பலதும் பத்தும்

கைப்பேசி நிறுவனங்களை மிரட்டும் டிரம்ப்

அமெரிக்க ஜனாதிபதி டோனல்ட் டிரம்ப் மே 23ஆம் தேதி ஆப்பிள் உள்ளிட்ட கைப்பேசி நிறுவனங்களுக்கு 25 விழுக்காடு அடிப்படை வரி விதிக்கப்போவதாக மிரட்டியுள்ளார்.

கைப்பேசிகளுக்கு வரி இருக்கக்கூடாது என்றால் அவற்றை அமெரிக்காவில் தயாரிக்க வேண்டும் என்று டிரம்ப் தெரிவித்துள்ளார்.

முதலில் ஆப்பிள் நிறுவனத்தை மட்டும் சுட்டிக்காட்டி வரி விதிக்கப்போவதாகத் டிரம்ப் கூறியிருந்தார். ஆனால் ஒரு நிறுவனத்தின்மீது மட்டும் நடவடிக்கை எடுக்கக்கூடாது என்பதால் மொத்தக் கைப்பேசி நிறுவனங்களுக்கும் தற்போது அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

“ஒரு நிறுவனத்திற்கு மட்டும் வரி என்றால் அது நியாயமாக இருக்காது. சாம்சுங் உள்ளிட்ட அனைத்துக் கைப்பேசி நிறுவனங்களும் புதிய விதிமுறையைப் பின்பற்ற வேண்டும்,” என்றார் அவர்.

இந்த வரிவிதிப்பு ஜூன் மாத இறுதியில் நடப்புக்கு வரும் என்று கூறப்படுகிறது.

ஆப்பிள் நிறுவனம் அதன் பொருள்களை அமெரிக்காவில் வடிவமைத்து சீனாவில் தயாரிக்கும். இது டிரம்புக்கு பிடிக்காத ஒன்றாக உள்ளது.

சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் வர்த்தகப் பூசல் இருப்பதால் பிரச்சினை அதிகரிக்கும் என்று கருதிய ஆப்பிள் தனது தயாரிப்பை இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு மாற்றுவதாக அறிவித்தது.

இருப்பினும் அதற்கும் டிரம்ப் நிர்வாகம் எதிராக உள்ளது. இதனால் ஆப்பிள் நிறுவனம் சற்று தடுமாற்றத்துடன் காணப்படுகிறது.

அமெரிக்கர்கள் பயன்படுத்தும் கைப்பேசிகள் அமெரிக்காவில் தயாரிக்கப்பட வேண்டும், வேறு நாடுகளில் தயாராகும் கைப்பேசிகள் வேண்டாம் என்று தாம் ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை அதிகாரி டிம் குக்கிடம் தெரிவித்ததாகத் டிரம்ப் குறிப்பிட்டார்.

ஐபோன்களை அமெரிக்காவில் தயாரிப்பது எளிதான காரியம் இல்லை. அதற்கான கட்டமைப்பும் கொள்கைகளும் உருவாக்கப் பல ஆண்டுகள் ஆகும் என்று கவனிப்பாளர்கள் கூறுகின்றனர்.

மற்ற நாடுகளில் ஆப்பிள் நிறுவனத்தின் பொருள் தயாரிக்கப்பட்டாலும் சீனாவில் மட்டும் அது கிட்டத்தட்ட 90 விழுக்காடு பொருள்களைத் தயாரிக்கிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button