அநுரகுமாரவின் யாழ் உரை ஜே.வி.பி.யின் இனவாத முகம்

கடந்த காலத்தில் இருந்த அரசாங்கங்கள் எல்லாம் இனவாத அரசாங்கங்கள் என்று கூறி ஆட்சிக்கு வந்த ஜே.வி.பி. அரசாங்கம், வடக்கு,கிழக்கு சார்ந்த எந்த ஒரு விடயத்திலும் கடந்த அரசாங்கங்களின் செயற்பாடுகளில் இருந்து வித்தியாசமாக செயல்படவில்லை என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ் மாவட்ட எம்.பி.யுமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.
ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க யாழ்ப்பாணத்தில் தெரிவித்த கருத்துகள் தொடர்பாக கொக்குவிலில் உள்ள தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைமை அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்த கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மேலும் தெரிவிக்கையில்,
பாராளுமன்ற தேர்தலில் யாழ்ப்பாண மக்கள் தங்களுக்கு ஆணை தந்ததாக கூறும் ஜே.வி.பி. அரசாங்கம் தையிட்டி விகாரை விவகாரத்தில் மற்றைய அரசியல்வாதிகளை பற்றிப் பேசாமல் தையிட்டி விகாரை பிரச்சினைக்கு என்ன தீர்வு என்பதை வெளிப்படையாக கூற முடியுமா?
ஜனாதிபதி தேர்தலுக்கு முன்பதாகவும் பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பதாகவும் எத்தனையோ வாக்குறுதிகள் ஜே.வி.பி.யின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் முன்வைக்கப்பட்டன .தமிழ் அரசியல் கைதிகளின் அனைவரும் விடுவிக்கப்படுவார்கள் என்ற வாக்குறுதி வழங்கப்பட்டது. பயங்கரவாத தடைச் சட்டம் முற்று முழுதாக நீக்கப்பட்டு அதற்கு பதிலாக எந்த விதமான சட்டமும் அவசியமில்லை என்று அடிப்படையிலே தங்கள் அரசாங்கம் நடந்து கொள்ளும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டது. அது சம்பந்தமாக அநுர அரசாங்கம் வந்து 6 மாதங்களாகியும் எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை.
தனியார் காணிகளை ஆக்கிரமித்து வைத்துள்ள இராணுவத்தின் பிடியில் இருந்து காணிகள் விடுவிக்கப்படும் என்ற கருத்து தேர்தலுக்கு முன்பாக பல தடவைகள் சொல்லப்பட்டிருந்தாலும் கூட இதுவரைக்கும் தமிழ் மக்களுடைய காணிகள் திரும்பவும் வழங்குவதற்கான ஆக்கபூர்வமான எந்த நடவடிக்கையையும் எடுத்ததாக இல்லை.
அப்படிப்பட்ட ஒரு சூழலில் ஏற்கனவே கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் சம்பந்தமாக எந்த ஒரு கருத்தையும் தெரிவிக்காமல், தையிட்டி சம்பந்தமாக பாதிக்கப்பட்ட தனியார் காணி உரிமையாளர்கள் நாக விகாரை பிக்கு உள்ளிட்டோர் பேசி ஒரு முடிவு காணலாம். ஆனால் அரசியல்வாதிகள்,அரசியல் தலைவர்கள்,கட்சிகள் இதில் தலையிட்டுக் கொண்டிருக்கும் வரை இதனை செய்ய முடியாது என்ற கருத்தை ஜனாதிபதி சொல்லியிருந்தார்.
வடக்கில் செயற்படும் கட்சிகள் இனவாத நோக்கத்தோடு செயல்படுகின்றன . நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு தடையாக அவர்களின் தலையீடுகள் அமைந்துள்ளன என்ற தொனியில் தனது பேச்சில் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்
தையிட்டியில் கட்டப்பட்டுள்ள விகாரை முழுக்க முழுக்க சட்டவிரோதமானது. அதில் தொல்லியல் திணைக்களம் சம்பந்தப்படவில்லை. தொல்பொருள் தொடர்பாக முக்கியத்துவமிக்க எந்த ஒரு கண்டுபிடிப்பும் அந்த நிலப்பரப்பில் இல்லை.தையிட்டி விகாரைக்கு அடிக்கல் நாட்டிய காலம் தொடக்கம் அந்த பாதிக்கப்பட்ட காணி உரிமையாளர்களுக்கு பக்கபலமாக அவர்களின் பக்கம் நாங்கள் நின்று குரல் கொடுத்து வருகிறோம்.
எந்த இடத்திலும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியோ வேறு எந்த அரசியல் கட்சியோ அந்த பாதிக்கப்பட்ட குடும்பங்களின் விருப்பங்களுக்கு மாறாக அதனை மீறி எந்த கருத்தையும் சொன்னதாகவும் இல்லை. கோரிக்கைகளை முன்வைக்கவும் இல்லை.
அப்படிப்பட்ட நிலையில் இரண்டு வருடமாக நாங்கள் பாதிக்கப்பட்ட மக்களோடு துணையாக நின்று போராடி வரும் சூழலில் ஆறு மாதங்களுக்கு முன்னர் ஆட்சிக்கு வந்த அநுர குமார திஸாநாயக்க யாழ்ப்பாணத்துக்கு வந்து அரசியல்வாதிகளின் தலையீட்டால்தான் பிரச்சினையை தீர்க்க முடியவில்லை என்று கூறுவதை ஏற்க முடியாது.
காணி உரிமையாளர்கள் வித்தியாசமான நிலைப்பாட்டிலும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி வித்தியாசமான நிலைப்பாட்டிலும் இருப்பது போன்ற அடிப்படையில் ஜனாதிபதியின் உரை காணப்பட்டது.
இதுக்கு முதல் ஆட்சிக்கு வந்த அனைத்து அரசாங்கங்களும் இனவாத அரசாங்கங்கள். சிங்கள,தமிழ் மக்களுடைய பிரச்சினைகளை தூண்டிவிட்டு மோதவிட்டு 76 வருடங்கள் ஆட்சி செய்த தரப்புகள் என்று சொல்லி தாம் இனவாதத்துக்கு இடமளிக்க மாட்டோம் என கூறியே ஜே.வி.பி. அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது. ஆனால் தையிட்டி விகாரை பிரச்சினையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சார்ந்து நாம் குரல்கொடுக்கும்போது எமக்கு இனவாத சாயம் பூசப்படுகிறது.
பாதிக்கப்பட்ட மக்களுக்காகவே நாங்கள் செயல்படுகிறோம். எங்கள் மக்கள் விரும்பினால் நாங்கள் இந்த போராட்டத்தில் இருந்து ஒதுங்குவதில் எந்தப் பிரச்சினையும் கிடையாது. பொறுப்போடு கூறுகின்றோம் எங்கள் மக்களுடைய கோரிக்கைகளை மாற்றியமைத்து அவர்களை அச்சுறுத்தி போலியான கருத்துக்களை சுட்டிக்காட்டி அந்த மக்களை பிழையாக வழிநடத்துவதற்கு இந்த ஜே.வி.பி. அரசாங்கம் முயன்றால் அவர்களே ஏமாற்றப்படுவார்களே தவிர மக்களோ தமிழ் கட்சி தலைமைகளோ ஒரு நாளும் ஏமாற்றப்படமாட்டார்கள்.
இந்தத் தேர்தலில் ஜே.வி.பி.யை மக்கள் இனம் கண்டு கொள்ள வேண்டும். இது தேசிய மக்கள் சக்தி அல்ல. அநுர குமார திஸாநாயக்க யாழ்ப்பாணம் வந்து பேசிய அனைத்துமே ஜே.வி.பி.யினுடைய இனவாத சித்தாந்தமே. உண்மையான ஜே.வி.பி.யினுடைய முகமே அது. அவர்களுக்கும் மற்ற இனவாதிகளுக்கும் இடையில் எந்த ஒரு வித்தியாசமும் இல்லை என்பதை அவர்கள் நிரூபித்துள்ளார்கள். அதை எமது மக்கள் விளங்கிக் கொண்டு எதிர்காலத்தில் முடிவுகளை எடுக்க வேண்டும் என்றார்.
![]()