நாட்டில் தண்டனையிலிருந்து தப்ப முடியும் என்று நம்பிக்கை!; அண்மைகால கொலைகள் வெளிப்படுத்துவது இதுவே

அரசாங்கம் மாறினாலும் தாங்கள் தண்டனையின் பிடியிலிருந்து தப்ப முடியும் என்ற நம்பிக்கையுடன் தனிநபர்களும் அரசநிறுவனங்களும் செயற்படுவதை நீதிமன்ற கொலை உட்பட அண்மைகால கொலைகள் வெளிப்படுத்தியுள்ளன என ‘அனைவருக்குமான நீதி’ என்ற அமைப்பு தெரிவித்துள்ளது.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம் ஏ சுமந்திரன்,பேராசிரியர் ஜயதேவ உயங்கொட,இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் முன்னாள் தலைவர் சாலிய பீரிஸ் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எரான் விக்கிரமரட்ண உட்பட பலர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இலங்கையில் சட்டத்தின் ஆட்சி பாதுகாப்பு சட்டமொழுங்கினை பேணுவதற்காக உருவாக்கப்பட்ட முக்கிய நிறுவனங்கள் குறித்து கேள்வி எழுப்பியுள்ள சமீபத்தைய கொலைகள் குறித்து நாட்டின் கவனத்தை ஈர்க்க விரும்புகின்றோம்.
கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் பொலிஸாரின் பாதுகாப்பில் இருந்த வேளை சந்தேகநபர் ஒருவர் பட்டப்பகலில் சுட்டுக் கொல்லப்பட்டமை உட்பட அதிர்ச்சியூட்டும் கொலைகள் பலவற்றை பெப்ரவரி மாதம் சந்தித்துள்ளது.
இதன் பின்னர் கொட்டாஞ்சேனையில் பொலிஸ் காவலில் இருந்த இருவர் சுட்டுக் கொல்லப்பட்டமை குறித்த தகவல் வெளியானது.
அதேவாரத்தில் வேறு சில சம்பவங்களும் இடம்பெற்றன மித்தெனியாவில் தந்தையும் இரண்டு பிள்ளைகளும் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.
நாட்டில் சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டுவதற்கும் தங்களின் காவலில் இருந்தவர்களிற்கு பாதுகாப்பை வழங்குவதற்கும் தவறியுள்ள அரச கட்டமைப்புகளான பொலிஸ் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகளின் பங்கு மற்றும் பொறுப்பு குறித்து இந்த கொலைகள் பல கேள்விகளை எழுப்பியுள்ளன.
இந்தக் கொலைகள் இலங்கையில் சட்டமொழுங்கு வீழ்ச்சியடைவதை வெளிப்படுத்தியுள்ளன. இலங்கையில் அரசியல் மாற்றம் ஏற்பட்ட சூழமைவில் இந்த நிலை அம்பலமாகி வருகின்றது.
முன்னொரு போதும் இல்லாத பொருளாதார நெருக்கடி உயர் குழாம் தலைமையிலான அரசியல் ஆட்சி, ஆழமாக வேரூன்றிய ஊழல், சட்டத்தின் ஆட்சி அற்றுப்போனமை போன்ற காரணங்களால் இலங்கை மக்கள் முறைமை மாற்றத்திற்காகவும் பொறுப்புக் கூறல் மற்றும் வெளிப்படை தன்மை காணப்படும் அரசியல் கலாசாரத்திற்காகவும் போராடினார்கள்.
2024 இல் இந்த வேண்டுகோள்கள் ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்கவிற்கும் தேசிய மக்கள் சக்திக்கும் பெரும் ஆணையை வழங்கின.
மக்கள் தலைமையிலான தேர்தல் வெளிப்பாடுகள் கடந்த காலத்தின் பல சுற்று வன்முறைகள் மற்றும் கண்மூடித்தனமாக தண்டனையின் பிடியிலிருந்து விலக்களித்தல் போன்றவற்றிலிருந்து மாற்றத்தை ஏற்படுத்த முயன்றன.
அரசாங்கம் மாறினாலும் தாங்கள் தண்டனையின் பிடியிலிருந்து தப்ப முடியும் என்ற நம்பிக்கையுடன் தனிநபர்களும் அரசநிறுவனங்களும் செயற்படுவதை நீதிமன்ற கொலை உட்பட சமீபத்தைய கொலைகள் வெளிப்படுத்தியுள்ளன.
சட்ட அமுலாக்கல் பிரிவின் சில அமைப்புகளின் மத்தியில் ஆழமாக வேருன்றியுள்ள ஊழல் மற்றும் அதிகார துஷ்பிரயோகம் போன்றவை காரணமாக நீண்டகாலமாக சித்திரவதைகள் மற்றும் ‘என்கவுண்டர்கள்’ போன்றவை இடம்பெற்றுள்ளன.
இத்தகைய பின்னணியில் நாங்கள் அனைவரும் விழிப்புணர்வுடன் இருப்பதும், சட்ட அமுலாக்கல் அதிகாரிகள் அரச அதிகாரத்தை துஸ்பிரயோகம் செய்வதை கண்டிப்பதும்,விரைவான நடவடிக்கை மற்றும் பொறுப்புக் கூறலை கோருவதும் எங்கள் அனைவரினதும் கடமையாகும்.
அரச அதிகாரத்தை பயன்படுத்துபவர்கள் உட்பட இந்த வன்முறைகளுடன் தொடர்புடையவர்களிற்கு எதிராக உடனடி நடவடிக்கைகளை எடுக்கும் பொறுப்பு அரசாங்கத்திற்குள்ளது.
பயங்கரவாத தடைச் சட்டம் மற்றும் அதுபோன்ற அசாதாரண பொலிஸ் அதிகாரங்களை நம்பி அதிகாரத்தை துஸ்பிரயோகம் செய்வதற்கான வாய்ப்புகளை விரிவுபடுத்துவதில் சிக்கிக் கொள்ளாமல் இருப்பதும் அவசியம்.
ஒவ்வொரு சந்தர்ப்பங்கள் குறித்தும் பொதுமக்களிற்கு தெளிவான தொடர்ச்சியான தகவல்களை வழங்கவேண்டும்.பொதுமக்களின் நம்பிக்கையை கட்டியெழுப்புவதற்கான தகவல்களை வழங்கவேண்டும்.
சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்ட தவறியமைக்கான பொறுப்பை அரசாங்கம் ஏற்கவேண்டும் தற்போதைய சூழமைவின் அடிப்படையில் இந்த சூழ்நிலை குறித்து அனைத்து மக்களும் அரசியல் முதிர்ச்சியுடன் எதிர்வினையாற்ற வேண்டும்.
அனைத்து அரசியல் தலைமைத்துவத்தையும் பொறுப்புக்கூறலிற்கு உட்படுத்துவதில் பொதுமக்கள் பங்களிப்பு செய்ய முடியும் . சட்டமொழுங்கு அரசியல் தலையீடுகள் இல்லாமல் இயங்குவதை பொதுமக்கள் உறுதி செய்ய முடியும் எனவும் குறிப்பிட்டுள்ளது.
![]()