முச்சந்தி

ஈரானில் அணுமையம் தகர்ப்பு, இராணுவ தலைமை அழிப்பு!… மத்திய கிழக்கில் கர்ஜிக்கும் சிங்கமாக இஸ்ரேல்!!…- ஐங்கரன் விக்கினேஸ்வரா

(ஈரானின் அணுசக்தி மையங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடாத்தி, ஈரானின் முக்கிய இராணுவத் தளபதிகள் கொல்லப்பட்டுள்ளனர். எவராலும் அடக்க முடியாத மத்திய கிழக்கின் கர்ஜிக்கும் சிங்கமாக இஸ்ரேல் எழுந்து நிற்கிறது)

ஈரானியப் பகுதிக்குள் இஸ்ரேல் ஆழமான தாக்குதல்களை நடத்தியுள்ளது. மத்திய கிழக்கில் இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான பதற்றத்தை மேலும் தீவிரப்படுத்தும் வகையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதல்களில் பல உயர் மட்ட ஈரானிய இராணுவ மற்றும் அணுசக்தி அதிகாரிகள் உயிரிழந்ததுடன், காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது. இஸ்ரேலின் வலிந்த தாக்குதல், இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால மோதலில் ஒரு திருப்புமுனையாக அமைந்துள்ளது.

மேற்கத்தய ஊடக தகவல்படி, தெஹ்ரானைச் சுற்றியுள்ள குறைந்தது ஆறு இராணுவத் தளங்களை இஸ்ரேல் குறிவைத்து தாக்கியுள்ளது. இதில், ஈரானின் அணுசக்தி திட்டத்தில் பங்கு வகிப்பதாக நீண்டகாலமாக சந்தேகிக்கப்படும் முக்கிய பார்ச்சின் தளமும் அடங்கும். இராணுவத் தளங்கள் மட்டுமல்லாமல், இராணுவத் தளபதிகள் தங்கியிருந்த பலத்த பாதுகாப்புடன் கூடிய இரு குடியிருப்புகள் மற்றும் பல அடுக்குமாடி கட்டிடங்களும் இலக்கு வைக்கப்பட்டு அழிக்கப்பட்டுள்ளன. இவை திட்டமிட்ட படுகொலை முயற்சிகளாகவே தென்படுகின்றன.

இராணுவ தலைமை அழிப்பு:

இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் (IRGC) தளபதி மேஜர் ஜெனரல் ஹொசைன் சலாமி உயிரிழந்ததை, ஈரானிய அரசுத் தொலைக்காட்சி, உறுதிப்படுத்தியுள்ளது. இது ஈரானின் இராணுவ தலைமைக்கு ஒரு பெரும் பின்னடைவாகும். ஈரானின் அணு ஆயுதத் திட்டத்தில் ஈடுபட்டிருந்ததாகக் கூறப்படும் மூன்று மூத்த அணு விஞ்ஞானிகளான ஃபெரெய்டூன் அப்பாஸி மற்றும் மொஹமத் மெஹ்தி தெஹ்ரான்ச்சி ஆகியோரும் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ஈரானின் அணுசக்தி லட்சியங்களின் மையப்பகுதியிலேயே நேரடியாகத் தாக்குதல் நடத்தப்பட்டதைக் காட்டுகிறது.

இந்தத் தாக்குதல்களுக்கு மேலாக, இஸ்ரேலின் உளவு அமைப்பான மொசாட், ஈரானிய எல்லைக்குள் தொடர்ச்சியான இரகசிய நடவடிக்கைகளை மேற்கொண்டதாக ஒரு இஸ்ரேலிய ஆதாரம் வெளிப்படுத்தியுள்ளது. இந்த நடவடிக்கைகள் ஈரானின் மூலோபாய ஏவுகணை அமைப்புகள் மற்றும் வான் பாதுகாப்புத் திறன்களைக் குறிவைத்து, ஒரு பெரிய இராணுவ நடவடிக்கையின் ஒரு பகுதியாக மேற்கொள்ளப்பட்டுள்ளன.

ஜூன் 13ம் நாள் வெள்ளிக்கிழமை அதிகாலையில், தெஹ்ரான் அணு ஆயுதங்களை உருவாக்குவதைத் தடுக்க ஈரானிய அணுசக்தி இலக்குகளைத் தாக்கியதாக இஸ்ரேல் கூறியது. மேலும் நாட்டின் முக்கிய யுரேனியம் செறிவூட்டல் நிலையம் உட்பட வெடிப்புகள் ஏற்பட்டதாக ஈரானிய ஊடகங்களும் தெரிவித்தன.

அணுசக்தி மையங்கள் இலக்கு:

ஈரான் தலைநகர் தெஹ்ரானில் ஏவுகணை மற்றும் அணுசக்தி நிலையங்களை இலக்கு வைத்து இஸ்ரேல் தாக்குதல் நடாத்தியுள்ள தாக்குதலை இஸ்ரேலிய இராணுவ அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

இந்தத் தாக்குதல்கள் ஈரானின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு இலக்குகளை உள்ளடக்கிய முன்கூட்டியே தாக்கும், துல்லியமான, ஒருங்கிணைந்த தாக்குதல் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இஸ்ரேலிய அரசு அவசரநிலை பிரகடனம் செய்துள்ளதுடன்,
ஈரானுக்கு எதிராக பல சுற்றுத் தாக்குதல்களை நடத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இதேவேளை, குறித்த தாக்குதலையடுத்து, அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் பாடசாலைகள் மற்றும் பணியிடங்கள் மூடப்பட வேண்டும் என்றும் கூட்டங்கள் நடத்தப்படக்கூடாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆபரேஷன் ரைசிங் லயன்:

ஈரானின் அணுசக்தித் திட்டத்தின் மீது இஸ்ரேல் தாக்குதல்களை “ஆபரேஷன் ரைசிங் லயன்”(Operation Rising Lion) திட்டத்தின் ஒரு பகுதியாகும் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியுள்ளார். ஈரான் இஸ்ரேலின் உயிர்வாழ்விற்கு
அச்சுறுத்தலாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தற்போது இஸ்ரேல் நாடு பழிவாங்கலை எதிர்பார்க்கிறது என்று கூறியுள்ளார்.
இந்த தாக்குதல் எவ்வளவு சீக்கிரம் நடந்தது என்பதைக் கண்டு வெள்ளை மாளிகை ஆச்சரியப்பட்டிருக்கலாம். ஈரானை தாக்க இஸ்ரேல் முழுமையாக தயாராக இருப்பதாகக் கூறப்பட்ட பின்னர், அமெரிக்கா தனது சில ஊழியர்களை பாக்தாத்திலிருந்து வெளியேற்றியது.

இஸ்ரேல் தீர்க்கமான தருணத்தில்!

இஸ்ரேலின் வரலாற்றில் ஒரு தீர்க்கமான தருணத்தில் இருக்கிறோம், என்று இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். அணு குண்டு, அதன் பாலிஸ்டிக் ஏவுகணை திட்டம் மற்றும் அதன் நடான்ஸ் யுரேனியம் செறிவூட்டல் வசதி ஆகியவற்றில் பணிபுரியும் ஈரானிய விஞ்ஞானிகளை இஸ்ரேல் குறிவைத்தது. இந்த நடவடிக்கை பல நாட்கள் தொடரும் என்றும் அவர் கூறினார்.

தெஹ்ரானில் பல வெடிச்சத்தங்கள் கேட்டதாகவும், நாட்டின் வான் பாதுகாப்பு அமைப்பு முழு எச்சரிக்கையுடன் இருப்பதாகவும் ஈரானின் அரசு தெரிவித்துள்ளது. இஸ்ரேல் பல டசின் கணக்கான அணு மற்றும் இராணுவ இலக்குகளைத் தாக்கியதாக இஸ்ரேலிய இராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

சில நாட்களுக்குள் 15 அணு குண்டுகளை தயாரிக்க போதுமான பொருட்கள் ஈரானிடம் இருப்பதாக அந்த அதிகாரி கூறினார். ஈரானுக்கு எதிராக இஸ்ரேல் அரசு நடத்திய முன்னெச்சரிக்கை தாக்குதலைத் தொடர்ந்து, உடனடி காலக்கெடுவில் இஸ்ரேல் அரசு மற்றும் அதன் பொதுமக்கள் மீது ஏவுகணை மற்றும் UAV (ட்ரோன்) தாக்குதல் எதிர்பார்க்கப்படுகிறது என்று பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் தெரிவித்தார்.

அமெரிக்க தாக்குதலில் ஈடுபடவில்லை:

தற்காப்புக்காக இந்த நடவடிக்கை அவசியம் என்று இஸ்ரேல் நம்புவதால், ஒருதலைப்பட்சமாக இஸ்ரேல் செயல்பட்டதாக அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ கூறியுள்ளார்.

இஸ்ரேல் ஈரானுக்கு எதிராக ஒருதலைப்பட்ச நடவடிக்கை எடுத்ததுள்ளது. ஈரானுக்கு எதிரான தாக்குதல்களில் நாங்கள் ஈடுபடவில்லை. மேலும் பிராந்தியத்தில் அமெரிக்கப் படைகளைப் பாதுகாப்பதே எங்கள் முதன்மையான முன்னுரிமை என்று ரூபியோ ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

கச்சா எண்ணெய் விலை உயர்வு :

இஸ்ரேலிய தாக்குதல் செய்தி வெளியானதும் கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு மூன்று டாலருக்கும் அதிகமாக உயர்ந்தது.

ஈரான் மீதான இஸ்ரேலிய தாக்குதலின் பிறகு உலகளாவிய எண்ணெய் விலைகள் உயர்ந்துள்ளன. இதனால் பல பங்குகள் சரிந்தும் வருகின்றன.
இச் செய்தி வெளியான பிறகு கச்சா எண்ணெய் மற்றும் NYMEX லைட் ஸ்வீட் 8% க்கும் அதிகமாக உயர்ந்தன.

எரிசக்தி வளம் மிக்க பிராந்தியத்தில் மோதல்கள் விநியோகத்தை சீர்குலைத்து, குறைந்த எண்ணெய் கிடைக்கும் என்று சர்வதேச வர்த்தகர்கள் கவலை கொண்டுள்ளனர்.
இதற்கிடையில், முதலீட்டாளர்கள் தங்கம் மற்றும் சுவிஸ் பிராங்க் போன்ற பாதுகாப்பான புகலிட சொத்துக்கள் என்று அழைக்கப்படுபவற்றிற்கு மாறியதால், வெள்ளிக்கிழமை ஆரம்ப ஆசிய வர்த்தகத்தில் பங்குகள் சரிந்துள்ளன.

அமெரிக்கவை மீறும் டெல்அவிவ்:

ஏற்கனவே கடந்த புதன்கிழமை அமெரிக்க அதிகாரிகளுக்கு இஸ்ரேல் ஈரானுக்குள் நடவடிக்கை எடுக்கத் தயாராக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது, இந்த விஷயத்தை நன்கு அறிந்த அதிகாரிகள், வளைகுடாவில் உள்ள அமெரிக்கர்களை இப்பகுதியை விட்டு வெளியேறுமாறு அறிவுறுத்தியது.

மேலும் ஈராக்கில் உள்ள சில அமெரிக்க தளங்களில் ஈரான் பதிலடி கொடுக்கக்கூடும் என்று அமெரிக்கா எதிர்பார்த்ததாகவும் இந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.

எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை ஓமானில் தெஹ்ரானின் அதிகரித்து வரும் யுரேனியம் செறிவூட்டல் திட்டம் குறித்து அமெரிக்க மற்றும் ஈரானிய அதிகாரிகள் ஆறாவது சுற்று பேச்சுவார்த்தை நடத்த திட்டமிடப்பட்டிருந்தனர். ஆனால் இந்த தாக்குதலின் பின்னர், பேச்சுவார்த்தைகள் முடிவுக்கு வந்துள்ளன.

ஈரான் மீதான இஸ்ரேலிய தாக்குதல் நடக்கக்கூடும் என்று டிரம்ப் எச்சரிக்கையாக கூறியிருந்தார். ஆனால் அமைதியான தீர்வுக்கான தனது நம்பிக்கையை மீண்டும் மீண்டும் வலியுறுத்தினார்.

ஈரானின் அணுசக்தி நிலையங்களுக்கு எதிரான தாக்குதலுக்கு இஸ்ரேல் தயாராகி வருவதாக அமெரிக்க உளவுத்துறை முன்னரே சுட்டிக்காட்டியது. மேலும் எதிர் வரும் நாட்களில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தக்கூடும் என்று அமெரிக்க அதிகாரிகள் பெயர் குறிப்பிட விரும்பாத நிலையில் தெரிவித்தனர்.

அமெரிக்காவின் சொல்லையும் மீறி, ஏன் அமெரிக்கவுக்கு சவாலாகவே தற்போது ஈரானை தாக்கியுள்ளது. ஆயினும் ஈரானின் அணுசக்தி மையங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடாத்தி, ஈரானின் முக்கிய இராணுவத் தளபதிகள் கொல்லப்பட்டுள்ளனர். எவராலும் அடக்க முடியாத மத்திய கிழக்கின் கர்ஜிக்கும் சிங்கமாக இஸ்ரேல் எழுந்து நிற்கிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button