முஸ்லிம்களுக்கு இந்த அரசால் பெரும் அநீதி; தயாசிறி எம்.பி. கடும் சாடல்

முஸ்லிம் மக்களின் வாக்குகளை முழுமையாகபெற்ற தேசிய மக்கள் சக்தி அரசு தனது அமைச்சரவையில் முஸ்லிம்களை முற்றாகப் புறக்கணித்து துரோகம் செய்த நிலையில் கொழும்பு மாநகர சபையை சூழ்ச்சியினால் இந்த அரசாங்கம் கைப்பற்றி முஸ்லிம்மக்களுக்கு மீண்டுமொரு அநீதியை செய்துள்ளதென ஐக்கிய மக்கள் சக்தியின் குருநாகல் மாவட்ட எம்.பி. தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை இடம் பெற்ற வெளிநாட்டு தீர்ப்புக்களை பரஸ்பரம் ஏற்றங்கீகரித்தல், பதிவு செய்தல் மற்றும் வலுவுறுத்தல் சட்டத்தின் கீழான கட்டளைகள் மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் பேசுகையில்,
கடந்த ஆட்சியாளர்களின் விளையாட்டை இந்த அரசாங்கம் மெல்ல மெல்ல ஆரம்பித்துள்ளது. மேல் நீதிமன்றத்தின் முன்னாள் தலைவர் பந்துல கருணாரத்னவுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதாக பொதுமக்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல குறிப்பிட்டார். ஆனால் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் அந்த கருத்து முழுமையாக மறக்கடிக்கப்பட்டு நீதியரசர் பந்துல கருணாரத்னவுக்கு முழுமையான ஓய்வூதிய விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
மேல் நீதிமன்றத்தின் பதில் தலைவராக நீதியரசர் மொஹமட் லபார் நியமிக்கப்பட்டார். 2024 டிசம்பர் மாதமளவில் உயர்நீதிமன்ற நீதியரசர் பதவிக்கு 15 வெற்றிடங்கள் காணப்பட்ட நிலையில் மொஹமட் லபாரை உயர் நீதிமன்ற நீதியரசராக நியமிக்கும் இயலுமை காணப்பட்டது,இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை அரசியலமைப்பு பேரவை கூடியது.இதன்போது உயர்நீதிமன்ற நீதியரசர் பதவிக்கு மொஹமட் லபாரின் பெயரை ஜனாதிபதி பரிந்துரைத்துள்ளார். ஆனால் இந்த பரிந்துரையை சபை முதல்வரான பிமல் ரத்நாயக்க மீளப்பெற்றுக்கொண்டுள்ளார். உயர்நீதிமன்ற நீதியரசராக மொஹமட் லபாரின் பெரை ஜனாதிபதி பரிந்துரைத்த போது ஏன் அந்த பரிந்துரை மீளப்பெறப்பட்டது ?
மேல் நீதிமன்றத்தின் பதில் தலைவர் மொஹமட் லபார் இன்று புதன்கிழமை ( நேற்று) சேவையில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார்.ஒரு நாள் பதவியில் இருப்பதற்காகவாவது அவரை உயர்நீதிமன்ற நீதியரசராக நியமித்திருக்க வேண்டும். அரசாங்கத்தின் இந்த செயற்பாடு வெறுக்கத்தக்கது.
இந்த அரசாங்கம் முஸ்லிம் சமூகத்துக்கு பாரியதொரு அநீதி இழைத்துள்ளது.முஸ்லிம் மக்களின் வாக்குகளை முழுமையாகபெற்ற தேசிய மக்கள் சக்தி அரசு தனது அமைச்சரவையில் முஸ்லிம்களை முற்றாகப் புறக்கணித்து துரோகம் செய்த நிலையில் கொழும்பு மாநகர சபையை சூழ்ச்சியினால் இந்த அரசாங்கம் கைப்பற்றி முஸ்லிம்மக்களுக்கு மீண்டுமொரு அநீதியை செய்துள்ளது.
சுற்றறிக்கை ஒன்றை தயாரித்துக் கொள்ள முடியாத இந்த அரசாங்கத்தின் முறையற்ற நிர்வாகத்தால் சாதாரண கைதிகளுக்கு வழங்கப்படும் ஜனாதிபதி பொது மன்னிப்பு இன்று கேள்விக்குள்ளாக்கப்பட்டு விட்டது என்றார்.
![]()