முச்சந்தி

பற்றி எரியும் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரம்… குடிபுகுந்தோரை விரட்டும் டிரம்ப் அரசு!… ஐங்கரன் விக்கினேஸ்வரா

( அமெரிக்கா முழுவதும் தென் அமெரிக்க நாடுகளை சேர்ந்த ஸ்பானிஷ் மொழி பேசும் மக்கள் தொடர்ச்சியாக கைது செய்யப்பட்டு வருகின்றனர். முறையான ஆவணங்கள் இருந்தும் சமூக விரோதிகளை போல கைது செய்து நாடு கடத்தப் படுகின்றனர். அமெரிக்கா எந்தவொரு இனத்துக்கும் சொந்தமானது கிடையாது. பல்வேறு நாடுகளை சேர்ந்த மக்கள் அமெரிக்காவில் குடியேறி வாழ்கின்றனர். உண்மையில் டிரம்பின் மூதாதையர்கள்கூட ஜெர்மனியில் இருந்து அமெரிக்காவில் குடியேறியவர்கள் தான்)

இவ்வருட ஆரம்பத்தில் கலிபோர்னியா மாநிலத்தில் வெப்பக் காற்றாலும், வறட்சி நிலைமைகளால் ஏற்பட்ட காட்டுத்தீ லொஸ் ஏஞ்சல்ஸ் நகரையே தீயால் கருக்கியது. கடும் வெப்பநிலையால் தூண்டப்பட்ட மிகப்பெரிய, வேகமாக நகரும் தீயால் முழு நகரமே பாதிக்கப்பட்டது. இவ்ருடம் ஜனவரி மாதம் கலிபோர்னியாவின் வரலாற்றில் மூன்றாவது மிகவும் அழிவுகரமான காட்டுத்தீ ஏற்பட்டது.

இக்காட்டுத் தீ அடங்கி ஐந்து மாத்த்துக்குள் மற்றுமொரு தீ லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் தற்போது பரவியுள்ளது. இம்முறை இயற்கையாக தீ பரவவில்லை. பாரிய களவரங்களால் பல இடங்களில் தீயை அணைக்க முடியவில்லை என்றும் கூறப்படுகிறது.

சட்டவிரோத குடியேற்றவாசிகள்:

அமெரிக்காவில் சுமார் 1.20 கோடி பேர் சட்டவிரோதமாக குடியேறியுள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. இதில் அதிக பட்சமாக மெக்சிகோவை சேர்ந்த 40 லட்சம் பேர் அங்கு சட்டவிரோதமாக தங்கி உள்ளனர். இந்தியாவை சேர்ந்த 7.25 லட்சம் பேர் அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருப்பதாகவும் ஓர் அறிக்கையில் கூறப்படுகிறது.

அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிவர்களுக்கு எதிராக அண்மையில் அதிபர் டொனால்டு டிரம்ப் நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன்படி, கலிபோர்னியா மாகாணத்தின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரின் பல்வேறு இடங்களில் குடியேற்றம் மற்றும் சுங்கத் துறை அதிகாரிகள் கடந்த 6-ம் தேதி சோதனை நடத்தினர். இதில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 44 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த நடவடிக்கையைக் கண்டித்து முகக் கவசம் அணிந்த பலர் தொழில் பூங்காவுக்கு எதிரில் பல நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் போராட்டக்காரர்களுக்கும் எல்லை ரோந்து அதிகாரிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு வன்முறையில் முடிந்தது. இதையடுத்து, போராட்டத்தை மாகாண அரசு ஒடுக்கவில்லை என குற்றம் சாட்டிய அதிபர் டொனால்டு டிரம்ப், சுமார் 2,000 இராணுவ வீரர்களை போராட்டத்தை ஒடுக்கும் பணியில் ஈடுபடுத்த உத்தரவிட்டார்.

இது குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், “கலிபோர்னியா மாகாண ஆளுநர் கவின் நியூஸ்கம் மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸ் நகர மேயர் கரென் பாஸ் ஆகியோருக்கு போராட்டத்தை ஒடுக்கும் திறன் இல்லை.

பிறரின் தூண்டுதலின் பேரிலும் பணம் வாங்கிக் கொண்டும் நடைபெறும் போராட்டங்களை பொறுத்துக் கொள்ள முடியாது. போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் முகக் கவசம் அணிய தடை விதிக்கப்படுகிறது” என கூறியுள்ளார்.

கலிபோர்னியா ஆளுநர் எதிர்ப்பு :

போராட்டத்தை ஒடுக்க ராணுவத்தை ஈடுபடுத்தியதற்கு கலிபோர்னியா ஆளுநர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். டிரம்பின் இந்த நடவடிக்கை பதற்றத்தை மேலும் அதிகரிக்கும் என குற்றம் சாட்டினார். மேலும் அவருடைய நடவடிக்கை மக்களின் நம்பிக்கையை சீர்குலைத்துவிடும் என்றும் தெரிவித்துள்ளது கவனிக்கத்தக்கது.

ஆளுநர் அரசுக்கு எதிராக செயல்படுவதாக அதிபர் டிரம்ப் குற்றஞ்சாட்டி வருகிறார். இதற்குப் பதிலடி கொடுத்துள்ள கலிபோர்னியா ஆளுநர் கவின் நியூஸம், “மாகாண போலீஸாரே கலவரத்தைக் கட்டுப்படுத்த போதும். ஆனால், மாநில நிர்வாகத்தை மதிக்காமல் டிரம்ப் மத்திய படைகளை அனுப்பியுள்ளது தவறான செயல்.” எனக் கண்டித்துள்ளார்.

கலவரத்தை ஒடுக்க ராணுவம்:

தொடரும் தொடரும் கலவரத்தை ஒடுக்கும் பணியில் காவல்துறை, தேசிய காவல் படை வீரர்களுடன் தற்போது யுஎஸ் மரைன்ஸ் என்ற பாதுகாப்புப் படைப் பிரிவினைச் சேர்ந்த 700 வீரர்கள் லொஸ் எஞ்சல்ஸ் வரவழைக்கபட்டு உள்ளனர். இவர்கள் தெற்கு கரோலினா முகாமில் இருந்து வந்துள்ளனர்.

ஆனாலும் தொடர்ந்து அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் நாட்டைவிட்டு வெளியேற்றப்பட்டு வருகின்றனர். டிரம்ப் அரசின் இந்த நடவடிக்கையை கண்டித்து லொஸ் ஏஞ்சலஸ் மற்றும் சான்பிரான்சிஸ்கோவில் பெரும் கலவரம் வெடித்துள்ளது.

பல நாளாக லொஸ் ஏஞ்சல்ஸ் பற்றி எரிகிறது. சக்தி வாய்ந்த யுஎஸ் மரைன்ஸ், அமெரிக்க கடற்படையின் ஒரு பிரிவாக இருந்தாலும் கூட நிலத்தில் ஏற்படும் அதிதீவிரமான கலவரங்களைக் கட்டுப்படுத்தவே பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது. இதிலிருக்கும் வீரர்கள் மிகவும் திறமையானவர்களாக அறியப்படுகின்றனர். மூர்க்கத்தனமான கலவரங்களைக் கையாள்வதில் கைதேர்ந்தவர்கள் என்று அறியப்படுகிறார்கள்.

லொஸ் ஏஞ்சல்ஸில் கலவரம் தொடர்ந்து நடந்து வரும் நிலையில், அந்தக் கலவரத்தை ஒடுக்க டிரம்ப் எடுத்த முக்கிய நகர்வாக இது பார்க்கப்படுகிறது.

டிரம்பின் இனவிரோத கொள்கை:

அமெரிக்கா முழுவதும் தென் அமெரிக்க நாடுகளை சேர்ந்த ஸ்பானிஷ் மொழி பேசும் மக்கள் தொடர்ச்சியாக கைது செய்யப்பட்டு வருகின்றனர். முறையான ஆவணங்கள் இருந்தும் சமூக விரோதிகளை போல கைது செய்து நாடு கடத்தப் படுகின்றனர். அமெரிக்கா எந்தவொரு இனத்துக்கும் சொந்தமானது கிடையாது. பல்வேறு நாடுகளை சேர்ந்த மக்கள் அமெரிக்காவில் குடியேறி வாழ்கின்றனர். உண்மையில் டிரம்பின் மூதாதையர்கள்கூட ஜெர்மனியில் இருந்து அமெரிக்காவில் குடியேறியவர்கள்தான்.

இதுபோல அமெரிக்க மக்கள் தொகையில் சுமார் 97 சதவீதம் பேர் பல்வேறு நாடுகளில் இருந்து குடியேறியவர்கள். 3 சதவீதம் பேர் மட்டுமே அமெரிக்க மண்ணின் மைந்தர்கள். அமெரிக்காவில் வாழும் வெளிநாட்டினரை வெளியேற்ற வேண்டும் என்றால் 97 சதவீதம் பேரையும் வெளியேற்ற வேண்டும். அதிபர் டிரம்ப் இனவெறியுடன் செயல்பட்டு வருகிறார். இவ்வாறு தென் அமெரிக்க நாடுகளை சேர்ந்த மக்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button