இலங்கை

மன்னார்-பேசாலை பொலிஸ் நிலைய தடுப்பு காவலிலிருந்த சந்தேக நபர் மரணம்!

மன்னார் பேசாலை பொலிஸ் பிரிவில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு பேசாலை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இளைஞர் ஒருவர் வெள்ளிக்கிழமை காலை இறந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவர் வவுனியா கூமாங்குளத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் கபிலன் (வயது-34) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் குறித்து மேலும் தெரிய வருவதாவது,

பேசாலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காட்டாஸ்பத்திரி பகுதியில் வியாழக்கிழமை மாலை போதைப் பொருள் தொடர்பாக சந்தேகத்தின் பெயரில் குறித்த இளைஞர் கைது செய்யப்பட்டார்.

இந்த இளைஞரை பேசாலை பொலிஸார் துரத்தி பிடித்ததோடு, இவருடன் இருந்த மற்றொரு நபர் தப்பி ஓடியதாக தெரிவிக்கப்படுகின்றது.

பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட இளைஞரை பொலிஸார் பேசாலை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று நிலைய தடுப்பு காவலில் வைத்து விசாரணைகளை முன்னெடுத்தனர்.

பின்னர் இந்த இளைஞர் பொலிஸ் நிலைய கூண்டில் தடுத்து வைக்கப்பட்ட நிலையில் வெள்ளிக்கிழமை காலை இறந்த நிலையில் காணப்பட்டுள்ளார்.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை காலை 6.30 மணியளவில் சடலம் பேசாலை பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப் பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இந்த நிலையில் மதியம் 12 மணி அளவில் மன்னார் நீதிமன்ற பதில் நீதிவான் ஜெபநேசன் லோகு பேசாலை பிரதேச வைத்தியசாலைக்கு சென்று விசாரணைகளை முன்னெடுத்தார்.

இதனை அடுத்து பேசாலை பொலிஸ் நிலையத்திற்கும் சென்று பொலிஸ் நிலைய சிறைக் கூடத்தையும் பார்வையிட்டு விசாரணைகளை முன்னெடுத்தார்.

இளைஞன் பேசாலை பொலிஸ் நிலையத்தின் முதலாம் இலக்க தடுப்பு காவல் கூடத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையிலே சடலமாக மீட்கப்பட்டார்.உயிரிழந்த இளைஞரின் தாய் பேசாலை பிரதேச வைத்தியசாலைக்கு வெள்ளிக்கிழமை காலை சென்று தனது மகனை பொலிஸார் அடித்து கொலை செய்துள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button