தங்காலையில் பாரிய போதைப்பொருள் மீட்பு: 600 கிலோ போதைப்பொருட்கள், ஆயுதங்கள், சடலங்கள் சிக்கின

தங்காலையில் 200 கிலோவுக்கு அதிகமான ஹெரோயின் மற்றும் ஐஸ் ரக போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் தெரிவித்துள்ளது.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பொலிஸ் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யூ. வூட்லர், அப்பகுதியில் கைப்பற்றப்பட்ட மூன்று லொறிகளிலிருந்து இந்த போதைப்பொருட்கள் மீட்கப்பட்டதாகக் கூறினார்.
குறித்த லொறிகளிலிருந்து 05 கைத்துப்பாக்கிகள் மற்றும் 01 ரி-56 ரக துப்பாக்கி ஆகியனவும் மீட்கப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இதுவரை ஒரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் பேச்சாளர் மேலும் கூறினார்.
இதேவேளை, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் அனந்த விஜேபால, தங்காலையில் 600 கிலோவுக்கும் அதிகமான போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக தெரிவித்தார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களில் சுமார் 245 கிலோ ஹெரோயின் மற்றும் 380 கிலோ ஐஸ் என்பன அடங்குவதாகக் கூறினார்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் அமைச்சர் அனந்த விஜேபால மேலும் தெரிவித்தார்.
தங்காலையின் சீனிமோதர பிரதேசத்திலுள்ள வீடொன்றின் வளாகத்தில் முதலாவது லொறி கண்டுபிடிக்கப்பட்டதுடன், அதில் இரண்டு சடலங்கள் மீட்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போதைப்பொருள் இருப்பை ஒட்டியே சடலங்கள் கண்டெடுக்கப்பட்டதுடன், நஞ்சூட்டப்பட்டதாகக் கூறப்பட்டதால் ஒருவர் வைத்தியசாலையில் உயிரிழந்ததன் பின்னரே இந்த போதைப்பொருள் ஐஸ் ரகம் என சந்தேகிக்கப்படுகின்றது.
இதனையடுத்து, தங்காலையிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையமொன்றுக்கு அருகில் இரண்டாவது லொறியும் கண்டுபிடிக்கப்பட்டதுடன், அதிலிருந்து ஐஸ் மற்றும் ஹெரோயின் உட்பட போதைப்பொருட்கள் மற்றும் ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன.
பின்னர், சீனிமோதரவில் உள்ள குறித்த வீட்டுக்கு அருகிலேயே பொலிஸார் மூன்றாவது லொறியையும் கண்டுபிடித்தனர். அதிலிருந்தும் ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன.
![]()