முச்சந்தி
டிரம்பின் தந்திரோபாய போர் நிறுத்தம்!… இஸ்ரேல் -ஈரான் இணங்க சாத்தியமா?…. ஐங்கரன் விக்கினேஸ்வரா

ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே முழு அளவிலான போர் நிறுத்த இணக்கப்பாடு ஒன்று எட்டப்பட்டிருப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்திருக்கிறார்.
தீவிரமாக ஏவுகணை தாக்குதல்களை நடத்திய இரு நாடுகளுக்கும் இடையே அடுத்த சில மணி நேரங்களில் நடைமுறைக்கு வரவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்தப் போர் ஓய்வு பன்னிரண்டு மணித்தியாலங்கள் நீடிக்கும் என்று அவர் தனது சமூகவலைத் தளப் பதிவில் குறிப்பிட்டிருக்கிறார்.
இதனை உறுதிப்படுத்தும் வண்ணம், இரண்டு நாடுகளும் இதற்கு இணங்கியிருப்பதாக அமெரிக்க நிர்வாகத்தின் உயர் அதிகாரி ஒருவர் செய்தி நிறுவனங்களிடம் கூறியுள்ளார். ஆனால் இஸ்ரேலிடம் இருந்து எந்த வித அறிவித்தலும் இன்னமும் வெளியாகவில்லை.
அதேவேளை இஸ்ரேல் அதன் தாக்குதல்களை நிறுத்தினால் பதிலடிகளைத் தொடரவேண்டிய நோக்கம் ஈரானுக்கு இல்லை என்று ஈரானிய வெளிவிவகார அமைச்சர் தெரிவித்திருக்கிறார்.
வாஷிங்டனின் தந்திரோபாய போர் நிறுத்தம் :
வாஷிங்டன் மூலமாக தெஹ்ரான் – டெல் அவிவ் இடையே ஒரு மூலோபாய – தந்திரோபாய (Tactical Ceasefire) யுத்த நிறுத்தம் ஏற்பட்டது போல தெரிகிறது.வளைகுடா போரில் ஃபோர்டோ மற்றும் நடான்ஸில் உள்ள ஈரானிய அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்காவின் சமீபத்திய வான்வழித் தாக்குதலான ‘ஆபரேஷன் மிட்நைட் ஹேமர்’ நீண்டகால போருக்கு வழிவகுக்கும் என்று முன்பு எதிர்பார்க்கப்பட்டது.
தொடர்ந்து தீவிரமாக வளர்ந்து வரும் மத்திய கிழக்கு நெருக்கடியில் அமெரிக்க தலையீடு காரணமாக போர் மேலும் தீவிரமடையும் என்றும் கூறப்பட்டது. கட்டாரில் உள்ள அமெரிக்க இராணுவ தளங்கள் மீது ஈரான் பழிவாங்கும் தாக்குதல்களையும், ஹைஃபா மற்றும் டெல் அவிவ் போன்ற இஸ்ரேலிய நகரங்கள் மீது தொடர்ச்சியான வான்வழித் தாக்குதல்களையும் ஈரான் தொடர்ந்து நிகழ்த்தி வருகிறது.
தற்போது வாஷிங்டன் மூலமாக தெஹ்ரான் – டெல் அவிவ் இடையே ஒரு மூலோபாய யுத்த நிறுத்தம் ஆனது, புவிசார் அரசியலில் தீவிர தருணத்தை உருவாக்கியுள்ளது. ஆனால் இந்த போர் நிறுத்தம் ஒரு பரந்த போரின் தொடக்கமா, அல்லது கவனமாக வடிவமைக்கப்பட்ட யுத்த நிறுத்த உத்தியா என்றும் ஊகங்கள் உள்ளன.
2003 ஈராக் படையெடுப்பு :
2003 ஈராக் படையெடுப்பிற்கு முந்தைய நிகழ்வுகளுடன் குறிப்பிடத்தக்க ஒற்றுமையை ஈரான் மீதான தாக்குதல் நிகழ்வுகளும் கொண்டுள்ளன. அன்றும், இன்றும், பேரழிவு ஆயுதங்கள், இஸ்ரேலிய தலைமையின் அழுத்தம் மற்றும் வாஷிங்டனில் உள்ள இஸ்ரேல் ஆதரவு அணிகளின் செல்வாக்கு முக்கிய பங்கு வகித்தன.
இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஈரானின் அணுசக்தி லட்சியங்களைப் பற்றி தொடர்ந்து எச்சரித்து வருகிறார். இது ஒரு காலத்தில் சதாம் உசேனின் அச்சுறுத்தலை அதிகரித்த சொல்லாட்சியை எதிரொலிக்கிறது.
இஸ்ரேலால் பல ஆண்டுகளாக மீண்டும் மீண்டும் கூறப்படும் இந்தக் கதை, ஈரானை இருத்தலியல் அச்சுறுத்தலாக நிலைநிறுத்தி தாக்கி அழிக்க வைத்துள்ளது.
2003 ஈராக் போரை ஆதரித்த பலரும் அடுத்தடுத்த அமெரிக்க நிர்வாகங்கள் மீது கடுமையான நிலைப்பாட்டை எடுக்க தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகின்றனர். இருப்பினும், டொனால்ட் டிரம்பின் புதுப்பிக்கப்பட்ட அரசியல் எழுச்சியின் கீழ் தற்போதைய அமெரிக்க நிர்வாகம் மிகவும் வேறுபட்டது.
போர் சோர்வு, உள் பொருளாதார அழுத்தம் மற்றும் தலையீடு இல்லாததை ஆதரிக்கும் ஒரு அரசியல் இயக்கம் (MAGA) ஆகியவற்றால் வடிவமைக்கப்பட்டுள்ளதாக கருதப்படுகிறது.
ஈரானின் வலிமையான வான்வழி திறன் :

அத்துடன் 2003 ஆம் ஆண்டு ஈராக்கைப் போலல்லாமல், ஈரான் ஒரு பலவீனமான அல்லது தனிமைப்படுத்தப்பட்ட நாடு அல்ல. அது வலிமையான வான்வழித் திறன்களை வளர்த்துக் கொண்டுள்ளது. இஸ்ரேலிய நகரங்கள் மீதான நேரடித் தாக்குதல்கள் இரும்புக் குவிமாடத்தின் செயல்திறனை சவால் செய்து ஆயிரக்கணக்கான இஸ்ரேலியர்களை சைப்ரஸ் மற்றும் கிரேக்கத்திற்கு தப்பி ஓட கட்டாயப்படுத்தியது. இஸ்ரேலின் வெல்லமுடியாத தன்மை பற்றிய கட்டுக்கதை பகிரங்கமாக நிராகரிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் ஈரானின் அணுசக்தித் திட்டம் கணிசமான முன்னேற்றங்களைச் செய்துள்ளது. மேற்குலக நாடுகளின் பொருளாதர தடைகளால் பகுதியளவு சேதமடைந்தாலும், நாடு அதன் அறிவியல் முன்னேற்றத்தைத் தொடர்வதில் மீள்தன்மையைக் காட்டியுள்ளது.
கட்டாரில் அமெரிக்க தளம் தாக்குதல் :
கடந்த சனிக்கிழமை இரவு அமெரிக்க விமானங்கள் ஈரானின் மூன்று அணுச் செறிவூட்டும் தளங்கள் மீது நடத்திய பெரும் தாக்குதல்களுக்குப் பதிலடியாகவே ஈரான் கட்டாரில் அமெரிக்கப் படைத்தளம் மீது ஏவுகணைகளை வீசியிருந்தது.
தனது மண்ணில் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலை அப்பட்டமான ஒரு அத்துமீறல் என்று குறிப்பிட்ட கட்டார் அரசு, ஈரானிய ஏவுகணைகளைத் தனது வான் காப்பு சாதனங்கள் மூலம் தடுத்து அழித்துவிட்டதாகக் குறிப்பிட்டிருந்தது.
ஈரானின் தாக்குதலினால் அமெரிக்கப் படைவீரர்களுக்கோ படைத் தளத்துக்கோ எந்த வித சேதங்களும் ஏற்படவில்லை என்று அதிபர் ட்ரம்ப் தெரிவித்திருக்கிறார். கட்டார் தளம் மீதான தனது தாக்குதல் பற்றி ஈரான் முன்கூட்டியே வோஷிங்டனுக்குத் தெரியப்படுத்தியிருந்தது என்ற தகவல் தற்சமயம் வெளியாகியுள்ளது.
கட்டாரில் அமைந்துள்ள அமெரிக்காவின் மிகப் பெரிய படைத்தளமாகிய அல் உதெய்த் தளம் மீது ஈரான் பால்ஸ்டிக் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்திய பின்னர் இந்தப் போர் நிறுத்த இணக்கப்பாடு பற்றிய அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.
ஆனாலும் ம் ஈரானின் பல பகுதிகள் மீது இஸ்ரேலின் தாக்குதல்கள்
இன்னமும் நீடித்தன என்று செய்திகள் வெளியாகியுள்ளன.
காசிம் சுலைமானி படுகொலை:

2020ஜனவரியில் ஈரானிய குட்ஸ் (QUDS) படைத் தளபதி காசிம் சுலைமானியை அமெரிக்கா படுகொலை செய்ததைத் தொடர்ந்து, இதேபோன்ற ஒரு குறிப்பிடத்தக்க தாக்குதல் நடந்தது. அமெரிக்க தாக்குதல்களுக்கு பதிலளிக்கும் விதமாக, ஈரான் ஈராக்கில் உள்ள அய்ன் அல்-அசாத் விமானப்படைத் தளத்தின் மீது ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியது. இத் தளம் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள மிகப்பெரிய அமெரிக்க தளங்களில் ஒன்றாகும்.
2020 ஏவுகணைத் தாக்குதல் குறிப்பிடத்தக்க கட்டமைப்பு சேதத்தை ஏற்படுத்தியது என்றாலும், அமெரிக்க தரப்பில் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை. இதன் விளைவாக பெரும்பாலும் முன்கூட்டியே எச்சரிக்கைகள் மற்றும் வெளியேற்றம் காரணமாகும். ஒரு முழுமையான போரைத் தடுக்க தெஹ்ரான் வேண்டுமென்றே அமெரிக்க உயிரிழப்புகளைத் தவிர்த்தது என்றும் கூறலாம்.
ஆபரேஷன் மிட்நைட் ஹேமர்:
அமெரிக்கா குண்டு வீச்சில் ஈரானில் உள்ள மூன்று அணுசக்தி நிலையங்களை கடந்த சனியிரவு
தாக்கியதாக டிரம்ப் கூறியுள்ளார். ஃபோர்டோவ், நடான்ஸ் மற்றும் இஸ்ஃபஹானில் உள்ள ஈரானிய அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கப் படைகள் “மிகவும் வெற்றிகரமான” தாக்குதல்களை நடத்தியுள்ளதாகவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார்.
தாக்கியதாக டிரம்ப் கூறியுள்ளார். ஃபோர்டோவ், நடான்ஸ் மற்றும் இஸ்ஃபஹானில் உள்ள ஈரானிய அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கப் படைகள் “மிகவும் வெற்றிகரமான” தாக்குதல்களை நடத்தியுள்ளதாகவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார்.ஆபரேஷன் மிட்நைட் ஹேமர் தாக்குதல் செயல்திறன் மிக்கதாக இருந்ததாக என்ற ஊகங்கள் அதிகரித்து வருகின்றன. ஈரானுடன் ஒரு புதிய ஒப்பந்தத்திற்கான டிரம்பின் அடுத்தடுத்த அழுத்தம் இந்த தாக்குதலின் பின்னரே தொடங்கியது. மேலும் செனட்டர் ஜே.டி. வான்ஸின், நாங்கள் ஈரானுடன் சண்டையிடவில்லை, அதன் அணுசக்தி திட்டத்துடன் மட்டுமே போராடுகிறோம் போன்ற அறிக்கைகளை பார்த்தால் அமெரிக்க தற்போதைய போர் விவகாரத்தில் அழுத்தமாக காலடி எடுத்து வைக்க முடியவில்லை என்றே தோன்றுகிறது.

![]()