பலதும் பத்தும்

தென்கிழக்கு அமெரிக்காவில் திடீரென வானில் இருந்து விழுந்த மர்மபொருள்

தென்கிழக்கு அமெரிக்காவின் சில பகுதிகளில் ஒரு மர்மமான பொருள் வானில் இருந்து மின்னலென பாய்ந்து விழுந்துள்ளது.

பகல் வெளிச்சத்திலேயே தெளிவாக தெரிந்த அந்த பொருள், மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த மர்ம பொருள் ஒரு விண்கல்லாகவோ அல்லது விண்வெளிக் குப்பையாகவோ இருக்கலாம் என நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஜார்ஜியா மற்றும் தெற்கு கரோலினா ஆகிய மாநிலங்களில் பிற்பகல் 12:30 மணியளவில் இந்த ஒளிக்கீற்றும், நெருப்பு பந்தும் காணப்பட்டதாக தெரிகிறது.

ஜார்ஜியாவின் ஹென்ரி கவுண்டியில் வசிக்கும் ஒருவர், ‘நெருப்பு பந்து’வின் சத்தத்தைக்கேட்ட அதே நேரத்தில், ஒரு கல் தனது வீட்டின் கூரையை துளைத்துக்கொண்டு உள்ளே விழுந்ததாக புகார் அளித்துள்ளார்.

அந்த கல், கூரையில் ஒரு கோல்ஃப் பந்து அளவிலான துளையையும், லேமினேட் தரையில் ஒரு விரிசலையும் ஏற்படுத்தியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அட்லாண்டாவுக்கு தென்கிழக்கே சுமார் 25 மைல் தொலைவில் விழுந்த இந்த மர்மப்பொருள் குறித்து அதிகாரிகள் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர்.

விண்கற்களும் பிற விண்வெளி குப்பைகளும் பூமியின் வளிமண்டலத்திற்குள் அடிக்கடி நுழையும். ஆனால், பகல் வெளிச்சத்தில் இவ்வளவு பிரகாசமாக தெரியும் ஒரு பொருள் வருவது அரிதான நிகழ்வு என்று கூறப்படுகிறது.

பிரகாசமான ‘நெருப்பு பந்துகள்’, ஒரு பொருள் வளிமண்டலத்திற்குள் நுழையும்போது ஏற்படும் உராய்வு காரணமாக உருவாகின்றன. இதனால் பொருள் கணிசமாக மெதுவாகிறது. பெரும்பாலான பொருட்கள் பூமியைத் தாக்கும் முன் மிகச்சிறிய துண்டுகளாக உடைந்துவிடுகின்றன என்று நாசா தெரிவித்துள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button