இலங்கை

அநுர ஆட்சியாளர்களுக்கு  தமிழர்கள் வாக்களித்தால் சிங்கள- பெளத்த மயமாக்கலிற்கு இடமளிக்கும்

இனவாதக் கட்சிகள் என்று தேசியமக்கள் சக்தியினர் சொல்கின்ற கட்சிகளின் அதேவேலைத் திட்டங்களைத் தான் தற்போதைய அநுர ஆட்சியாளர்களும் முன்னெடுக்கின்றார்கள் என்பது நிரூபிக்கப்பட்டுள்ள சூழ்நிலையில் எமது உள்ளுராட்சி சபைகளும் இவ்வாறானவர்களின் கைகளுக்குப் போனால் முற்றுமுழுதாகதத் தமிழ்மக்கள் தாமாக விரும்பிச் சிங்களப் பெளத்த மயமாக்கத்திற்கு இடமளிப்பதாகவே அமையும் என தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், யாழ் மாவட்ட எம்.பி.யுமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

யாழ்.கொக்குவிலில் அமைந்துள்ள தமிழ்த்தேசியமக்கள் முன்னணியின் தலைமை அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்த

அவர் மேலும் கூறுகையில்,

ஒரு உள்ளுராட்சி சபையின் எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ளுராட்சி சபையின் அனுமதியின்றி எந்தவிதக் கட்டுமானங்களையும் மேற்கொள்ள முடியாது. தையிட்டி விகாரை சட்டவிரோத விகாரை என்பதை நாங்கள் துணிந்து சொல்லக்கூடிய நிலைமை இருப்பதற்குக் காரணம் வலிகாமம் வடக்குப் பிரதேச சபையின் அனுமதி இல்லாமல் கட்டப்பட்டதே ஆகும். அதேபோன்று நாவற்குழியில் ரயில்வேத் திணைக்களத்துக்குரிய காணியில் அமைக்கப்பட்டிருந்தாலும் அனுமதி பெறப்படாது அமைக்கப்பட்டமையால் அதுவும் சட்டவிரோதமே.

எனினும், துரதிஷ்டவசமாகத் தமிழ்த்தேசியம் பேசிக் கொண்டிருந்த தமிழரசுக் கட்சியின் உறுப்பினர்கள் குறித்த விகாரை அமைக்கப்பட்ட பின்னர் உள்ளுராட்சி சபை ஊடாக அனுமதி கொடுத்தமையால் குறித்த விகாரை சட்டப்படி அமைக்கப்பட்டதொரு விகாரையாக மாற்றியமைக்கப்பட்டது.

ஆகவே, இதுபோன்ற சிங்களமயமாக்கல் வேலைத் திட்டங்களைத் தடுப்பதாகவிருந்தால் வடக்கு- கிழக்கில் உள்ளுராட்சி சபைகள் அனைத்தும் நேர்மையான வகையில் தமிழ்த்தேசிய நிலைப்பாட்டையும், அடையாளங்களையும் காப்பாற்றுகின்ற வகையில் செயற்படும் தரப்பின் கைகளுக்குச் செல்ல வேண்டியது அவசியம்.

இனவாதக் கட்சிகள் என்று தேசியமக்கள் சக்தியினர் சொல்லுகின்ற கட்சிகளின் அதேவேலைத் திட்டங்களைத் தான் தற்போதைய ஆட்சியாளர்களும் முன்னெடுக்கின்றார்கள் என்பது நிரூபிக்கப்பட்டுள்ள சூழ்நிலையில் எமது உள்ளுராட்சி சபைகளும் இவ்வாறானவர்களின் கைகளுக்குப் போனால் முற்றுமுழுதாகதத் தமிழ்மக்கள் தாமாக விரும்பிச் சிங்களப் பெளத்த மயமாக்கத்திற்கு இடமளிப்பதாகவே அமையும்.

எனவே, இதனை வடக்கு-கிழக்கு தமிழ்மக்கள் நன்கு விளங்கிக் கொண்டு தமிழ்த்தேசியத்திற்கு விசுவாசமாகவும், நேர்மையாகவும் செயற்படும் சைக்கிள் சின்னத்தில் போட்டியிடும் தமிழ்த்தேசியப் பேரவைக்கு எதிர்வரும் உள்ளுராட்சி சபைத் தேர்தலில் அமோக ஆணையை வழங்க முன்வர வேண்டும் என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *