இலங்கை

சுமந்திரனுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!

வலிகாமம் வடக்குப் பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் பிரதித் தவிசாளர் தெரிவுகளின் போது இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அறிவுறுத்தலுக்கு மாறாக செயற்பட்டதாகக் கூறி வலிகாமம் வடக்குப் பிரதேச சபை உறுப்பினர் பொன்னம்பலம் இராசேந்திரம் கட்சி உறுப்பினர் பதவியிலிருந்து கட்சியின் பதில் பொதுச் செயலாளர் சுமந்திரனால் கடிதமொன்றின் மூலம் இடைநிறுத்தப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து இராசேந்திரம் சுமந்திரன் தன்னை எந்த அடிப்படையுமற்று மத்திய குழுவின் தீர்மானம் எதுவுமின்றிக் கட்சியிலிருந்து தன்னிச்சையாக நீக்கியதாக யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்திருந்தார்.

கடந்த தவணை வழக்கில் தோன்றிய இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் மற்றும் கட்சியின் பதில் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் மேற்படி வழக்குத் தாக்கல் செய்ததே தவறு என்று தமது ஆட்சேபனையை எழுத்துமூலம் தாக்கல் செய்திருந்தனர். இந் நிலையில் வழக்கு நேற்று செவ்வாய்க்கிழமை மீண்டும் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது தமது பதில் ஆட்சேபனையைப் பொன்னம்பலம் இராசேந்திரம் தாக்கல் செய்திருந்தார்.

அதில் குறித்த கட்சியின் பதில் தலைவர் மற்றும் பொதுச் செயலாளரால் தாக்கல் செய்யப்பட்ட ஆட்சேபனையானது ஒரு பகுதி ஆங்கிலத்திலும், அதன் மறு பகுதி தமிழிலும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டமை சட்டத்திற்குப் புறம்பானது, யாழ்ப்பாணத்தில் நீதி, நிர்வாக மொழி தமிழ் ஆகையால் முழுமையாகத் தமிழிலேயே ஆட்சேபனை தாக்கல் செய்யப்பட வேண்டுமெனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந் நிலையில் இந்த வழக்கானது அடுத்த மாதம் 7 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *