மீண்டும் கொந்தளிக்கும் நேபாளம்: சமூக வலைத்தள தடை நீக்க போராட்டம்!… ஐங்கரன் விக்கினேஸ்வரா

(பொதுவாக 1997 முதல் 2012 வரை பிறந்தவர்கள் ஜென் Z தலை முறையினர் என்று நேபாளத்தில் வரையறுக்கப்படும் இளைஞர்கள், வேலையின்மை, வறுமை, மற்றும் அரசின் அப்பட்டமான ஊழல்கள் என பல்வேறு பிரச்சனைகளால் அவர்கள் விரக்தியின் உச்சத்தில் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்)
நேபாளத்தில் கடந்த 17 ஆண்டுகளுக்கு முன்னர் 2008-ம் ஆண்டு மே மாதம் இந்து மன்னராட்சி முடிவுக்கு வந்தது. கடந்த 239 ஆண்டுகளாக இருந்து வந்த மன்னராட்சியை அகற்ற வலியுறுத்தி பல ஆண்டுகளாக நடந்த போராட்டத்துக்கு அப்போது முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. ஆனால் போராட்டத்தில் 16,000 பேர் உயிரிழந்தனர்.
இப்போது அங்கு நடக்கும் ஜனநாயக ஆட்சியை பார்த்து முன்பு இருந்த மன்னராட்சியே மேல் என்ற மனநிலைக்கு மக்கள் வந்துள்ளதாக சில ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
தற்போது உணர்ச்சிபூர்வமான இளைஞர் புரட்சியால், மீண்டும் கொந்தளிக்கும் நிலைக்கு நேபாளம் சென்றுள்ளது. சமூக வலைத்தளங்கல் தடை செய்யப்பட்ட நிலையிலும் உணர்ச்சிபூர்வமான இளைஞர் போராட்டம் நேபாளத்தில் தொடர்கிறது.
நேபாளம் தற்போது வரலாறு காணாத போராட்டங்களால் பற்றி எரிந்துகொண்டிருக்கிறது. இந்த போராட்டங்களை வழிநடத்துபவர்கள் வேறு யாருமல்ல, சமூக ஊடகங்களில் கொடிகட்டிப் பறக்கும் Gen Z என்ற (ஜெனரேஷன் Z) இளைஞர்கள் தான்.
Gen Z இளைஞர் புரட்சி :
நேபாள அரசு, Facebook, Instagram, YouTube உள்ளிட்ட 26 முக்கிய சமூக ஊடக தளங்களுக்குத் தடை விதித்ததால்தான் இந்த ஆவேசப் போராட்டம் வெடித்தது. இந்த தளங்கள் நேபாள அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு பதிவு செய்யப்படாததே தடைக்கான காரணம் என அரசு கூறினாலும், இளைஞர்கள் இதை நம்பவில்லை.
ஆயினும் உண்மையான காரணம் இதுதான். சமூக ஊடகத் தடை என்பது ஒரு தீப்பொறிதான். பல ஆண்டுகளாக நேபாள இளைஞர்கள் மனதில் குமுறிக் கொண்டிருந்த கோபம்தான் இந்த போராட்டம்.
வேலையின்மை, வறுமை, மற்றும் அரசின் அப்பட்டமான ஊழல்கள் என பல்வேறு பிரச்சனைகளால் அவர்கள் விரக்தியின் உச்சத்தில் இருந்தனர். இதற்கிடையில், #NepoKid (#ஊழல்_பிள்ளைகள்) என்ற ஹேஷ்டேக் சமூக ஊடகங்களில் பரவி, அரசியல்வாதிகளின் ஆடம்பர வாழ்க்கை முறையையும், சாதாரண மக்களின் வறுமையையும் ஒப்பிட்டு, அவர்களின் கோபத்தை மேலும் தூண்டியது.
போர்க்களமான தலைநகர்:

ஆயிரக்கணக்கான இளைஞர்கள் தலைநகர் காத்மண்டுவில் கூடி, நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டனர். காவல்துறை அடக்குமுறை தொடர்ந்தது. போராட்டக்காரர்களை கலைக்க காவல்துறை தடியடி, கண்ணீர் புகை குண்டுகள் மற்றும் ரப்பர் குண்டுகளைப் பயன்படுத்தியது.
சில இடங்களில் துப்பாக்கிச் சூடும் நடத்தப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன. அத்துடன் அதிர்ச்சியூட்டும் மரணங்களாக போராட்டங்களில் பல இளைஞர்கள் உயிரிழந்தனர். மேலும் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர்.
இதற்கிடையே உள்துறை அமைச்சர் ராஜினாமா செய்துள்ளார். மக்கள் கோபத்தின் விளைவாக, நேபாளத்தின் உள்துறை அமைச்சர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இந்த மாற்றம் எங்கள் தலைமுறையில் தொடங்க வேண்டும்்என இளைஞர்கள் ஆவேசமாக முழங்குகின்றனர். வெறும் சமூக ஊடகங்களுக்காக மட்டுமல்ல, நாட்டின் எதிர்காலத்திற்காகவே இந்த போராட்டம் என்பதை அவர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர்.
இந்த போராட்டம் நேபாளத்தின் அரசியல் மற்றும் சமூக அமைப்பில் ஒரு புதிய அத்தியாயத்தை தொடங்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
யாரிந்த ஜென் Z தலைமுறை ?
பொதுவாக 1997 முதல் 2012 வரை பிறந்தவர்கள் ஜென் Z தலைமுறையினர் என்று நேபாளத்தில் வரையறுக்கப்படுகின்றனர். தொழில்நுட்ப வளர்ச்சி அசுர வேகமெடுத்த காலத்தில் பிறந்த இவர்கள் சமூக வலைதளங்களை உணர்வுபூர்வமாகவும் அணுகுபவர்களாக இருக்கின்றனர்.
இந்நிலையில், நேபாளத்தில் இந்த ஜென் Z தலைமுறையினர், இன்று மிகப் பெரிய போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். ஒரே நேரத்தில், தலைநகர் காத்மாண்டு மற்றும் முக்கியப் பகுதிகளான பொக்காரா, புட்வால், தாரன், கோரஹி உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கில் திரண்ட இளைஞர்கள் போலீஸாரை திக்குமுக்காட வைத்துள்ளனர்.
போராட்டக் களத்தில் உள்ள இளைஞர்கள் நாங்கள் எந்த ஓர் அரசியல் கட்சிக்கு எதிராகவும் அல்லது எந்தவொரு குழுவின் உந்துதலாலும் திரளவில்லை. மாறாக ஊழல் எதிர்ப்பு, சமூக வலைதள பயன்பாட்டுக்கு விதிக்கப்பட்டுள்ள தடைக்கு எதிர்ப்பு, வாரிசு அரசியல், பாரபட்ச அரசியலுக்கு எதிர்ப்பு போன்ற காரணங்களுக்காக தன்னெழுச்சியாகத் திரண்டுள்ளோம் என்று தெரிவித்துள்ளனர்.
இணையத்தில் தொடங்கி வீதிக்கு வந்த போராட்டம்:
நேபாளத்தில், சமூக ஊடகங்களுக்கு அரசு விதித்த தடையை எதிர்த்து, ‘ஜென் Z’
தலைமுறையினர் மிகப் பெரிய போராட்டத்தை தற்போது நடத்தி வருகின்றனர். இணையத்தில் தொடங்கிய இந்த போராட்டம், இன்று வீதிக்கு வந்து வன்முறையாக மாறியுள்ளது.
தலைநகர் காத்மாண்டுவில் உள்ள நாடாளுமன்றம் அருகே காவல்துறையினருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே நடந்த மோதலில், குறைந்தது 30 போராட்டக்காரர்கள் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என சுயாதீன தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாடாளுமன்றம் நோக்கி ஆயிரக்கணக்கான இளைஞர்கள் பேரணியாக சென்றபோது, நிலைமை கட்டுக்கடங்காமல் போனதால், காத்மாண்டுவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், அமைதியை நிலைநாட்ட நேபாள ராணுவமும் களமிறக்கப்பட்டுள்ளது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நேபாள அரசு, கடந்த வாரம் செப்டம்பர் 4-ஆம் திகதி முதல் 26 சமூக ஊடக தளங்களுக்குத் தடை விதித்தது. தகவல் தொடர்பு அமைச்சகத்தில் பதிவு செய்ய தவறியதே இதற்கு முக்கிய காரணம் என அரசு கூறியது. ஆனால், இது கருத்து சுதந்திரத்தை நசுக்கும் முயற்சி என போராட்டக்காரர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இந்தத் திடீர் சமூக ஊடகத் தடை, ஏற்கெனவே ஊழல் மற்றும் பொருளாதார பிரச்சனைகளால் கோபத்தில் இருந்த நேபாள இளைஞர்களை, வீதியில் இறங்கி போராட தூண்டிய ஒரு முக்கியமான காரணமாக கருதப்படுகிறது.
சமூக வலைதளங்களுக்கு தடை:
நேபாள நாட்டின் தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையின் விதிமுறைகளுக்கு உட்பட்டு அந்நாட்டில் இயங்கும் அனைத்து சமூக வலைதள நிறுவனங்களும் பதிவு செய்ய வேண்டும் என அந்நாட்டின் பிரதமர் கே.பி.சர்மா ஒலி தலைமையிலான அரசு தெரிவித்துள்ளது.
கடந்த ஆகஸ்ட் 28-ம் திகதி அன்று சமூக வலைதள நிறுவனங்கள் பதிவு செய்ய 7 நாட்கள் காலக்கெடு வழங்கியது நேபாள அரசு. அந்த கெடு முடிந்த நிலையில் 4-ம் தேதி அன்று பதிவு செய்யாமல் உள்ள 26 சமூக வலைதளங்கள் அங்கு தடை செய்யப்பட்டுள்ளது.
இந்த நிறுவனங்கள் பதிவு செய்யும் வரையில் தடை நடவடிக்கை தொடரும் என அந்த நாட்டு அரசு தெரிவித்துள்ளது. தற்போது எக்ஸ், பேஸ்புக், யூடியூப் என 26 சமூக வலைதளங்கள் நேபாளத்தில் தடை செய்யப்பட்டுள்ளது. நேபாள அரசின் சமூக வலைதள தடைக்கு பேச்சுரிமை ஆர்வலர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
தடைக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் வெடித்துள்ளது. பேச்சுரிமை ஆர்வலர்கள் அந்நாட்டின் நாடாளுமன்றம் வளாகம் அருகே போராட்டம் நடத்தி வருகின்றனர்.
பிரபல நடிகர்கள் மற்றும் கலைஞர்கள் நேபாள பொதுமக்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
நேபாளத்தில் கடந்த 17 ஆண்டுகளுக்கு முன்னர் 2008-ம் ஆண்டு மே மாதம் இந்து மன்னராட்சி
முடிவுக்கு வந்தது. கடந்த 239 ஆண்டுகளாக இருந்து வந்த மன்னராட்சியை அகற்ற வலியுறுத்தி பல ஆண்டுகளாக நடந்த போராட்டத்துக்கு அப்போது முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. ஆனால் போராட்டத்தில் 16,000 பேர் உயிரிழந்தனர்.
இப்போது அங்கு நடக்கும் ஆட்சியை பார்த்து முன்பு இருந்த மன்னராட்சியே மேல் என்ற மனநிலைக்கு மக்கள் வந்துள்ளதாக சில ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
![]()