Gen Z தலைமுறையினரை இலக்காகக் கொண்ட ரணிலின் புதிய அரசியல் பார்வை

தற்போதைய கட்சி அரசியலில் பாரம்பரிய முறைகள் மூலம் இனிமேலும் முன்னோக்கிச் செல்ல முடியாது என்று முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
சிறி கொத்தவிலுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் உரையாற்றியபோதே முன்னாள் ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார்.
அங்கு உரையாற்றிய ரணில் விக்ரமசிங்க, ஐக்கிய தேசியக் கட்சியும் ஐக்கிய மக்கள் சக்தியும் இணைந்து செயற்படுவதன் மூலம் அரசியல் வெற்றியடைய முடியும் என சில தரப்பினர் எதிர்பார்த்த போதிலும், பாரம்பரிய அரசியல் முறைகள் மூலம் மட்டுமே அத்தகைய வெற்றியை அடைய முடியாது என சுட்டிக்காட்டினார்.
அரசியல் வெற்றிகளை நோக்கிச் செல்லும்போது புதிய தலைமுறையினரின் பங்கேற்பு அவசியமானது எனச் சுட்டிக்காட்டிய முன்னாள் ஜனாதிபதி, அதற்காக ‘Gen Z’ மற்றும் ‘மிலேனியல்’ (Millennial) இளைஞர் தலைமுறையினரையும் இணைத்துக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார்.
அதன்படி, பாரம்பரிய அரசியல் முறைகளிலிருந்து விலகி, முழுமையான மறுசீரமைப்பை மேற்கொள்வதன் மூலம் எதிர்கால அரசியல் வெற்றிகளை அடைய முடியும் என்றும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,
“ஒரு புதிய பிம்பத்தையும், அதற்கு ஏற்ற மறுசீரமைப்பையும் செய்ய வேண்டியுள்ளது. அரசியலை நோக்கினால் உலக அரசியல் மாறி வருகிறது. நமக்கு வாக்களித்தவர்களில் இருந்து எதிர்கால வாக்காளர்களைப் பார்த்தால், இன்று 15-16 வயதுடையவர்கள் இந்த வாக்காளர் பட்டியலில் அடங்குகிறார்கள். அப்படியானால் அவர்கள் மிலேனியல், Gen Z தலைமுறையினர். அங்கு சுமார் 8 மில்லியன்பேர் உள்ளனர். புதிய குழுக்கள் இருக்கிறார்கள், நாம் இந்தக் குழுக்களைப் பற்றிச் சிந்திக்க வேண்டும். நாம் இந்தக் குழுக்களைப் பற்றிச் சிந்தித்து முன்னோக்கிச் செல்ல வேண்டியுள்ளது. ஒரு கட்சியாக நமக்கு ஒரு புதிய பிம்பம் தேவை. Gen Z குழுவையும், மிலேனியல் குழுவையும் இணைத்துக் கொண்டு நாம் செல்ல வேண்டும்… இவ்வாறு புதிய குழுக்கள் உருவாகியுள்ளன. இவற்றை ஒதுக்கிவிட்டு நம்மால் செல்ல முடியாது. பாரம்பரிய வழியில் செல்ல முடியாது, அப்படிச் செய்தால் இந்தக் குழு தொலைந்துவிடும். இந்தக் குழு இணையவில்லை என்றால், ‘இவர்கள் ஜெயிக்க மாட்டார்கள், ஜெயிக்க வாய்ப்பில்லை, தேவையில்லை’ என்று சொல்லி பாரம்பரிய வாக்காளர்களும் ஒதுங்கி விடுவார்கள்… இதற்கேற்ப கட்சியின் பிம்பத்தை உருவாக்குவோம் என்பதே எனது யோசனை… பாரம்பரிய முறையில் சென்று பலன் கிடைக்கும் என எனக்குத் தோன்றவில்லை. UNPயும் SJBயும் இணைந்தால் வெற்றி பெறலாம் என சிலர் நினைக்கிறார்கள், அது உண்மையல்ல. இப்போது எல்லாமே மாறிவிட்டது. புதிய வாக்காளர்களைக் கவராவிட்டால் நம்மால் முன்னோக்கிச் செல்ல முடியாது. பாரம்பரியத்தைக் கைவிட்டுப் புதிய பாதையில் செல்வோம் என்றே நான் கூறுகிறேன்” என்றார்.
![]()