முச்சந்தி
பட்டலந்த கொடூர வதை முகாமும் செம்மணி மனித புதை குழிகளும்!… நவீனன்

(தமிழர் தாயகத்தை உலுக்கிய செம்மணிப் படுகொலைகள் பொய்யாகிப்போன நீதி விசாரணைகளால் கொல்லப்பட்ட அப்பாவி மக்களுக்கு நீதி கிடைக்கவில்லை. ஈழத்தில் பல இடங்களில் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இக்கொடூர கொலைகளுக்கு காரணமானவர்கள் யாரும் இலங்கை அரசாங்கத்தினால் கண்டுபிடிக்கப்படவில்லை)

முப்பது ஆண்டு கடந்துள்ள நிலையில் தமிழர் தாயகத்தை உலுக்கிய செம்மணிப் படுகொலைகள் பொய்யாகிப்போன நீதி விசாரணைகளால் கொல்லப்பட்ட அப்பாவி மக்களுக்கு நீதி ஒருபோதும் கிடைக்கவில்லை.
ஈழத்தில் பல இடங்களில் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். ஆயினும் இந்த சம்பவம் நடைபெற்று பல ஆண்டு கடந்துள்ள நிலையில் இந்த சம்பவத்திற்கு காரணமானவர்கள் யாரும் இலங்கை அரசாங்கத்தினால் கண்டுபிடிக்கப்படவில்லை என்பதே நிதர்சனமான உண்மையாகும்.
ஆனால் 1987- 1989 ஜேவிபி கிளர்ச்சியினருக்கு எதிரான பட்டலந்த வதைமுகாம் கொடுமைகள்,
ஜே.வி.பி யினர் ஆட்சியதிகாரத்துக்கு வந்ததன் பின்னர், சுமார் 37 ஆண்டுகளுக்கு முந்திய உண்மைகளை வெளிக்குக் கொண்டு வந்துள்ளனர்.
பட்டலந்த வதைமுகாமுக்கு நீதி ?
ஜே.வி.பி. யினர் ஆட்சிக்கு வந்த பின்னரே ஜே.வி.பி யினருக்கு எதிரான சட்டவிரோதக் கொடிய செயல்களை அம்பலத்துக்குக் கொண்டு வருவதற்கு முயற்சிகள் எடுக்கப்பட்டன.ஆனால் வடக்குக் கிழக்கில் பட்டலந்தை போன்ற வதை முகாம்கள் பல இருந்தன. அரச படைகளாலும், இராணுவ துணைக் குழுக்களாலும் மேற்கொள்ளப்பட்ட படுகொலைகளுக்கு இதுவரை விசாரணைகள் எதுவும் நடைபெறவில்லை.
இவற்றை ஆராய்ந்து நீதி வழங்கும் நேர்மை கடந்தகால சிங்கள அரசாங்கங்களுக்கு இருக்கவில்லை. தற்போது ஆட்சியில் உள்ள தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தமது ஜேவிபி சகாக்கள் கொல்லப்பட்டதனால் பட்டலந்த வதைகள் கொலைகளை விசாரிக்க முன்வந்தது என்பதும் உண்மையே.
செம்மணியில் அணையா விளக்கு போராட்டம் !
ஆனால் தமிழ் மக்கள் கொல்லப்பட்டு, புதைகுழிகள் மர்மங்களையோ, விசாரணைகளயோ எந்த ஒரு சிங்கள அரசும் முன்னெடுக்கவில்லை. ஈழத்தமிழ் மக்கள் பலரது உடலங்களை தாங்கிய மனிதப் புதைகுழிகள் தமிழர் தாயகமெங்கும் அதிகரித்து செல்கின்ற நிலையில் தீர்வுகள் எதுவும் இதுவரை கிடையாத நிலையே உள்ளது.
இந்த விடையத்தை சர்வதேச பார்வைக்கு கொண்டு செல்வதுடன் அதனூடாக உறவுகளுக்கு நீதி கிடைக்க வலியுதுத்தி மக்கள் மயப்படுத்தப்பட்ட வகையில் செம்மணியில் அணையா விளக்கு போராட்டம் 23/6/25 கொலையான கிருசாந்தியின் உறவினரால் சுடரேற்றி ஆரம்பித்து வைக்கப்பட்டது.

மக்கள் செயல் அமைப்பின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்டுள்ள இந்த போராட்டத்தில் சமயத் தலைவர்கள், அரசியல் தலைவர்கள், அரசியல் பிரமுகர்கள், பொது அமைப்பின் பிரதிநிதிகள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து மலர் தூவி அஞ்சலித்தனர்.
குறிப்பாக செம்மணி மண்ணில் புதையுண்டுபோன உறவுகளுக்கு, நீதி வேண்டிய போராட்டமாக
‘அணையா விளக்கு” என்ற பெயரில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
நீதியற்ற செம்மணி புதைகுழிகள்?
தற்போது ஜூன் 23ஆம் திகதி தொடக்கம் 25 ஆம் திகதி வரையில் யாழ்ப்பாணத்தின் செம்மணி வளைவுப் பகுதியில், செம்மணி மனிதப் புதைகுழிக்கு சர்வதேச நீதி வேண்டியும், விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாகவும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றது.
அறவழிப் போராட்டத்தில் மேற்குறித்த புத்தாக்க முயற்சியொன்றைப் பரீட்சித்துப் பார்க்கிறார்கள் எனலாம். தமிழர் இறையியல் சார்ந்த நம்பிக்கையில் விளக்கிற்கு கனதியான இடமுண்டு. இருளை நீக்கி வெளிச்சத்தை தரும் என்கிற நம்பிக்கையின் ஆன்மீக வெளிப்பாடுதான் விளக்கேற்றல். தாம் நினைத்த காரியத்திற்கு வெளிச்சம் கிடைக்க, பிறரின் பார்வை அதன் மீது பட விளக்கேற்றுவது பெருநம்பிக்கையாக இருந்து வருகின்றது.
சமநேரத்தில் விளக்கு என்ற சொல்லில் பிறருக்குத் தெரியாத விடயத்தை விளக்குதல் என்கிற அர்த்தமும் உண்டு. இந்தப் பின்னணியில் தான் தீயை வழிபட்ட மனிதன் விளக்கினைத் தன் ஆன்ம வழிபாட்டின் குறியீடாக மடைமாற்றியிருக்கிறார்கள் என்று பொருள் கொள்ளலாம்.
இதில் தமிழ் இறையியல் மரபில் அணையாத விளக்கு என்றொரு வழிபாட்டு முறையும் உண்டு. குறிப்பிட்டதொரு காலப்பரப்பை நிர்ணயித்து அக்காலம் வரைக்கும் தொடர்ச்சியாக விளக்கினை ஒளிரவிட்டால் தாம் நம்புகிற காரியம் நிகழ்தேறும் என்பதுதான் அந்நம்பிக்கையின் உட்பொருளாகும்.
உண்மையில், செம்மணி மனிதப் புதைகுழி விடயம் 1995ஆம் ஆண்டிலிருந்து பேசப்பட்டு வருகிறது. நீதி கோரப்பட்டு வருகிறது. சர்வதேசத்தின் தலையீட்டை வலியுறுத்தி வருகின்றது. புதைத்தவரே சாட்சியமளிக்க தான் புதைத்த இடத்தை தோண்டியபோது அங்கு எந்த மனித எச்சங்களும் இல்லாதிருந்த மர்மத்தையும், எப்படித்தான் இவர்கள் கொல்லப்பட்டார்கள் என்பதற்கான சாட்சியத்தையும் கொண்டிராத இருள்சூழ்ந்த இடமாக செம்மணி வெளி இன்றும் நம்முன் பரந்துகிடக்கிறது. இறந்து கிடக்கிறது. எனவே இதன் மீது பலரினது வெளிச்சம் படுவதும், அதன் மீதான நியாயத்தைக் கோருவதும் அவசியமானது.இதனை உணர்ந்துதான் என்னவோ, செம்மணி மனிதப் புதைகுழிக்கு நீதி கோரி நடத்தும் அறவழிப் போராட்டத்திற்கு “அணையா விளக்குப் போராட்டம்” எனப் பெயரிட்டிருக்கிறார்கள். அதேவேளை போராட்டம் இடம்பெறும் மூன்று தினங்களுக்கும் அணையா விளக்கை ஒளிரச்செய்யவும் ஏற்பாடு செய்திருந்தார்கள்.
சிறிலங்கா அரச பயங்கரவாதம்:
நீண்டகாலமாக சிறிலங்கா அரச பயங்கரவாத நடவடிக்கைகளால் தமிழர்களுக்கு ஏற்பட்ட வதைகள், கொலைகள், காணாமல் ஆக்கப்பட்டதை விசாரணை நடாத்தி நீதி வழங்கும் என்பதை எதிர்பார்க்க முடியாது.

தேர்தல் வெற்றிக்காகவே பேச்சளவில் இன நல்லிணக்கம், சம தருமம், தேசிய ஒற்றுமை என பறைசாற்றும் தற்போதைய அனுர அரசு தமிழர் மீதான படுகொலைகளுக்கு நீதி வேண்டும் என்று கேட்பதே நகைப்புக்கிடமாகும்.
தற்போது மாற்றங்களை மையப்படுத்தி ஆட்சிக்கு வந்திருக்கும் அனுர அரசாங்கமும் தமிழ் மக்கள் மீதான இனப்படுகொலைகளுக்கு நீதி வழங்கும் என்று நம்பிக்கை கொள்ள முடியாது. ஜெனிவாவில் மனித உரிமை மீறல்களை உள்ளக விசாரணை மூலமே தீர்க்க முடியும் என்று உறுதியாக அனுர அரசு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இனியும் செம்மணி புதைகுழிகள் விவகாரத்தில் தலையிட்டு நீதி வழங்கும் என்ற நம்பிக்கையை தமிழ் மக்கள் இழந்து விட்டனர். காலங்காலமாக தமிழ் மக்களின் மீது போர் தொடுத்த சிங்கள அரசுகள் ஒரு போதும் நீதியை வழங்கப் போவதில்லை என்பதை தமிழ் மக்கள் அறிவார்கள்.
இன நல்லிணக்கம், உண்மையை கண்டறிதல் என்ற அடிப்படையில் தேர்தல் பரப்புரையில் தெரிவித்து ஆட்சியை பிடித்துள்ள இந்த அரசும் எவ்வகையிலும் தமிழ் மக்களின் இறையாண்மையை ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என்பது தெரிகிறது.
ஆனால் சிங்கள இளைஞர்கள் கொல்லப்பட்ட்பட்டலந்த வதைமுகாம் பற்றிய விவகாரம் அனுரவின் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிக்கு வந்து மூன்று மாதங்களில் வெளிச்சத்துக்கு வந்துள்ளதுடன் நீதி விசாரணையும் ஆரம்பிக்கப் பட்டிருக்கிறது.
ஆனாலும் தற்போது மாற்றங்களை மையப்படுத்தி ஆட்சிக்கு வந்திருக்கும் அனுர அரசாங்கமும் இந்த விவகாரத்தில் தலையிட்டு நீதி வழங்கும் என்ற நம்பிக்கையை தமிழ் மக்கள் இழந்து விட்டனர். காலங்காலமாக தமிழ் மக்களின் மீது போர் தொடுத்த சிங்கள அரசுகள் ஒரு போதும் நீதியை வழங்கப் போவதில்லை என்பதை தமிழ் மக்கள் அறிவார்கள்.
சர்வதேச விசாரணை கோரிக்கை:
அப்பாவித் தமிழ் மக்கள் தங்களது சொந்தங்களை இழந்த உறவுகள் பலர் 35 ஆண்டுகளுக்கு
பின்னரும் தங்களது உறவுகளை நினைவு கூற சிங்கள அரசாங்கங்கள் அனுமதிப்பதில்லை. கடந்த பல வருடங்களாக மிகுந்த கெடுபிடிகளுக்கு மத்தியிலேயே தங்களது உறவுகளை நினைவு கூர்ந்து வருகின்றனர்.
பின்னரும் தங்களது உறவுகளை நினைவு கூற சிங்கள அரசாங்கங்கள் அனுமதிப்பதில்லை. கடந்த பல வருடங்களாக மிகுந்த கெடுபிடிகளுக்கு மத்தியிலேயே தங்களது உறவுகளை நினைவு கூர்ந்து வருகின்றனர்.கடந்த பல ஆண்டுகளாக இலங்கையில் இருந்த எந்த அரசாங்கங்களும் விசாரணைகளை நடாத்தி குற்றவாளிகளை தண்டிக்கவில்லை எனவே இனிமேலாவது சிங்கள
ஆட்சியாளர்கள் தங்களுக்கான நீதி பெற்றுத்தருவார்கள் என்ற நம்பிக்கையை தமிழ் மக்கள் இழந்து விட்டனர்.
தமிழ் மக்கள் தொடர்ந்தும் சிறிலங்கா அரசாங்கத்தை நம்புவதற்கு தயாராக இல்லை. பரந்த நீதிப்பொறிமுறைக்கு ஊடாக தங்களுக்கு சர்வதேச நீதிபதிகளைக் கொண்ட ஒரு சிறப்பு நீதிமன்றம் ஊடாக ஏற்கனவே கண்டறியப்பட்ட உண்மைகளை அடிப்படையாகக் கொண்டு விசாரணை ஒன்றை ஆரம்பித்து குற்றவாளிகளுக்கு தண்டனை வேண்டிக் கொடுப்பதுடன் இதில் பாதிக்கப்பட்டவர்களுக்கான இழப்பீடுகளையும் வழங்கவேண்டும்.
![]()