சஜித் கட்சியில் பல ‘கறுப்பு ஆடுகள்’; தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவு

எந்தவொரு கட்சியும் குழுவும் பெரும்பான்மை பெற்றுக்கொள்ளாத உள்ளூராட்சி மன்றங்களில் ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் பலர் ஆளும் தேசிய மக்கள் சக்தி கட்சிக்கு ஆதரவு தெரிவித்துள்ளமையால் அவர்களின் கட்சி உறுப்புரிமையை இடைநிறுத்துவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது.
இதனடிப்படையில், தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவு தெரிவித்தமையால், ஐக்கிய மக்கள் சக்தியின் கட்சியில் இருந்து அதிக வாக்குகளைப் பெற்று கொலன்னாவ நகரசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட சுசில் குமார கோஸ்டாவின் கட்சி உறுப்பினர் பதவி இடைநிறுத்தப்பட்டுள்ளது.
மேலும் கட்சியின் தீர்மானத்தை மீறி செயற்பட்டமையால், கந்தகெட்டிய பிரதேச சபைக்கு ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து தெரிவு செய்யப்பட்ட நவரத்ன முதியன்சேலாகே விஜேபாலவின் கட்சி உறுப்புரிமை இடைநிறுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை ஐக்கிய மக்கள் சக்தி கட்சி நிர்வாகக் குழு மற்றும் கட்சி செயற்குழுவின் தீர்மானத்துக்கு எதிராக செயற்பட்ட தம்புள்ளை பிரதேச சபையின் 6 உறுப்பினர்களின் கட்சி உறுப்புரிமை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் கடந்த 16 ஆம் திகதி முதல் இடைநிறுத்தப்பட்டுள்ளது.
உள்ளூராட்சி தேர்தல்கள் நிறைவு பெற்ற பின்னர், உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர், பிரதி தலைவர், மேயர் மற்றும் பிரதி மேயர் பதவிகளுக்கான தெரிவின் போது கட்சியின் தீர்மானங்களை மீறி செயற்படுபவர்களுக்கு எதிராக ஒழுக்காற்கு நடவடிக்கை எடுக்கப்படுமென ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்திருந்தது.
பாராளுமன்ற உறுப்பினர்களின் பதவி இரத்து செய்யப்பட்டது தொடர்பான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை மேற்கோள்காட்டி, இந்த அறிவிப்பை ஐக்கிய மக்கள் சக்தி வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
![]()