இலங்கை

35 ஆண்டுகள் கடந்தும் மாறாத துயரம்: மண்டைதீவு படுகொலை நினைவு நாளில் கண்ணீருடன் அஞ்சலி!

35 ஆண்டுகளுக்கு முன்பு, இதே ஆகஸ்ட் மாத நாளில், மண்டைதீவில் நடந்த கொடூரமான படுகொலையின் 35 ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று உணர்வுபூர்வமாக அனுசரிக்கப்பட்டது. தங்கள் உறவுகளைப் பிரிந்த துயரமும், நீதிக்கான ஏக்கமும் கலந்த கண்ணீருடன் நூற்றுக்கணக்கான தீவக மக்கள் ஒன்றுகூடி தங்கள் அன்புக்குரியவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.

கடந்த 1990ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 26ஆம் திகதி, இராணுவத்தால் மண்டைதீவு, அல்லைப்பிட்டி, மண்கும்பான் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளின் போது, 80க்கும் மேற்பட்ட இளைஞர்களும் யுவதிகளும் காணாமல் ஆக்கப்பட்டிருந்தனர். பலர் கொல்லப்பட்டனர். படுகொலை செய்யப்பட்ட உறவுகளின் வாழும் உறவினர்கள் சிலர் முதன்மைச் சுடர் ஏற்றி, மலர்மாலை அணிவித்து அஞ்சலி நிகழ்வை ஆரம்பித்தனர்.

இப்படுகொலைகளுக்கு நேரடி சாட்சியாக இருந்த ஒரு தாயார், தனது கணவரையும் சகோதரனையும் இழந்த வலியை ஊடகங்களுக்கு கண்ணீருடன் பகிர்ந்துகொண்டார். “1990, ஆகஸ்ட் 25 மற்றும் 26ஆம் திகதிகளில், இராணுவத்தினர் என் கண் முன்னாலேயே என் கணவரையும் சகோதரனையும் கைது செய்து, உறவினர் ஒருவரின் வீட்டுக்குப் பின்னால் வைத்து சித்திரவதை செய்து சுட்டுக் கொன்றனர். இந்த கொடுமையான சம்பவத்துக்கு நான் நேரடி சாட்சி” என அவர் குறிப்பிட்டார்.

அத்துடன், தனது சகோதரனின் மனைவியையும் இன்னொரு இளம் பெண்ணையும் இராணுவத்தினர் கைது செய்து அழைத்துச் சென்றதாகவும், அவர்களை பாலியல் வன்முறைக்கு உட்படுத்தி, அவர்களின் உள்ளாடைகளை கையில் கொடுத்தனுப்பிய கொடூரத்தையும் தான் நேரில் கண்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அன்றைய தினம் பல உடல்கள் அப்பகுதியில் உள்ள சில கிணறுகளில் புதைக்கப்பட்டன. நேற்று நினைவுகூரப்படும் கிணறும் அவ்வாறு புதைக்கப்பட்ட கிணறுகளில் ஒன்றுதான் என்று அவர் மேலும் தெரிவித்தார். இந்த கிணறு போன்றே வேறு சில கிணறுகளிலும் உடல்கள் புதைக்கப்பட்டுள்ளன என அவர் கண்ணீருடன் கூறினார்.

மண்டைதீவில் உள்ள படுகொலை நினைவிடத்தில், பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள், அரசியல் பிரதிநிதிகள் மற்றும் மக்கள் என நூற்றுக்கணக்கானோர் ஒன்றுகூடி சுடரேற்றி, மலர்தூவி தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தினர். இந்தப் படுகொலைகள் குறித்த உண்மைகளை வெளிக்கொண்டுவர புதைகுழிகளை அகழ வேண்டும் என ஏற்பாட்டாளர்களும் உள்ளூர் பிரதிநிதிகளும் வலியுறுத்தினர். 35 ஆண்டுகள் கடந்தும் மாறாத சோகத்தையும், நீதிக்கான தாகத்தையும் இந்த நிகழ்வு மீண்டும் ஒருமுறை வெளிப்படுத்தியது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *