முச்சந்தி

இஸ்ரேலின் அதிரடிக்கு ஈரானின் பதிலடி!…  மத்திய கிழக்கின் தீராத போர் பகைமை!.. ஐங்கரன் விக்கினேஸ்வரா

(ஈரானிய தாக்குதலால் டெல் அவிவ் வரலாற்றில் முதன்முறையாக பெரும் அழிவை சந்தித்து உள்ளது. பல டசின் கணக்கான கட்டிடங்கள், வாகனங்கள் ஈரானிய ஏவுகணைகள் மூலம் தாக்கப்பட்டுள்ளன. முந்தைய எந்த யுத்தத்திலும் இத்தகைய தாக்கம் இல்லையென்று கூறப்படுகிறது. தற்போது மத்திய கிழக்கு சமநிலைக்கே பெரும் சவால் உருவாகியுள்ளது)

ஈரான் முழுப் பலத்துடனான பதிலடியை இஸ்ரேலுக்கு வழங்குவதாக அறிவித்துள்ளது. ஈரானின் “உண்மையான உறுதிமொழி”
( Operation True Promise) நடவடிக்கை தற்போது ஆரம்பம் என ஈரானின் இராணுவம் அறிவித்திருக்கிறது.

இம்முறை பதில் தாக்குதல் நடத்துவதற்கு ஈரான் அதிக காலம் எடுத்துக் கொள்ளவில்லை. அதனால் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய விமானப்படைகள் இஸ்ரேலுக்கு உதவ முடியவில்லை போலவும் தோன்றுகிறது. மேலும் பெருமளவான ஏவுகணைகளை ஒரே நேரத்தில் ஏவினால் இஸ்ரேலின் வான் எதிர்ப்புச் சுடுபலத்தை ஓரளவு மேவித்தாக்க ஈரானுக்கு முடிந்துள்ளது.

இஸ்ரேலை தாக்கியடிக்கும் ஈரான்:

முக்கியமான இஸ்ரேலிய (Nevatim Air Base) விமானப் படைத்தளம் மீது ஈரானின் ஏவுகணை தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. நெவாட்டிம் ராணுவ விமான படைத்தளம் மீதான ஈரானின் ஏவுகணை தாக்குதலில் இஸ்ரேலிய விமானப்படையின் பலர் காயமுற்றுள்ள நிலையில் மருத்துவமனைகளுக்கு எடுத்து செல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

இஸ்ரேலில் இழப்புக்கள் தொடர்ந்து ஏற்பட்டால் எதிர்வரும் நாட்களில் ஈரான் மீதான தாக்குதல் தீவிரப்படலாம் என்று அஞ்சப்படுகிறது. இஸ்ரேலிய சேனல் 13 வெளியிட்ட தகவலின்படி,ஈரானிய தாக்குதலால் டெல் அவிவ் வரலாற்றில் முதன்முறையாக பெரும் அழிவை சந்தித்து உள்ளது. பல டசின் கணக்கான கட்டிடங்கள், வாகனங்கள் ஈரானிய ஏவுகணைகள் மூலம் தாக்கப்பட்டுள்ளன. இது போன்று முந்தைய எந்த யுத்தத்திலும் இத்தகைய தாக்கம் இல்லையென்று கூறப்படுகிறது. மத்திய கிழக்கு இராணுவ சமநிலைக்கே பெரும் சவால் உருவாகியுள்ளது.

தற்போது ஈரான் முழுப் பலத்துடனான பதிலடியை வழங்குவதாக அறிவித்துள்ளது. ஈரானின் “உண்மையான உறுதிமொழி” நடவடிக்கையின் மூன்றாம் கட்டம் ஆரம்பம் என ஈரானின் இராணுவம் அறிவித்திருக்கிறது. ஈரானிய ஏவுகணைகள் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியதால், இஸ்ரேல் முழுவதும் சைரன்கள் தொடர்ந்து ஒலித்த வண்ணம் உள்ளன.

மேலும் இஸ்ரேலிய தொலைக்காட்சி நிலையங்கள் ஏவுகணைத் தாக்குதலுக்குப் பிறகு தலைநகர் டெல் அவிவில் புகை மூட்டங்கள் எழுவதைக் காட்டியுள்ளன. ஆனால் உயிரிழப்புகள் குறித்து உடனடி தகவல்கள் எதுவும் இல்லை. பல நகரங்களில் ஈரானிய ஏவுகணைகள் ஏவப்பட்டதாக இஸ்ரேலிய இராணுவம் கூறியுள்ளது. மேலும் நாடு முழுவதும் உள்ள மக்களை பாதுகாப்பான முகாம்களுக்குச் செல்லுமாறு இராணுவம் உத்தரவிட்டுள்ளது.

ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமெனி, இஸ்ரேலிய தாக்குதல்களுக்கு பழிவாங்குவதாக சபதம் செய்துள்ளார். ஈரானிய ஏவுகணைகளால் முழு இஸ்ரேலும் தாக்குதலுக்கு உள்ளாகும் என்று கூறியுள்ளார். தற்போது பதிலடி கொடுக்க ஈரான் தொடங்கிவிட்டது என்றும் ஈரான் அறிவித்திருக்கிறது.

ஈரான் எப்போதுமே ஆபத்தில் :

1979 இஸ்லாமிய புரட்சி நடத்தி மேற்கத்திய ஏகாதிபத்திய சக்திகளை வெளியேற்றியதன்விளைவாக ஈரான் எப்போதுமே தாக்கப்படக் கூடிய ஆபத்திலேயே இருந்தது. அது இப்போது நடந்து விட்டது. ஈரானால் ஒரு போதும் இஸ்ரேல் நடத்தியது போன்ற தாக்குதலை நடத்த முடியாது. அத்துடன் இஸ்ரேலிய தளபதிகளை இலகுவாக நெருங்கவும் முடியாது.

அதனால் தான் ஈரான், ஹிஸ்புல்லா, ஹமாஸ், ஹெளதி, ஈராக் ஹிஸ்புல்லா போன்ற அமைப்புகளை ஆதரித்து இஸ்ரேல் மீது ஒரு அழுத்தத்தை ஏற்படுத்த முயற்சி செய்து செலுத்தி வந்தது. இந்த அமைப்புகள் குறிப்பாக ஹிஸ்புல்லாவின் பலம் காரணமாகவே ஈரான் மீதான தாக்குதல் தள்ளிப் போனது. ஈரானை தாக்கினால் ஹிஸ்புல்லா லெபனானில் இருந்து இஸ்ரேலை தாக்கும் என்ற நிலை இருந்தது. இப்போது ஹிஸ்புல்லா பலவீனம் அடைந்து விட்டது போலிருக்கிறது.

மேலும் ஈரான் மீது நெருக்குதல் செலுத்தினால் இஸ்ரேல் மீதான அழுத்தம் குறைந்து விடும் என்று நீண்ட நாட்களாக டிரம்ப் சொல்லியும் வந்தார். அதன் விளைவே தற்போது ஈரானை இஸ்ரேல் தாக்கி வருகிறது.

இஸ்ரேலிய தாக்குதலும் ஈரானின் பலவீனமும் :

xr:d:DAGCZtQ9jXs:7,j:6001471354689933862,t:24041414

ஈரானின் முக்கிய இடங்களில் கடந்த வெள்ளிக்கிழமை காலை நடத்தப்பட்ட பரந்துபட்ட பெரும் தாக்குதல்களில் ஈரானின் புரட்சிக் காவல் படைகளது (Revolutionary Guard) உயர் தளபதி, இரண்டாம் நிலைத் தளபதி உட்படப் பல முக்கிய தலைமைகள் கொல்லப்பட்டுள்ளனர்.

தெஹ்ரானில் பல கட்டடங்கள் இடிந்து, தீப்பற்றி எரிந்துள்ளன. ஈரான் அணு ஆயுதத் திட்ட நிலையங்கள், ஏவுகணைத் தொழிற்சாலைகள் மற்றும் படைத் தலைமையகங்கள் மீது இஸ்ரேல் நடத்தியுள்ள இந்தத் தாக்குதல்களால் ஏற்பட்ட பேரழிவு ஈரானில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

இஸ்ரேலியத் தாக்குதலில் இருந்து தனது தளங்களையும் தளபதிகளையும் பாதுகாக்கத் தவறியிருப்பது ஈரானின் பெரும் பலவீனத்தை மீண்டும் ஒருமுறை வெளிப்படுத்தியிருக்கிறது.

ஈரானின் தேசிய இராணுவப் பிரிவாகிய புரட்சிக் காவல் படையின் தலைமைத் தளபதி ஹொசைன் சலாமி (Hossein Salami) கொல்லப்பட்டுள்ளார் என்று இஸ்ரேலியப் பாதுகாப்புப் படை அறிவித்திருக்கிறது. தெஹ்ரான் அரசும் அதனை உறுதிசெய்துள்ளது. அதேசமயம் ஈரானிய அரச தொலைக்காட்சி வெளியிட்ட தகவலில், இஸ்ரேலியத் தாக்குதல்களில் அறிவியலாளர்கள் ஆறு பேர் உட்படப் பெண்கள், குழந்தைகளும் 78 மக்கள் உயிரிழந்துள்ளனர் என்று தெரிவித்திருக்கிறது.

இத்தகைய கொடூரமான தாக்குதல் இஸ்ரேலின் நேரடியான “போர்ப் பிரகடனம்” என்று ஈரானிய வெளிவிவகார அமைச்சர் தெரிவித்திருக்கிறார். பதிலடியாக நூற்றுக்கணக்கான ட்ரோன் விமானங்களால் இஸ்ரேலைத் தாக்கியிருக்கிறது தெஹ்ரான். எனினும் இஸ்ரேலிய வான் பாதுகாப்பு சாதனங்கள் அவற்றைத் தடுத்து அழித்திருக்கின்றன என்றும் கூறப்படுகிறது.

அமெரிக்கா தலையிடவில்லை ?

இஸ்ரேலின் தாக்குதல்களோடு அமெரிக்கா எந்த விதத்திலும் சம்பந்தப்படவில்லை என்று அதிபர் ட்ரம்ப் கூறியிருக்கிறார். ஈரான் தன்னுடைய அணு ஆயுதத் திட்டம் தொடர்பில் அமெரிக்காவுடன் ஓர் இணக்கத்துக்கு வரவேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ள அவர், தவறினால் மேலும் இது போன்ற அழிவுகளைச் சந்திக்க நேரிடும் என்று எச்சரித்திருக்கிறார்.

இதற்கு முன்னராக அதிபர் ட்ரம்ப் நாட்டின் பாதுகாப்புச் சபைக் கூட்டத்தைக் கூட்டி இஸ்ரேலியத் தாக்குதலுக்குப் பிந்திய நிலைமைகளை ஆராய்ந்தார் என வெள்ளை மாளிகை அறிவித்தது.

கச்சா எண்ணெய் விலை உயர்வு

இஸ்ரேலின் தாக்குதலுக்கான தனது பதிலடி எல்லை வரம்பு எதுவும் இருக்காது என ஈரான் எச்சரித்திருக்கிறது. இதனால் பிராந்தியத்தில் பெரும் போர்ப் பதற்றம் தோன்றியுள்ளது. உலக சந்தையில் எண்ணெய் விலை பத்து சதவீதத்துக்கும் மேல் உயர்ந்துள்ளது.

ஈரான் மீதான இஸ்ரேலிய தாக்குதலுக்கு பிறகு உலகளாவிய எண்ணெய் விலைகள் உயர்ந்து பங்கு சந்தைகள் சரிந்துள்ளன. இத் தாக்குதல்
செய்தி வெளியான பிறகு கச்சா எண்ணெய் மற்றும் NYMEX லைட் ஸ்வீட் 8% க்கும் அதிகமாக உயர்ந்தன.

எரிசக்தி வளம் மிக்க பிராந்தியத்தில் மோதல்கள் விநியோகத்தை சீர்குலைத்து, குறைந்த எண்ணெய் கிடைக்கும் என்று வர்த்தகர்கள் கவலை கொண்டுள்ளனர். இதற்கிடையில், முதலீட்டாளர்கள் தங்கம் மற்றும் சுவிஸ் பிராங்க் போன்ற பாதுகாப்பான புகலிட சொத்துக்கள் என்று அழைக்கப்படுபவற்றிற்கு மாறியதால், வெள்ளிக்கிழமை ஆரம்பத்தில் ஆசிய வர்த்தகத்தில் பங்குகள் சரிந்தும் உள்ளதாக கூறப்படுகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button