கச்சதீவை இந்தியாவால் மீளப்பெறவே முடியாது; அது இலங்கைக்கு உரியது

கச்சதீவு சர்வதேச சட்டத்தின்படி இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளதால் அதனை இந்தியாவால் மீளப்பெற்றுக்கொள்ள முடியாது என்று அமைச்சரும் சபை முதல்வருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்திலுள்ள வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கச்சதீவு விவகாரம் தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
கச்சதீவை மீட்காத காரணத்தினாலேயே இந்திய மீனவர்கள் கைது செய்யப்படுவதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளமை தொடர்பிலும், தமிழக அரசு கச்சதீவை மீட்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உள்ளமை தொடர்பிலும் இலங்கை அரசாங்கம் என்ன நிலைப்பாட்டில் உள்ளது? என்று அமைச்சரிடம் கேட்கப்பட்டது.
இதன்போது பதிலளித்த அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவிக்கையில்,
கச்சதீவானது சர்வதேச சட்டத்தின்படி இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளது. இதனால் இந்தியாவின் ஒவ்வொரு அரசியல் நோக்கத்திற்காகவோ, தேர்தல் நோக்கத்திற்காகவோ அல்லது வேறு காரணங்களுக்காவோ அவ்வாறு கூறலாம். டிரம்ப் கனடா, கிரீன்லேன்டை பெற்றுக்கொள்ள போவதாக கூறியிருந்தார். ஆனால் அவரால் அதனை பெற்றுக்கொள்ள முடியாது என்பதை போன்றதுதான் இதுவும். கச்சதீவு சர்வதேச சட்டத்தின்படி இலங்கைக்கு கிடைத்துள்ளது. இது இலங்கைக்குரியது. எனினும் எமது நாட்டுக்கு அருகில் உள்ள சகல நாடுகளுடனும் நட்புடனும், சர்வதேச சட்டத்தின்படியும் நாங்கள் நடந்துகொள்வோம் என்றார்.
![]()