முச்சந்தி

தமிழக மீனவர்கள் எல்லை தாண்டினால் உடன் கைது; 15 ஆம் திகதி முதல் கடற்படை விசேட கண்காணிப்பு 

இந்திய மீனவர்களின் எல்லை தாண்டிய வருகையை தடுக்க இலங்கை அரசும், கடற்றொழில் அமைச்சும் தீவிரமாக இருக்கிறது.கடற்படையும் முழுமையான ஒத்துழைப்பை வழங்கி வருகின்றது . எதிர்வரும் 15 ஆம் திகதியில் இருந்து இலங்கை கடல் எல்லையை கடற்படை ஊடாக தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகளை முன்னெடுப்பதோடு,அத்துமீறி வருகின்ற இந்திய மீனவர்களையும் ,அவர்களின் படகுகளையும் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என கடற்றொழில் அமைச்சர் உறுதியளித்துள்ளதாக வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் செயலாளர் என்.எம்.ஆலம் தெரிவித்தார்.

-மன்னாரில் உள்ள அலுவலகத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,

கடற்றொழில் அமைச்சரை புதன்கிழமை மீனவ சங்கங்களின் பிரதிநிதிகள் இணைந்து அமைச்சரின் அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடி இருந்தோம்.குறித்த சந்திப்பானது எதிர் வருகின்ற 15ஆம் திகதி தமிழக மீனவர்களின் அத்து மீறிய எல்லை தாண்டிய வருகை தொடர்பாகவும்,குறித்த விடையம் தொடர்பாக அரசு முன்னெடுக்க திட்டமிட்டுள்ள நடவடிக்கை தொடர்பாகவும் வட பகுதி மீனவர்கள் சார்பாக நாங்கள் எதிர்நோக்கவுள்ள பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடுவதற்காகவும் நாங்கள் அமைச்சர் அலுவலகத்திற்கு சென்றிருந்தோம்.குறித்த சந்திப்பில் கடற்றொழில் அமைச்சின் செயலாளரும் கலந்து கொண்டிருந்தார்.

தமிழக மீனவர்களின் 60 நாள் மீன்பிடி தடைக்காலம் இம்மாதம் 15 ஆம் திகதியுடன் நிறைவடைகிறது.15 ஆம் திகதிக்கு பின்னர் அவர்களின் எல்லை தாண்டிய வருகை நிச்சயமாக எமது கடல் பகுதியில் இடம் பெறுவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது.அதை அரசாங்கமும் கடற்றொழில் அமைச்சும் எவ்வாறு தடுக்க இருக்கிறது?வட பகுதி மீனவர்கள் இதனை எவ்வாறு முகம் கொடுக்க போகிறார்கள் என்ற விடயங்களை நாங்கள் ஆழமாக கலந்துரையாடினோம்.

எதிர்வரும் 15 ஆம் திகதியில் இருந்து இந்திய மீனவர்களின் அத்து மீறிய வருகையை தடுப்பதற்கான திட்டம் என்ன? என்பது குறித்து கடல்தொழில் அமைச்சருடன் கலந்துரையாடினோம்.இவ்விடயம் தொடர்பாக வடபகுதி மீனவர்களுக்கும் விளக்கத்தை தெரிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் முன் வைத்திருந்தோம்.இந்திய மீனவர்களின் எல்லை தாண்டிய வருகையை தடுக்க இலங்கை அரசும்,மீனவ அமைச்சும் தீவிரமாக இருக்கிறது.கடற்படையும் முழுமையான ஒத்துழைப்பை வழங்கி வருகின்றது.

எனவே எதிர்காலத்தில் இந்திய மீனவர்களின் அத்து மீறிய வருகையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுப்போம்.எதிர்வரும் 15 ஆம் திகதியில் இருந்து இலங்கை கடல் எல்லையில் கடற்படை ஊடாக தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகளை முன்னெடுப்பதோடு ,அத்துமீறி வருகின்ற இந்திய மீனவர்களையும்,அவர்களின் படகுகளையும் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். வட பகுதி மீனவர்கள் அச்சம் கொள்ள தேவையில்லை.அரசு தனது செயல்பாட்டில் உறுதியாக இருக்கிறது என்கிற தகவலை கடற்றொழில் அமைச்சர் உறுதியாக தெரிவித்திருந்தார்.

அரசாங்கம் அத்துமீறிய மீனவர்களுக்கு எதிராக நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் தீவிரமாக உள்ளது என்பதை நாங்கள் அறிகிறோம்.எனினும் கடற்படை,அரசாங்கம் இவ்விடயத்தில் கவனயீனமாக இருப்பார்கள் எனினும் எமது வாழ்வாதாரம் கேள்விக்குறியாகிவிடும் என்கின்ற அச்சம் மீனவர்களிடம் காணப்படுகின்றது என்கிற விடயத்தை மீனவ சங்கங்களின் பிரதிநிதிகள் அமைச்சரிடம் சுட்டிக்காட்டினர் என்றார்.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button