இலங்கை

தமிழ் மக்களுக்கு சர்வதேசத்தால் மட்டுமே நீதியை பெற்றுத் தர முடியும்;  யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் 

பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதியை மாறி மாறி வந்த எந்தவொரு அரசாங்கங்களும் இதுவரை வழங்க முன்வராத நிலையில் தமிழ்மக்களுக்கான நீதியைச் சர்வதேசத்தால் மாத்திரமே பெற்றுத் தர முடியுமென நாங்கள் உறுதியாக நம்புகின்றோம் என யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் த.லஜிதர் தெரிவித்துள்ளார்.

வடக்கு- கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்கத்தின் ஏற்பாட்டில் தமிழ்மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்குச் சர்வதேசத்திடம் நீதி கோரி யாழ்ப்பாணம் செம்மணி வளைவுப் பகுதியில் கடந்த-25 ஆம் திகதி ஆரம்பமான சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டத்தின் இறுதி நாளான நேற்று முன்தினம் புதன்கிழமை பிற்பகல் கவனயீர்ப்புப் போராட்டமும், தீப்பந்தப் போராட்டமும் முன்னெடுக்கப்பட்டது. போராட்டத்தின் இறுதியில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

நீண்ட நெடுங்காலமாகத் தமிழ்மக்களின் நிலங்கள் சிங்களப் பெளத்த மயமாக்கலுக்கு உட்படுவதுடன் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமிழ்மக்களின் பெருமளவான பூர்வீக நிலங்களும் இன்னமும் கையளிக்கப்படாமலேயே இருந்து வருகின்றன. யுத்தம் முடிந்து பல வருட காலமாகியும் 70 வீதமான இராணுவ முகாம்கள் இன்னமும் வடக்கு- கிழக்கு நிலப் பரப்பில் நிலைப்படுத்தப்பட்டுள்ளன.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தினை அகற்றுவோமெனத் தற்போதைய அரசாங்கம் கூறியது. எனினும், ஜனநாயக வழியில் போராடி வரும் தமிழ் இளைஞர்களுக்கு இன்றுவரை பயங்கரவாதத் தடைச் சட்டம் மிகவும் அச்சுறுத்தலாகவே இருந்து வருகிறது.

தற்போதைய அரசாங்கம் தமிழ் அரசியல் கைதிகளை முழுமையாக விடுதலை செய்வோம் என்று வாக்குறுதி வழங்கித் தான் தமிழ்மக்களின் வாக்குகளையும் பெருமளவில் கபளீகரம் செய்து ஆட்சிப் பீடமேறினார்கள். எனினும், ஆட்சிப் பீடமேறிய பின்னர் அரசியல் கைதிகளை விடுவிக்க முடியாது என்று கூறியிருப்பது அரசாங்கத்தின் ஏமாற்றுத்தனத்தையே எடுத்துக் காட்டுகிறது.

தமிழ்மக்கள் தங்கள் சுயநிர்ணய உரிமையை உறுதி செய்கின்ற, மரபுவழித் தாயகத்தை நிலைபேறாகக் கொண்டதொரு அரசியல் தீர்வையே எதிர்பார்த்து நிற்கிறார்கள். எனினும், இவ்வாறான தீர்வை வழங்குவதற்குத் தற்போதைய அரசும் தயாராக இல்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *