் பற்றிய மதிப்பீடு ஏதும் செய்யாததாலும், பாதிக்கப்பட்ட தரப்பினரால் எழுப்பப்பட்ட பிரச்சினைகளைத் தீர்ப்பதில் வெளிப்படைத்தன்மை இருக்காததாலும், சமரசத்திற்கு இடமில்லாமல் அரசாங்கம் எடுத்த மேலிருந்து-கீழ் அணுகுமுறையாலும், இத்திட்டம் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் மோசமான விளைவை ஏற்படுத்தியுள்ளது.
முடிவாக, காற்றாலை மின் உற்பத்தி நிலையங்கள் இலங்கைக்கு ஒரு மூலோபாயத் தேவையாக இருப்பினும், சமூக நீதி மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்புகளை அதற்காகச் சமரசம் செய்ய முடியாது. இதுபோன்ற மக்கள் உணர்வுகளுடன் சம்பந்தப்பட்ட முக்கியமான விஷயங்களில் முடிவுகள் எடுக்கப்படும்போது, தேசிய மக்கள் சக்தி கொள்கை வகுப்பாளர்கள் தம் ஆலோசனைக் குழுக்களில் உள்ளூர் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்ய வேண்டும். இயற்கை வளங்களை நிலையானதாகவும் திறமையாகவும் பயன்படுத்துவது அரசின் பொறுப்பும் கடமையும் என்றாலும், உள்ளூர்வாசிகளின் வாழ்வாதாரம் மற்றும் இருத்தலியல் பற்றிய கவலைகள் பொருளாதார நன்மைகளை விட முன்னுரிமை பெற வேண்டும்.
எனவே ஜனாதிபதியிடமும் அரசாங்கத்திடமும் நாங்கள் மரியாதையுடன் விடுக்கும் வேண்டுகோள்:
(1) அமைதியான எதிர்ப்பை ஒரு குற்றமாகக் கருதுவதை நிறுத்துங்கள், காவல்துறையின் மிருகத்தனம் குறித்து சுயாதீன விசாரணையைச் செய்யுங்கள், குற்றவாளிகளை பொறுப்புக்கூற வையுங்கள்.
(2) நிலையான வளர்ச்சிக்கான மன்னார் தீவுவாசிகளின் நியாயமான வேண்டுகோளுக்கு செவிசாயுங்கள்; ஏனெனில் வளர்ச்சி நடவடிக்கைகள் ஒருபோதும் மனித உரிமைகளை மீறக்கூடாது.
(3) இத்திட்டத்தால் மன்னார் மக்கள் மற்றும் மதகுருமார்களுக்கு ஏற்பட்டுள்ள மிகுந்த உணர்ச்சிப் பாதிப்பை, ஒரு பெரிய அரசியல் விலை கொடுக்கும் தவறாக உருவெடுக்கமுன் சரிசெய்யுங்கள்.
Dr Lionel Bopage
Signed for the Executive Committee
Australian Advocacy for Good Governance in Sri Lanka Inc.
Email: lionel.bopage@gmail.com
![]()