இலங்கை

அம்பாறை மாவட்டத்தில் தமிழினப் படுகொலைகளை செய்தோர் கண்முன்னே நடமாடித் திரிகின்றார்கள்

அம்பாறை மாவட்டத்தைப் பொறுத்தவரை தமிழினப் படுகொலைகளைச் செய்தவர்கள் கண்முன்னே நடமாடித் திரிகின்றார்கள். இதற்கான சாட்சிகளும் இருக்கின்றன. இவைகளை வெளிக் கொண்டு வரவேண்டிய பொறுப்பு எங்களுக்கு இருக்கின்றது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் எம்.பி.யும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமுமான கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார்

வீரமுனை படுகொலை நினைவேந்தல் நிகழ்வில் உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் பேசுகையில்,

1983 காலகட்டத்தின் பின்னர் வடக்கு,கிழக்கிலே விடுதலைப் போராட்டம் வீரியமடைந்ததைத் தொடர்ந்து ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின் நரித்தந்திரத்தின் மூலம் அப்போதைய பாதுகாப்பு அமைச்சராக இருந்த லலித் அத்துலத்முதலியின் காலகட்டத்திலே தான் தமிழ் முஸ்லிம்கள் மத்தியில் வேற்றுமையை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்திலே சில பிரச்சினைகள் உருவாக்கப்பட்டன.

எங்களுக்குள் இருக்கும் சிலரையும். முஸ்லிம் ஊர்காவற் படையினரையும் பயன்படுத்தி இரண்டு இனங்களுக்குமிடையில் விரோதங்களைக் கொண்டு வரும் போது தான் முஸ்லிம்கள் தாங்கள் இந்தப் பிரதேசத்திலே குறிப்பாக அம்பாறை மாவட்டத்தை தங்களது பிரதேசமாகக் கருத வேண்டும். தங்களது பிரதேசமாக எதிர்காலத்தில் நிலைநிறுத்த வேண்டும் என்ற அடிப்படையில் பல தமிழ் கிராமங்களை இல்லாதொழிக்கும் நோக்கத்துடன், அரசாங்கத்தின் உதவியுடன் பல திட்டமிட்ட படுகொலைகளை இன அழிப்புகளை, கிராமங்களை இல்லாதொழிக்கும் வேலைகளைச் செய்து கொண்டிருந்தார்கள்.

அதில் பெரியதொரு வேலைத்திட்டமே மட்டக்களப்பு, அம்பாறை பிராந்தியத்திலே பழம்பெரும் கிராமமான இந்த வீரமுனைக் கிராமத்தை இல்லாதொழித்தல். அம்பாறை மாவட்டத்தில் குறிப்பாக இந்த சம்மாந்துறைப் பகுதியில் எந்தவொரு தமிழ் அடையாளத்தையும் இல்லாமலாக்கி விடலாம் என்ற நோக்கத்தோடு செய்யப்பட்ட ஒரு திட்டமிட்ட செயல். அந்தக் காலகட்டத்திலே இந்த மக்களை மீண்டும் இந்தக் கிராமத்திற்குக் கொண்டு வருவதற்கு நான் முயற்சித்ததற்காக என்னையும் இலட்சக் கணக்கில் பணம் செலவழித்து இல்லாதொழிப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாக நான் அறிந்தேன்.

இன்று செம்மணி போன்ற இடங்களிலே பல புதைகுழிகள் தோண்டப்படும் போது அம்பாறை மாவட்டத்தைப் பொறுத்தமட்டில் இந்தப் படுகொலைகளைச் செய்தவர்கள் கண்முன்னே நடமாடித் திரிகின்றார்கள். இதற்கான சாட்சிகளும் இருக்கின்றன. இவைகளை வெளிக் கொண்டு வரவேண்டிய பொறுப்பு எங்களுக்கு இருக்கின்றது.

நாங்கள் எல்லாம் தனிநாடு வேண்டும் என்று போராடியவர்கள் ஆனால் இன்று அது சுருங்கிச் சுருங்கி இணைந்த வடக்கு,கிழக்கு கூட எமக்குக் கிடைக்காது என்ற காலகட்டத்திலே இருக்கின்ற மாகாணசபை அதிகாரத்தையாவது முழுமையாகப் பெற வேண்டும் என்ற நோக்கத்திலே இருக்கும் நாங்கள் எங்களுக்குள் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும்.

இன ஒற்றுமை வேண்டும் என்று சொல்லும் அரசியல்வாதிகள், கடந்த கால வரலாறுகளை நினைத்துப் பார்க்க வேண்டும். அவர்களுக்குத் தெரியாது விட்டால் ஏனையவர்களிடம் கேட்டு அறிந்து கொள்ள வேண்டும். ஏனெனில் இழந்தவர்கள் நாங்கள், உங்களுக்கு அந்த இழப்புகள் தெரியாது. இங்கு நடந்த படுகொலைகளைக் கண்ணால் கண்டவர்கள் இருக்கின்றார்கள். தங்களது சிறு வயதுகளிலே அவற்றைப் பார்த்தவர்களுக்கு அந்த மனநிலை எவ்வாறு இருக்கும் என்பதை நீங்கள் சிந்தித்து இந்த இன ஒற்றுமை சம்பந்தமாகக் கதைக்க வேண்டும்.

நாம் பேசித் தீர்க்க வேண்டிய பிரச்சினைகள் பல இருக்கின்றன. குறிப்பாக அம்பாறை மாவட்டத்திலே கல்முனை வடக்குப் பிரதேச செயலகம் தொடர்பில் பேச முடியாதா? சபைகளை அமைத்து அதிகாரத்தைப் பெறும் நாங்கள் அந்த மக்கள் படும் துன்பங்களைக் களைய முடியாதா? என்பதைச் சிந்தித்து எதிர்காலத்திலே எவ்வாறு இன ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதைத் தெரிந்து கொண்டு, ஒருதலைப் பட்சமாக எந்த முடிவுகளும் எடுக்காமல் கலந்தாலோசித்து முடிவுகள் எடுக்கப்பட வேண்டும்.

எங்களது தேவை, எங்களுக்குக் கிடைக்க வேண்டிய தீர்வுகள் எங்களது ஒற்றுமையின் மூலமாகவே கிடைக்குமே தவிர வேறு யாருடனும் சேர்ந்து பெற முடியாது. குறிப்பாகக் கிழக்கு மாகாணத்தில் நாம் ஒற்றுமையாகப் பயணிக்க வேண்டும். அதற்கு எந்த விட்டுக் கொடுப்புக்கும் நாங்கள் தயாராக இருக்கின்றோம்.

என்றோ ஒரு நாள் மரணம் என்ற கோட்பாட்டிலேயே நாங்கள் போராடச் சென்றவர்கள்.எமது மக்களுக்காக எதற்கும் விட்டுக் கொடுக்க நாங்கள் தயாராக இருக்கின்றோம். எனவே எங்களுடைய ஒற்றுமைதான் மிகவும் முக்கியம். நாங்கள் ஒன்றாகப் பயணித்தால் மட்டுமே இவ்வாறான விடயங்களுக்கு நாங்கள் ஒரு தீர்வினைக் காணலாம் என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button