இலங்கை

ஓய்வூதியத்தை ரத்துச் செய்வதா?; 500 முன்னாள் எம்.பி.க்கள் அரசுக்கு எதிராக போர்க் கொடி!

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை அரசாங்கம் ரத்துச் செய்தால், சுமார் 500 ஓய்வுபெற்ற எம்.பி.க்கள் தங்கள் ஓய்வூதியத்தை இழக்க நேரிடும் என்று ஓய்வுபெற்ற எம்.பி.க்கள் சங்கம் (ஆர்.பி.ஏ – RPA) எச்சரித்துள்ளது.

ஜே.வி.பி.யின் முன்னாள் எம்.பி.யும், சங்கத்தின் செயலாளருமான பேமசிறி மானகே, வாழ்வாதாரத்திற்காக தங்கள் ஓய்வூதியத்தை நம்பியிருக்கும், ஓய்வுபெற்ற அனைத்து எம்.பி.க்களும் கடுமையான நெருக்கடியை சந்திப்பார்கள் என்று கூறினார்.

ஒரு சிலரைத் தவிர, பெரும்பான்மையானவர்கள் மருத்துவச் செலவுகள் உட்பட அன்றாடச் செலவுகளைச் சமாளிக்க போராடுகிறார்கள் என்பதுடன் பலர் உதவியற்றவர்களாக உள்ளதாகவும் தெரிவித்தார்.

சில ஓய்வுபெற்ற எம்.பி.க்கள் வறுமையிலும் நோயுற்றவர்களாகவும் உள்ளனர், மற்றவர்கள் தங்கள் ஊனமுற்ற சார்புடையவர்களுக்கு சரியான கவனிப்பு இல்லாமல் கஷ்டங்களைச் சகித்துக்கொள்கிறார்கள் என்பதை மானகே மேலும் வெளிப்படுத்தினார்.

எம்.பி.க்களின் ஓய்வூதியத்தை ரத்துச் செய்வது பாராளுமன்றத்தை செயலிழக்கச் செய்யும், ஏனெனில் எதிர்கால எம்.பி.க்கள் அங்கு பணியாற்ற முன்வர மாட்டார்கள் என்றும் வலியுறுத்திய அவர்,

இதனால் பணக்காரர்கள் மற்றும் ஊழல் நிறைந்தவர்களுக்கு மட்டுமே பாராளுமன்றம் மட்டுப்படுத்தப்படும் என்றும் எச்சரித்தார்.

ஓய்வூதியத்தை நீக்குவது நாட்டின் ஜனநாயகத்திற்கு சவால் விடும் என்றும் சங்கச் செயலாளர் வலியுறுத்தினார்.

இந்தக் கவலைகள் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவுக்கு எழுதிய கடிதத்தில் முறையாக முன்வைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

மேலும், எம்.பி.க்களின் ஓய்வூதியம் ரத்து செய்யப்பட்டால், உள்ளூராட்சி அமைப்புகள், மாகாண சபைகள் மற்றும் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்திய ஜே.வி.பி உறுப்பினர்களின் சம்பளம், கொடுப்பனவுகள் மற்றும் வாகன அனுமதிப்பத்திரங்களை மீண்டும் வழங்கக் கோரி சங்கம் ஜனாதிபதி திசாநாயக்கவுக்கு ஒரு கடிதத்தை அனுப்பியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

1997 முதல், எம்.பி.க்களைக் கலந்தாலோசிக்காமல் ஜே.வி.பி.யால் திறைசேரியிலிருந்து நிதி பெறப்பட்டது என்றும், கட்சித் தலைவர்கள் பணத்தைத் திருப்பித் தரத் தவறினால், உயர் நீதிமன்றத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் லஞ்சம் மற்றும் ஊழல் ஆணையத்திலும் புகார்கள் தாக்கல் செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.

முன்னாள் எம்.பி.க்களுக்கு நீதி உறுதி செய்வதற்காக, கட்சித் தலைவர் மற்றும் பொதுச் செயலாளர் உட்பட முக்கிய பதவிகளை வகிக்கும் அனைத்து ஜே.வி.பி தலைவர்களும் நீதிமன்றத்திற்கு அழைக்கப்படுவார்கள் என்று பேமசிறி மானகே வலியுறுத்தினார்.

எம்.பி.க்களின் சம்பளம், கொடுப்பனவுகள் மற்றும் வாகன அனுமதிப்பத்திரங்களுக்காகக் கட்சி பலவந்தமாகவும் சட்டவிரோதமாகவும் பணத்தைப் பெற்றதாகவும், ஒரு எம்.பி. ரூ.30 மில்லியன் வரை பெற்றதாகவும் அவர் மேலும் குற்றம் சாட்டினார்.

மேலும், ஜெனீவாவை தளமாகக் கொண்ட ஐ.நா மனித உரிமைகள் பேரவை , பாராளுமன்றங்களுக்கு இடையேயான ஒன்றியம், சர்வதேச சட்ட வல்லுநர்கள் ஆணையம், இலங்கை மனித உரிமைகள் ஆணையம், வெளிநாட்டு இராஜதந்திர பணிகள் மற்றும் மகாநாயக்கர்கள் மற்றும் கர்தினால் ஆகியோரிடம் புகார்களை பதிவு செய்வதன் மூலம் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு நீதி கோரி வருவதாக பேமசிறி மானகே மேலும் கூறினார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button