பலதும் பத்தும்

ஓவியத்திற்கும் அப்பால் லியோனாடோ டாவின்ஸி…

டாவின்ஸி என்றதும் அனைவருக்கும் நினைவிற்கு வருவது மோனலிசா என்ற ஓவியம் தான். ஒரு பெண்ணோவியம் காரணமாக புகழின் உச்சிக்கே சென்றதோடு மட்டுமல்லாது இன்றும் வரலாற்றில் பேசப்பட்டுக் கொண்டிருப்பவர் தான் மறுமலர்ச்சி கால ஓவியரான லியோனாடோ டாவின்ஸி என்பவராவார். இத்தாலிய நாட்டைச் சேர்ந்தவரான டாவின்ஸி 1452 ஆம் ஆண்டில் பிறந்து 1519 வரை வாழ்ந்தார்.
இவர் வாழ்ந்த காலத்திற்கும் இன்றைய இருபத்தியோராம் நூற்றாண்டிற்கும் இடையில் பல நூற்றாண்டுகள் கழிந்து விட்ட நிலையிலும் இவருடைய பல்துறை புலமை காரணமாக இன்றும் வரலாற்றில் வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் வரைந்த ஓவியங்களிலே மோனலிசாஇ இயேசுவின் கடைசி இராப்போசனம் என்பன புகழ் பெற்றவையாகும். இவரிடத்தில் இருந்த இரண்டு கைகளாலும் விரைவாக ஓவியம் வரைகின்ற இணையற்ற ஆற்றல் வேறு எந்த ஓவியரிடத்திலும் இல்லாத ஒன்று. டாவின்ஸி ஓவியம், கட்டடக்கலை , சிற்பம் இசை அறிவியல், கணிதம், பொறியியல், தாவரயியல் முதலான பல்வேறு துறைகளில் வியக்கத்தக்க மேதையாக விளங்கினார். ஆனாலும் இவரை அனேகமான பதிவுகள் ஒரு ஓவியராக மட்டுமே படம் பிடித்துக் காட்டுகின்றன. அதிலும் குறிப்பாக டாவின்ஸி என்றதுமே மோனலிசா ஓவியத்தைப் பற்றியே புகழ்ந்து கூறுகின்றன. அதற்கான காரணம் உண்மையில் டாவின்ஸியை வரலாற்றில் இடம்பிடிக்க வைத்தது மோனலிசா என்ற ஓவியம் தான். ஒருவேளை அவர் மோனலிசா என்ற ஓவியத்தை வரையாமல் போயிருந்தால் வரலாற்றில் யாருமே அறியாதவராய் காணாமல் போயிருக்கக் கூடும். எனவே ஓவியம் மூலமாக புகழும் வரலாற்றில் இருப்பும் கொண்டவரான டாவின்சி ஓவியத்திற்கு அப்பாலும் பல திறமைகளைக் கொண்டிருந்தார். அவ்வாறாக டாவின்சியிடம் காணப்பட்ட பெரும்பாலும் பேசப்படாத திறமைகளைத்தான் இந்தக் கட்டுரையின் பக்கங்கள் பிரதிபலிக்கின்றன.
ஓவியர் மட்டுமல்லாது தத்துவமேதை, வானியல் விஞ்ஞானி, பொறியியில் நிபுணர், கட்டிடவியலாளர், இராணுவ ஆலோசகர், கடல் ஆராய்ச்சியாளர், நீர்ப்பாசன நிபுணர், சிறந்த சிற்பி, கவிஞர், இசைவிற்பன்னர், விளையாட்டு வீரர் என டாவின்ஸி எடுத்த அவதாரங்கள் பலவாகும். சுமார் ஐநூறு ஆண்டுகளுக்குப் பின்னர் கண்டுப்பிடிக்க இருக்கும் விமானங்கள், யுத்த ஆயுதங்கள் போன்ற பலவற்றை தொலைநோக்கோடு டாவின்ஸி கற்பனை செய்து ஓவியமாக வரைந்தார். இராணுவ தளபாடங்கள், யுத்த விமானங்கள், மனிதனின் உள்ளக உறுப்புக்கள் முதலான டாவின்ஸியின் ஓவியங்களும் குறிப்பேடுகளும் அவருடைய அறிவியல் சிந்தனைத்திறனை சிறப்பாக உணர்த்தி நிற்கின்றன. பாரிய கப்பல்களே கண்டுபிடிக்கப்படாத இவருடைய காலத்தில் இவர் நீர்மூழ்கிக் கப்பலை தனது ஓவியத்திலே கொண்டு வந்தார்.
அறிவியல் பெரிதும் வளர்ச்சியடையாத கதிர்வீச்சு உபகரணங்கள் கண்டுபிடிக்கப்படாத காலத்தில் அந்தக் காலத்தில் தாயின் கருவறையில் குழந்தை எப்படியிருக்கிறது? ஏன்று கூட டாவின்ஸியின் கற்பனை விசாரணை செய்தது.
மனிதனுடைய உடலமைப்பை அணு அணுவாக டாவின்ஸியின் ஓவியம் படம் பிடித்துக் காட்டியது. எலும்புகள், தசைகள், நரம்புகள், இதயம் முதலான உறுப்புகள் போன்றவற்றின், அமைப்புமுறை, தொழிற்பாடுகள் பற்றி டாவின்ஸி நம்பகமான பல சிந்தனைகளை தன்னகத்தே கொண்டிருந்தார். அவற்றை ஓவியங்களாகவும் குறிப்புக்களாகவும் ஆவணப்படுத்தினார். விஞ்ஞான ரீதியாக சிந்தித்த டாவின்சி முதன் முதலாக ஓவியத்தில் ஒளியையும் நிலலையும் கொண்டுவந்தார். ஒளியையும் நிழலையும் இவர் ஒருமித்து ஆராய்ந்த போது கண்களைப்பற்றி ஆராய முட்பட்டார். பின்பு ஒளியலைகளைப்பற்றி ஆராய்ந்தார். ஒளிப்படக் கருவிகளின் அடிப்படைத் தத்துவம் பற்றி டாவின்சி அப்போதே சிந்தித்துவிட்டார்.
மனிதர்களின் உருவங்களை முழுமையாக வரைந்தார். முப்பரிணாம முறையில் மனிதர்களை வரைந்த போது மனிதர்களின் உடற் கூட்டு இயல்பை ஆராய்ச்சி செய்தார். மனிதர்களின் உள் உறுப்புக்களையும் இவருடைய தூரிகை கற்பனையாய் கிறுக்கித் தள்ளியது. செடிகள் இலை கொடிகள் முதலானவற்றை வரைந்தபோது தாவரவியல் பற்றிய தேடிலில் டாவின்சி இறங்கினார். இவரின் காலத்தில் இவற்றைப் போன்ற ஆராய்ச்சிகள் துளிர்விடக் கூட ஆரம்பிக்கவில்லை. அவ்வாரான நிலையில் டாவின்சியின் இவ்வாறான அறிவியல் சிந்தனைகள் அசாதாரமானவை என்றுக் கூட கூறலாம்.
ஓவியத்திற்கு அப்பால் வண்ணங்களின் கோட்பாடு, மனித உடலமைப்பு, இயற்கை, பிரபஞ்சம், கட்டடக்கலை, உடலியல் மற்றும் மருத்துவம், விலங்குகளின் வாழ்ககை மற்றும் பழக்கவழக்கங்கள் குறித்த ஆய்வுகள் என்று பன்முப்படுத்தப்பட்ட ஆளுமைக்கொண்ட மேதையாக லியோனார்டோ டாவின்சி விளங்கினார். தன் எண்ணங்களையும் அபிப்பிராயங்களையும், பரிசீலனைகளையும், சந்தேகங்களையும், ஆய்வுகளையும் 5000 பக்கக் காகிதங்களில் இடமிருந்து வலமாக புதிர்ப்புதையலாக டாவின்சி விட்டுச் சென்றுள்ளார். இவ்வாறான பக்கங்களில் கிடைக்கும் விவரங்கள், குறிப்புக்கள், உரையாடல்கள், சிந்தனைகள் ஆகியவற்றிலிருந்து டாவின்சியின் மனமண்டலத்தையும் அவர் அழகியல் ஊடாக தம்மைச் சுற்றியிருந்த மானிட உலகின் இயற்கையை தரிசிப்பதையும் அறிவியலை ஆய்வு செய்யும் முறைகளையும் அறிந்து கொள்ளலாம் என்று புகழ் பெற்ற சிந்தனையாளரான காப்ரா என்பவர் விவரிக்கிறார்.
டாவின்சியின் காலத்தில் அறிவென்பது அது குறித்து அதற்கு முன்பாக எழுதப்பட்ட அனைத்தையும் படிப்பதென்பதாகும். டாவின்சி அதிலிருந்து மாறுபட்டார். அவர் ஒவ்வொன்றையும் ஆராய்ந்துப் பார்த்தார். தமது அனுபவ அறிவிலிருந்தே அவர் ஓர் உண்மையை ஏற்றுக் கொண்டவராக இருந்தார். டாவின்சி கலைக்காக இயற்கையை ஆராய்ந்துப் பார்த்து அனுபவித்தார் ஆராய்ந்தார்.அவரது அறிவியல் அந்தக் காலங்களை இயற்கை தரிசனத்தின் மூலமாக பெறப்பட்டது. இதன் விளைவாகவே நியூட்டன் பிரான்சிஸ் பேகர் ஆகியவர்களின் அறிவியல் கட்டமைப்புக்களில் இருக்கும்
இயற்கையிலிருந்து விலகிய இயற்கையை அடிமைப்படுத்துகின்ற பார்வை டாவின்சியிடம் இல்லை என்பதை காப்ரா சுட்டிக்காட்டுகின்றார்.
இவ்வாராக பல அறிவியல் சிந்தனைகளை கற்பனையை அப்போதே முன்வைத்தவராக டாவின்சி இருந்தப் போதும். அவர் தொடர்பாக சில விமர்சனங்களும் எழுந்துள்ளன. அவருடைய குறிப்புக்களும் சிந்தனைகளும் அவருடைய அறிவியல் சிந்தனைகளுக்கும் திறமைக்கும் சான்று பகர்கின்ற போதிலும் அவை பெரிதான அளவில் பிற்கால அறிவியல் வளர்ச்சிக்கு செல்வாக்கு எதனையும் பெற வில்லை. அவர் சிந்தனை செய்த கண்டுப்பிடிப்புக்களின் மாதிரி எதனையும் அவர் உருவாக்கியிருக்க வில்லை.
அவருடைய அறிவியல் சிந்தனை வெறுமனே சித்திரங்களையும் சிந்தனைகளையும் குறிப்புக்களாகவுமே புதைந்துப் போயின. இவ்வாறான டாவின்சியின் குறிப்புக்கள் விபரங்கள் சிந்தனைகள் அடங்கிய பக்கங்கள் இவர் சிந்தனையில் அமைந்த பல அறிவியல் கண்டுப்பிடிப்புக்கள் ஏற்பட்டப் பின்னரே கண்டுப்பிடிக்கப்பட்டன. ‘அவருடைய சிந்தனைகள் மிகவும் தேர்ச்சித்திறன் வாய்ந்ததாக இருந்தப் போதிலும் அந்தக் கண்டுப்பிடிப்புக்கள் நடைமுறையில் செயற்பட்டிருக்கும் எனத் தோன்ற வில்லை. ஒரு விமானம் அல்லது நீர் மூழ்கி கப்பலைப் பற்றிய கருத்தை சிந்திப்பது ஒன்று நடைமுறையில் செயற்படக் கூடிய அந்த மாதிரிகளை துள்ளியமாக வடிவமைத்து உருவாக்கம் செய்வது மற்றொன்று. இரண்டாவது மிகக் கடினமானது. டாவின்சி இரண்டாவதை செய்யத் தவறிவிட்டார்.’ என்று கார்லஸ் பல்கலைக்கழக பல்துறை விற்பன்னரான மைக்யை ஹெரி ஹார்ட் கூறியுள்ளார்.
எது எவ்வாறாக இருந்தப்போதும் டாவின்சியின் திறமை குறைத்து மதிப்பிடக் கூடிய ஒன்றல்ல. அறிவியல் வளர்ச்சி ஏற்படாத அந்தக் காலத்திலேயே அவர் பல அறிவியல் சிந்தனைகளை கொண்டிருந்தார். தன் தூரிகையால் அறிவியல் பிரபஞ்சத்தை அலசிப்பார்த்தார். மனித உடற் கூறுகளை தன் தூரிகையால் துல்லியமாக வரைந்தார். விமானம், நீர்மூழ்கிக் கப்பல் பரசூட் தொடங்கி கருவில் குழந்தை எப்படி இருக்கும் என்பது வரை அவருடைய கற்பனை விரிந்து சென்றது. உலக வரலாற்றுப் பக்கங்களில் ஒரு ஓவியராகவே பெரும்பாலும் பேசப்படுகின்ற டாவின்சியின் பல்துறை சார்ந்த திறமைகளும் அலசி ஆராயப்படுவது அவசியமான ஒன்றாகும்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button