முச்சந்தி

வளைகுடா போர்களில் தலையிடும் அமெரிக்காவின் வரலாற்று தவறுகள்!…. ஐங்கரன் விக்கினேஸ்வரா

(ஈரானின் அணுசக்தி திட்டத்தை முடக்கும் ஒரு முயற்சியின் ஒரு பகுதியாக அமெரிக்கா இந்தத் தாக்குதலில் நேரடியாக இணைந்தது. இஸ்ரேல் ஒரு வாரத்திற்கும் மேலாக ஈரானின் வான் பாதுகாப்புகளையும், தாக்குதல் ஏவுகணை திறன்களையும் அழித்து வருகிறது. அணுசெறிவூட்டல் வசதிகளை சேதப்படுத்தவும் தாக்குதல்களை நடத்தியுள்ளது)
வளைகுடா போர்களில் அமெரிக்காவின் வரலாற்று தவறுகள் இன்னமும் தொடர்ந்த நிலையில், ஈரான் மீதான தாக்குதல் இப்பிராந்தியத்தில் மேலும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
அணு கதிர் வீச்சு தாக்கம் :
அமெரிக்கா குண்டு வீச்சில் ஈரானில் உள்ள மூன்று அணுசக்தி நிலையங்களை தாக்கியதாக டிரம்ப் கூறியுள்ளார். ஃபோர்டோவ், நடான்ஸ் மற்றும் இஸ்ஃபஹானில் உள்ள ஈரானிய அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கப் படைகள் “மிகவும் வெற்றிகரமான” தாக்குதல்களை நடத்தியுள்ளதாகவும், அனைத்து அமெரிக்க விமானங்களும் இப்போது ஈரானிய வான்வெளியில் இல்லை என்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இத்தாக்குதலின் காரணமாக அணு ஆயுத கதிர்வீச்சின் தாக்கம் அதிகரிக்லாம் என்றும் கூறப்படுகிறது. ஆனாலும் ஈரானிய அரசு யுரேனியத்தை ஏற்கெனவே நகர்த்தி விட்டோம் என்றும் தெரிவித்துள்ளது. அமெரிக்க தாக்குதலால் எந்த பாதிப்புமில்லை என்றும் ஈரான் தெரிவித்துள்ளது.
ஈரானில் ஃபோர்டோ மீதான அமெரிக்க தாக்குதலுக்குப் பிறகு உள்ளூர்வாசிகள் பெரிய வெடிப்புக்கான எந்த அறிகுறிகளையும் உணரவில்லை என்று ஈரானின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமான IRNA கூறுகிறது. அப்பகுதியில் நிலைமைகள் முற்றிலும் இயல்பானவை என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
வளைகுடா போர்களில் அமெரிக்கா:
அமெரிக்க தலையீடு 1991 வளைகுடா போரிலும் 2003 ஈராக் போரிலும் பாரிய பிராந்திய தாக்கத்தை உருவாக்கியது. குறிப்பாக இந்த போர்களில், அமெரிக்கா எடுத்த முடிவுகள் மற்றும் தலையீடுகள் காரணமாக பல விமர்சனங்கள் எழுந்தன. இந்த போர்களால் ஏற்பட்ட அரசியல், சமூக, மற்றும் பொருளாதார விளைவுகள் பற்றியும் இன்னமும் விவாதிக்கப்படுகிறது.
1991இல் குவைத் மீதான ஈராக்கின் படையெடுப்பு ஆக்கிரமிப்பின் போது அமெரிக்காவின் தலையீடு உடனடியாக தேவைப்பட்டது. அமெரிக்கா பல மேற்குலக நாடுகளுடன் இணைந்து, ஈராக்கை குவைத்திலிருந்து வெளியேற்ற இராணுவ நடவடிக்கை எடுத்தது.
ஆனாலும் இந்தப் போரானது வளைகுடா பிராந்தியத்தில் அமெரிக்காவின் நீண்டகால தலையீட்டிற்கு வழிவகுத்தது. இந்தப் போரால் ஏற்பட்ட சுற்றுச்சூழல் பாதிப்புகள் மற்றும் உயிரிழப்புகள் பற்றியும் பல விமர்சனங்கள் எழுந்துள்ளன.
2003 ஈராக்கில் போர்:
ஈராக் வசம் பேரழிவு ஆயுதங்கள் இருப்பதாக அமெரிக்கா குற்றம் சாட்டியதுடன், 2003இல் அமெரிக்கா நேரடியாக தலையீடு செய்தது. அமெரிக்கா, நேச நாடுகளுடன் இணைந்து, ஈராக் மீது படையெடுத்து சதாம் உசேனை ஆட்சியில் இருந்து அகற்றியது.
இந்தப் போரின் போது, அமெரிக்கா கூறிய காரணங்கள் தவறானவை என்று பின்னர் நிரூபிக்கப்பட்டன. இந்தப் போரால் ஈராக்கில் ஏற்பட்ட அரசியல் ஸ்திரமின்மை, உள்நாட்டுப் போர் மற்றும் பயங்கரவாதத்தின் எழுச்சி ஆகியவை விமர்சனத்திற்கு உள்ளாகின.
அமெரிக்கா, இந்தப் போர்களில் எடுத்த சில முடிவுகள், வளைகுடா பிராந்தியத்தில் ஒரு நிலையற்ற சூழ்நிலையை உருவாக்கியது. மேலும் இந்த பிராந்தியத்தில் அமெரிக்காவின் செல்வாக்கை குறைத்தது என்று பலர் கருதுகின்றனர். அமெரிக்கா, பிராந்தியத்தில் உள்ள பிற நாடுகளின் உள் விவகாரங்களில் அளவுக்கு அதிகமாக தலையிட்டது என்ற குற்றச்சாட்டும் உள்ளது.
ஈரானுடன் நீண்ட பகைமை :
1979இல் உலகுக்கு பெரும் வியப்பை தந்த ஈரானின் இஸ்லாமிய புரட்சியின் போது, அமெரிக்க ஆதரவு அரசர் முகமது ரிசா சா பலவீ ஆட்சியில் இருந்து அகற்றப்பட்டார். இஸ்லாமிய குடியரசின் அயத்தோலா கோமெய்னி தலைமையில் இந்த புரட்சி நடைபெற்றது.
1979 சனவரி 16 அன்று தன் கடமைகளைப் பிரதமரிடம் ஒப்படைத்து விட்டு மன்னர் சா வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றார். அயத்தோலா கோமெய்னி அரசு அமைக்க தெஹ்ரான் திரும்பியபோது அவரைப் பல மில்லியன் ஈரானியர்கள் வரவேற்றனர்.
ஈரான் பணயக்கைதிகள் நெருக்கடி :
நவம்பர் 4, 1979 அன்று ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் அமெரிக்க தூதரக ஊழியர்களும், பொதுமக்களும் போராளிகளால் பணயக்கைதிகளாக பிடிக்கப்பட்டனர்.
இது ஏறத்தாழ 444 நாட்கள் நீடித்தது. இதுவே அமெரிக்க – ஈரான் உறவுகளில் ஒரு பெரிய பிளவை ஏற்படுத்தியது. 1979 ஈரான் புரட்சிக்குப் பிறகு, அமெரிக்க ஆதரவு பெற்ற ஷா ஆட்சியை ஈரான் மக்கள் தூக்கியெறிந்து, அயதுல்லா கொமேனியின் தலைமையில் ஒரு இஸ்லாமிய அரசு நிறுவப்பட்டதன் பின்னர் அமெரிக்காவை எதிரியாகவே ஈரானிய மக்கள் பார்க்கிறார்கள்.
அமெரிக்காவின் குண்டு வீச்சு:
ஈரானில் உள்ள அணுசக்தி நிலையங்களை அமெரிக்கா குண்டுவீசித் தாக்கி உள்ளது. ஃபோர்டோவ், நடான்ஸ் மற்றும் இஸ்ஃபஹானில் உள்ள ஈரானிய அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கப் படைகள் தாக்குதல்களை நடத்தியுள்ளன.
ஈரானின் ஃபோர்டோவ் தளத்தில் ஆறு B-2 குண்டுவீச்சு விமானங்கள் பன்னிரண்டு GBU-57 பதுங்கு குழியை அழிக்கும் குண்டுகளை வீசியுள்ளன. கடற்படை நீர்மூழ்கிக் கப்பல்கள் நடான்ஸ் மற்றும் இஸ்பஹானில் முப்பது டோமாஹாக் ஏவுகணைகளை ஏவியுள்ளன. மேலும் நடான்ஸ் அணு நிலையம் மீது ஒர் B-2 விமானம் இரண்டு bunker buster குண்டுகளை வீசியுள்ளது.
இதேவேளை ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் தொடர்கின்றன. இஸ்ரேலிய படைகள் இராணுவ வசதிகள் மற்றும் அணுசக்தி தளங்களை குறிவைக்கின்றன.
ஈரானிடம் அணு ஆயுதம் ?
ஈரான் அணு ஆயுதத்தை உருவாக்குவதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்பது தவறு என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். இதுகுறித்து டிரம்ப் தனது தேசிய புலனாய்வு இயக்குனர் துளசி கப்பார்டை பகிரங்கமாகக் கண்டித்துள்ளார்.
ஜூன் 13 அன்று இஸ்ரேல் தனது தாக்குதலைத் தொடங்கியதிலிருந்து ஈரானில் 400 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாகவும், குறைந்தது 3,056 பேர் காயமடைந்ததாகவும் ஈரான் கூறுகிறது. இஸ்ரேலில், ஈரானிய தாக்குதல்களில் குறைந்தது 24 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
ஈரானின் அணுசக்தி திட்டத்தை முடக்கும் ஒரு முயற்சியின் ஒரு பகுதியாக அமெரிக்கா இந்தத் தாக்குதலில் நேரடியாக இணைந்தது. இஸ்ரேல் ஒரு வாரத்திற்கும் மேலாக ஈரானின் வான் பாதுகாப்புகளையும், தாக்குதல் ஏவுகணை திறன்களையும் அழித்து வருகிறது. அணுசெறிவூட்டல் வசதிகளை சேதப்படுத்தவும் தாக்குதல்களை நடத்தியுள்ளது.
ஈரான் அணு ஆயுதங்களை பெறுவதற்கு ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன் என்று டிரம்ப் உறுதிபூண்டிருந்தார். இந்த தாக்குதலுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு, டிரம்ப் தனது முடிவை இரண்டு வாரங்களுக்குள் எடுப்பதாகக் கூறியிருந்தார். ஆனால் விரைவில் அதைச் செயல்படுத்தினார்.
இஸ்ரேலிய அதிகாரிகள், பலகுடியரசுக் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களின் தூண்டுதலின் பேரில், இஸ்ரேலின் நடவடிக்கை மூலம் ஈரானின் அணுசக்திதிட்டத்தை நிரந்தரமாக தடை செய்ய டிரம்ப் கணக்கிட்டுள்ளார்.
ஈரானை தனது அணு அபிலாஷைகளை கைவிட சம்மதிக்க வைக்க இரண்டு மாதங்களாக ஒரு இராஜதந்திர முயற்சியை மேற்கொண்டது. இதில் ஈரானியர்களுடன் உயர்மட்ட நேரடி பேச்சுவார்த்தைகளும் அடங்கும். ஆனால் வெற்றி யடையவில்லை.
தற்போது ஈரான் நாட்டின் மீதான போரானது வளைகுடா பிராந்தியத்தில் அமெரிக்காவின் நீண்டகால தலையீட்டிற்கு வழிவகுக்க தொடங்கியுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button