இலங்கை

இந்து, கிறிஸ்தவம், இஸ்லாம் மதத்தவர்களை துன்புறுத்தாதீர்

மட்டக்களப்பு மாவட்டத்தில் தாந்தா மலை ஆலயம் தமிழர்களின் தொன்மையை பறைசாற்றி நிற்கிறது. இந்த ஆலயத்தை புனரமைப்பதற்கு தொல்பொருள் திணைக்களமும், அரச நிகழ்ச்சி நிரலில் உள்ள நிறுவனங்களும் தடையாக செயற்படுவதாக தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட எம்.பி.யான இ. ஸ்ரீநாத் குற்றம்சாட்டினார்.

பாராளுமன்றத்தில் நேற்று திங்கட்கிழமை இடம் பெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் புத்தசாசனம், சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு மற்றும் சுற்றாடல் அமைச்சு ஆகியவற்றின் மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு குற்றம்சாட்டிய அவர் மேலும் பேசுகையில்,

அனைத்து இனத்தவர்களையும் ஒன்றிணைத்து செயற்பட வேண்டும் என்ற ஜனாதிபதியின் எண்ணக்கருவுக்கு அமைய அரசாங்கம் பயணிக்கிறது. ஆனால் நடப்பு சம்பவங்கள் ஜனாதிபதியின் எண்ணக்கருவுக்கு எதிர்மறையானதாக இருக்கின்றன

சிறுபான்மை மக்களின் மனங்களை பாதிக்கும் வகையிலான செயற்பாடுகள் தற்போதும் முன்னெடுக்கப்படுகின்றன . பாரம்பரியமான தொன்மையை கொண்டுள்ள இந்து, கிறிஸ்தவம், முஸ்லிம் மற்றும் பௌத்தம் ஆகிய மதங்கள் சமனிலையான முறையில் பார்க்கப்பட வேண்டும். பௌத்த மதத்துக்கு வழங்கப்படும் அந்தஸ்து ஏனைய மதங்களுக்கும் வழங்கப்பட வேண்டும்.

வடக்கு ,கிழக்கு மாகாணங்களில் பண்டைய தொன்மையுடன் பல ஆலயங்கள் காணப்படுகின்றன. அவற்றை பேணிப் பாதுகாக்க வேண்டும்.இந்த ஆலயங்களை புனரமைக்க வேண்டிய பொறுப்பு புத்தசாசனம் மற்றும் மத விவகாரங்கள் அமைச்சுக்கு உண்டு. மட்டக்களப்பு மாவட்டத்தில் தாந்தா மலை ஆலயம் தமிழர்களின் தொன்மையை பறைசாற்றி நிற்கிறது. இந்த ஆலயத்தை புனரமைப்பதற்கு தொல்பொருள் திணைக்களமும், அரச நிகழ்ச்சி நிரலில் உள்ள நிறுவனங்களும் தடையாக செயற்படுகின்றன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் , மண்டூர் முருகன் ஆலயம் உட்பட பல ஆலயங்கள் உள்ளன. இவற்றை புனரமைப்பதற்கு கடந்த காலங்களில் நிதி ஒதுக்கப்படவில்லை. அதேபோன்று 500 – 600 ஆண்டுகால பழமைவாந்த தேவாலயங்களும் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ளன இவற்றை அபிவிருத்தி செய்ய கடந்த காலங்களில் நிதி ஒதுக்கப்படவில்லை..

அண்மையில் ஹபரணை பகுதியில் உள்ள இந்து ஆலயத்தின் முகப்பினை மறைக்கும் வகையில் பஸ் தரிப்பிட நிலையம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இது இந்துக்களின் மனங்களை பாதித்துள்ளது. இந்த அரசாங்கம் இந்து, கிறிஸ்தவம் மற்றும் முஸ்லிம் மக்களின் மனங்களை வருத்தும் வகையில் செயற்படாது என்று கருதுகிறோம். இந்த முறையற்ற வகையில் செயற்பட்டவர்கள் யார் என்பதை குறிப்பிட வேண்டும்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் பெருந்தொகையாக குளங்கள் தொல்பொருள் திணைக்களத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன. இதனால் அப்பிரதேசத்தில் விவசாய நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன. ஆலயங்களை புனரமைப்பதற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.. தொல்பொருள் திணைக்களத்தின் கட்டுப்பாட்டில் உள்ள காணிகளை விடுவிக்க வேண்டும் என்றார்.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button