கதைகள்

நடுகைக்காரி 82… ஏலையா க.முருகதாசன்

ஜிஎம்மும் தலைவரும் முருகதாசனை என்ன என்பது போலவும் அனுதாபத்துடன் பார்த்தனர்.
முருகதாசனின் முகம் சலனமற்று இருந்தது.பொதுவாகவே எப்பொழுதும்,எந்நேரத்திலும் முகத்தில் ஒரு புன்னகை இழையோடும் அவனின் முகம் இறுகியிருப்பதைக் கவனித்த ஜிஎம்மும் தலைவரும்அவனின மனைவியான சிலம்பரசியை நினைத்துத்தான் தனது புன்னகையை தொலைத்து நிற்கிறான் என்பதை உணர்கின்றனர்.

தனது மனைவி பார்வதியைப் பார்த்துச் சொன்னதை அவனாலும் ஏற்க முடியாதெனினும் தான் காதலித்துக் கல்யாணம் செய்தவள் குற்றவாளியாகி பலரின் குத்திட்ட பார்வைக்குள்ளும்,குத்திக்காட்டும் சொற்களுக்குள்ளும் அகப்பட்டுத் தலைகுனிஞ்சு நிற்கிறாளே என்ற வேதனையுடன் அவர்கள் முன்னால் நின்றான்.

அவன் எதற்காக தங்களின்: முன்னால் வந்து நிற்கிறான் என்பதை உணர்ந்த ஜிஎம்,தலைவரைப் பார்க்கத் தலைவர் தன்னை எதற்காக அர்த்த புஷ்டியுடன் பார்க்கிறார் என்பதை ஜிஎம் உணர்ந்து சிலம்பரசியைக் கூட்டிக் கொண்டு போங்கள் என்கிறார்.

அவர்களின் அறையை விட்டு வெளியே வந்த முருகதாசன் நேரே மனைவி உட்கார்ந்திருக்கும் மேசையடிக்குப் போகிறான்.சிலம்பரசி மேசையில் தலைவைத்துப் படுத்திருந்தாள்.

தவறுகளை விடுகிறவர்கள் அவர்கள் விடும் தவறுகளை மற்றவர்கள் உணர்த்தும் போதும் அவற்றுக்கான தண்டனையைப் பெறும் போதும் தாம் விட்ட தவறை உணர்வதும் அதனால் பெறும் தண்டனையால் மற்றவர்கள் முன்னால் கூனிக்குறுகி நிற்கும் அவமானத்துக்குமிடையில் உழல்வார்கள்.

அந்த நிலையில்தான் சிலம்பரசியிருந்ததாள்.அதனால் அங்கு வேலை செய்தவர்களின் முகத்தை அவளால் நிமிர்ந்து பார்க்க முடியவில்லை.சிலம்பரசி ஒரு பட்டதாரி என்பதுடன்,கணக்கியலிலும் வர்த்தகத்திலும் விசேட சித்தியடைந்தவளாதலால் சங்க வரவு செலவுக் கணக்குகளில் காணப்படும் சிக்கலான முடிச்சுக்களை எல்லோருக்கும் புரிகிற மாதிரி எளிதாக விடைகாணும் வகையில் தீரத்து வைப்பதால் ஏதாவது வரவு செலவுக் கணக்குப் பிரச்சினையென்றால் சிலம்பரசியைக் கூப்பிடுங்கள் என்ற நிலைக்கு அவள் சங்கத்தின் நிர்வாகத்துக்கு தேவையான ஒருத்தியானாள்.

சங்கக் கிளைக் கடைகளில் ஏற்படும் பொருட்களின் இருப்புகள் கணக்குகளில் தெளிவில்லாமல் இருந்தால் கிளை முகாமையாளர்களின் குழப்பத்தை தீர்த்து வைக்கும் அதே அவள்தான் மக்களுக்குச் சேர வேண்டிய பொருட்களை கிளை முகாமையாளர்கள் மோசடி செய்தால் அதையும் வெளிச்சத்துக்கு கொண்டு வருபவளும் அவளாகவே இருந்தாள்.

இப்படியொரு நேர்மையான பொம்பிளை சங்கத்தில் வேலை செய்கிறாள் என்பது பாவனையாளர்களுக்கு மெல்ல மெல்லத் தெரியவர அவள் மீது பாவனையாளர்களுக்கு ஒரு பிரியமும் மதிப்பும் ஏற்படத் தொடங்கியது.

தான் சங்கத்திற்கு தவிர்க்க முடியாதவள் என்ற அவளின் நினைப்பும் ஆங்காங்கே பாவனையாளர்கள் தன் மீது வைத்திருக்கும் மதிப்பும்,தான் ஒரு பட்டதாரியென்ற நினைப்பும் அவளைத் திமிர்பிடித்தவளாக்கிவிட்டது.

சிலம்பரசியும் முருகதாசனும் ஒருவரையொருவர் காதலிக்கும் போதே சிலம்பரசியின் தாய் தகப்பனுக்கும் தமையனுக்கும் முருகதாசனில் விரும்பமிருந்தாலும்,முருகதாசனின் தாய் தகப்பனுக்கு, சிலம்பரசி எடுத்தெறிந்து பேசும் வாய்க்காரி என்பதால் அவளில் விருப்பமில்லாமலிருந்தனர்.

ஆனால் முருகதாசனின் தங்கச்சியார் மங்களேஸ்வரி சிலம்பரசியின் கர்வத்தை இரசித்தாள்.பொம்பிளையள் எதற்கெடுத்தாலும் தயங்கவோ பயப்படவோ கூடாதென்ற கொள்கை அவளிடமுமிருந்ததால் மங்களேஸ்வரி தனக்கு அண்ணியாக வருவதை விரும்பினாள்.

சிலம்பரசி தலைவத்துப் படுத்திருந்த மேசையை மெதுவாக முருகதாசன் தட்ட தலையை நிமிர்த்திப் பார்த்த சிலம்பரசி என்ன என்பது போல கண்களாலேயே கேள்வி கேட்டாள்.
மனைவியின் கண்கள் அழுது சிவந்திருப்பதைக் கண்ட முருகதாசன் கவலைப்பட்டாலும் பலபேருக்கு முன்னால் அதனைக் காட்டிக் கொள்ளாதவாறு போவம் வாருங்கள் ஜிஎம்மும் தலைவரும் போகச் சொன்னவர்கள் என்று சொல்ல அவளும் எழுகிறாள்.

எல்லாருடைய கண்களும் முருகதாசன் மீதும் சிலம்பரசி மீதும் குத்திட்டு நிற்கின்றன.
கணக்குகளைச் சரிபார்க்கின்ற சௌந்தரவல்லியும் சிலம்பரசியும் எப்பொழுதும் கரடியும் ஓணான் மாதிரியும்.சிலம்பரசி எவரையும் பார்க்காது கணவருடன் போவதைக் கண்ட சௌந்தரவல்லி பக்கத்து மேசையிலிருந்த சாரதாவுக்கு மட்டுமே கேட்கிறமாதிரி,வினை விதைச்சவன் வினை அறுப்பான் திணை விதைச்சவன் திணை அறுப்பான்,இவாவின்ரை திமிருக்கு ஒரு பெட்டை பாடம் படிப்பிச்சுவிட்டாள் என்று சொல்வதைச் சாரதா உடம்பைச் சௌந்தரவல்லிப் பக்கம் வளைத்துக் கேட்டுக் கொண்டே போய்க் கொண்டிருக்கும் சிலம்பரசியை கடைக்கண்ணால் பார்க்கிறாள்.

இதுவரையும் எந்தப் பக்கமும் பார்க்காமல் கீழே போகும் படிகளை நோக்கிக் கணவனுடன் போய்க் கொண்டிருந்த சிலம்பரசி மெதுவான குரலில் கதைப்பவர்கள் யார் என்பதை குரல் வந்த திசையில் பார்க்கும் போது கழுத்தையும் முகத்தையும் சௌந்தரவல்லி பக்கம் சரிந்;து நீட்டிக் கொண்டே தன்னைக் கடைக்கண்ணால்: பார்ப்பதைக் கவனித்தவள் கணவனுக்கு அங்கை பாருங்கள் ; என்னைப் பற்றித்தான் கதைக்கினம் என்று கண்ணால் சாடை காட்ட,சரி சரி போங்கள் என்கிறான்.

சிலம்பரசியை பார்வதியிடம் மன்னிப்புக் கேட்க வைச்சதுடன்,அவளை ஒரு கிழமைக்கு தற்காலிகமாக வேலையை நிறுத்திய விடயம் உடனடியாகவே துணிக்கடையில் உள்ளவர்களுக்குத் தெரிந்துவிடுகிறது.

துணிக்கடையில் துணிவாங்க வந்தவர்கள் படிப்படியாகக் குறைந்து கொண்டிருந்தனர்.கடையில் பார்வதியும் தாயாரும்,ஞானமும் தாயாரும்,மங்களேஸ்வரியும் தாயாரும்,புஸ்பாவும் தயாரும் இன்னும் சிலரே நின்றிருந்தனர்.

துணிக்கடையில் வேலை செய்து கொண்டிருந்த சிவரஞ்சனி பார்வதியால் சிலம்பரசி தண்டிக்கப்பட்டதை பார்வதி யார் என்பதை அறிஞ்சு விரும்பவில்லையாதலால் பார்வதியைப் பார்த்து நீ என்று விளித்து ஏதோ தொடர நினைச்சவளை என்னோட நீ என்று சொல்லிக் கதைக்காதையுங்கோ கதைக்க விரும்பினாள் நீங்கள் என்று சொல்லிக் கதையுங்கள் என்று சொல்ல,பார்வதி இப்படிச் சொல்வாள் என்பதைக் கொஞ்சமும் எதிர்பார்க்காத சிவரஞ்சனி திக்குமுக்காடிப் போய் திகைச்சாலும்,தனது முகமாற்றத்தைக் காட்டிக் கொள்ளக்கூடாது என்பதற்காக பொய்யாகச் சிரித்துச் சொறி என்று சொல்லியவள் நீங்கள் இந்தச் சின்ன விசயத்தை ஜிஎம்மக்குச் சொல்லாமல் விட்டிருக்கலாம்,ஜிஎம்மும் சங்கத் தலைவரும் அதை ஏதோ தலைபோகிற காரியமாக எடுத்து சிலம்பரசியை ஒரு கிழமைக்கு தற்காலிகமாக வேலையிலிருந்து நிற்பாட்டியிருக்கினம் என்று சொல்ல ஏற்கனவே மன வலியோடிருந்த பார்வதி அவா என்னைப் பார்த்துச் சொன்னவை சாதாரண வார்த்தைகளா?,என்னை அவமானப்படுத்திய வார்த்தைகள்,என்னுடைய சுயமரியாதையைக் கேவலப்படுத்தின வார்த்தைகள்.என்னுடைய நிலையிலிருந்து யோசிச்சுப் பாருங்கள்.

எங்களை றோட்டிலை பார்க்கிறவர்கள் அங்கை பார் என்பது போல பக்கத்திலிருப்பவர்களுக்குச் சொல்வதை எங்கடை காதுகளும் கேட்டுக் கொண்டுதான் வருகுது.போகவிட்டு எங்கடை முதுகுக்கு பின்னால் கதைப்பதும் எங்களுக்கும் தெரியும்,உங்களுக்கும், இல்லை என்னைக் கேவலப்படுத்திய அந்தப் பொம்பிளைக்கும் என்ன வித்தியாசம்,நானும் நீங்களும் பொம்பிளை அதிலை நிக்கினமே இரண்டு பேரும் ஆம்பிளைகள் அவை ஆம்பிளைகள் நாங்கள் பொம்பிளைகள் அதுதான் வித்தியாசம்.ஆனால் நான் நீங்கள் என்னுடைய அம்மா என எல்லாப் பொம்பிளையளும் எல்லா ஆம்பிளையளும் மனிதர்கள் அவ்வளவுதான் என பார்வதி தன்மானச்சூட்டில் கோபமாகிப் பேச பார்வதி தாய் அவளின் கையைப் பிடிச்சு இழுத்து வா போவம் என்கிறாள்.

அம்மா விடம்மா என்று தாயின் கையை உதறிய பார்வதி சுயமரியாதைக்காக கோபத்தின் உச்சத்தில் நின்றாள்.

ஏற்கனவே அவமானத்தால் குறுகிப் போய் கண் சிவந்து நின்றவள் தவறு யாருடையது என்பதை உணராமல் சிவரஞ்சனி சொன்ன வார்த்தையால் இன்னும் குமுறத் தொடங்கினாள்.
சிவரஞ்சனியைப் பார்த்து, என்னிடத்தில் நீங்களிருந்து உங்களை யாராவது என்னைச் சொல்லியது போலச் சொல்லியிருந்தால் நீங்கள் என்ன செய்திருப்பீர்கள் என்று கேட்க,சிவரஞ்சனி மௌனமாக இருக்க சொல்லுங்கள் நீங்கள் என்ன செய்திருப்பீர்கள்,உங்களுக்குக் கோபம் வருமா வராதா?.இது தன்மானப் பிரச்சினை.இது வாங்கிய துணியின் தரம் பற்றியோ விலை பற்றியதோ அல்ல.என்னைத் தரம் பார்த்துக் கதைச்ச அநாகரீகம், அவரவர் நிலையிலிருந்து பார்த்தால்தான் தன்மானம் எவ்வளவு முக்கியம் அதன் வலியம் புரியும் என்று பார்வதி பொரிந்து தள்ள சொல்ல மனமில்லாமல் சொல்லியது போல சிவரஞ்சனி சிலம்பரசி அப்படிச் சொன்னது பிழைதான் நான் கேட்டதும் பிழைதான் சொறி என்கிறாள்.

ஞானம் எதுவுமே பேசாமல் பார்வதி சிவரஞ்சனியை நோக்கிக் கேட்ட கேள்விகளில் சுயமரியாதைக்கான நியாயம் இருப்பதை புன்முறுவலுடன் இரசித்துக் கொண்டிருந்தான்.
துணிகளை வாங்ககிக் கடையைவிட்டுப் போனவர்கள் போக மிகுதியானவர்களில் சிலர் பார்வதியைப் பார்த்து இப்படித்தான் துணிவாகக் கேள்வி கேட்க வேணும் என்று அவளைப் பார்த்துத் தலையை அசைக்கின்றனர்.

அப்பொழுது புஸ்பா பார்வதியை நோக்கி புன்னகைத்தபடியே வந்து அவளின் தோளில் ஆதரவாகக் கை வைக்கிறாள். புஸ்பாவுக்குத் தெரியாது தனது காதல் தோற்றுப் போய் தனது காதலனுக்குப் பார்வதிதான் காதலியாகி மனைவியாகப் போகிறாள் என்று.
காலம் எல்லாவற்றையும் வடிவமைத்து மாற்றும் என்பதை யார் அறிவார்?

(தொடரும்….)

 

 

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button