அனுர ஆட்சியில் தமிழ் ஊடகவியலாளர் மீது ஒடுக்கு முறை; ஐ.நா.வில் காணாமலாக்கப்பட்டோர் குரல்!… நவீனன்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 58 ஆவது கூட்டத்தொடர் பெப்ரவரி 24இல் ஜெனிவாவில் ஆரம்பமானது. இலங்கையில் குறிப்பாக வலிந்து காணாமலாக்கப்பட்டோரின குடும்பத்தினரால் முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டங்கள் குறித்து இக்கூட்டத் தொடரில் விவாதிக்கப்பட்டது.
அத்துடன் மனித உரிமைகள் பேரவை உள்ளிட்ட சர்வதேச தளங்களில் பங்கேற்று அவர்கள் வெளிப்படுத்தும் கருத்துக்கள் என்பவற்றின் ஊடாக பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதை இலக்காகக் கொண்ட அவர்களது கோரிக்கை சர்வதேச அவதானம் பெற்றிருப்பதாக கூறப்படுகிறது.
உலகளாவிய ரீதியில் மனித உரிமைகள், நீதி நிலைவரம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தினால் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டிருக்கும் அறிக்கையில் இலங்கை தொடர்பிலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதேவேளை தமிழர் தாயகத்தில் தொடரும் மத ரீதியான ஆக்கிரமிப்பை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டியதன் அவசியத்தை சர்வதேச சமூகம் உணர வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஊடகவியலாளர் மீது ஒடுக்குமுறை:
அனுர ஆட்சியில் தமிழர்களுக்கு எதிராக நடத்தப்படும் மனித உரிமை மீறல்கள் இன்னமும் தொடர்வதும், இனவாத அரசியலை முன்னெடுப்பதுலும் இன்றைய அரசும் தொடர்கிறது.
புதிய அரசாங்க ஆட்சியின் தோற்றத்தின் பின் வடக்கிலும் கிழக்கிலும் தமிழின ஒடுக்குமுறைக்காக தமது எழுத்துக்கள் மூலம் குரல் கொடுத்துவரும் ஊடகவியலாளர்கள்
தொடர்ச்சியாக தாக்கப்பட்டும், விசாரணைகளுக்கு அழைக்கப்பட்டும் வருகின்றார்கள்.
குறிப்பாக வடக்கில் தாக்கப்பட்ட மற்றும் விசாரணைக்கு அழைக்கப்பட்ட சம்பவங்களில் தொடர்புபட்ட ஊடகவியலாளர்களான தமிழ்ச்செல்வன், பாஸ்கரன்,தவசீலன், சிவா, பிரதீபன், வர்ணன் ஆகியோரின் பதிவுகள் இதுவரை கிடைத்துள்ளது.
இதுவரை தாக்கப்பட்டும், விசாரணைக்கும் அழைக்கப்பட்ட நபர்கள் மீது தமிழ் சிவில் சமூக அமைப்பினர் இன்னும் கரிசனை காட்டி குரல் எழுப்பும் சமூகமாக இல்லாதிருப்பது கவலைக்குரிய விடயமாக உள்ளது.
மனித உரிமை செயற்பாட்டாளர்க்கு ‘தீவிரவாதி’ முத்திரை:
இலங்கையில் மோதலினால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பணிபுரியும் மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் தொடர் வன்முறைகள் மற்றும் கண்காணிப்புக்கு உள்ளாவதாகவும், தீவிரவாதிகள் என முத்திரை குத்தப்படுவதாகவும் மனித உரிமைகள் பாதுகாவலர்கள் தொடர்பான ஐக்கிய நாடுகள் விசேட அறிக்கையாளர் மேரி லோலரின் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதேவேளை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க்கின் இலங்கை தொடர்பான வாய்மொழிமூல அறிக்கை விரைவில்
வெளியிடப்படவுள்ளது.
அதேபோன்று உலகளாவிய ரீதியில் மனித உரிமைகள் பாதுகாவலர்களுக்கு எதிராகப் பிரயோகிக்கப்பட்டுவரும் ஒடுக்குமுறைகள் மற்றும் மீறல்கள் பற்றிய விபரங்களை உள்ளடக்கிய மனித உரிமைகள் பாதுகாவலர்கள் தொடர்பான ஐக்கிய நாடுகள் விசேட அறிக்கையாளர் மேரி லோலரின் அறிக்கை எதிர்வரும் மார்ச் மாதம் 6 ஆம் திகதி ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
அதன்படி இலங்கையில் மனித உரிமைகள் பாதுகாவலர்களின் நிலை தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள மேரி லோலர், மோதலினால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பணிபுரியும் மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் தொடர் வன்முறைகள் மற்றும் கண்காணிப்புக்கு உள்ளாவதாகவும், தீவிரவாதிகள் என முத்திரை குத்தப்படுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதுமாத்திரமன்றி பல பெண் மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் அரசுக்கு எதிரானவர்கள் என முத்திரை குத்தப்பட்டிருப்பதாகத் தெரிவித்துள்ள அவர், அவர்கள் அமைதியான முறையில் போராட்டங்களை முன்னெடுக்கும்போது தாக்குதலுக்கு உள்ளாவதாகவும், சமூகத்திலிருந்து ஒதுக்கப்படுவதாகவும் விசனம் வெளியிட்டுள்ளார்.
தொடரும் இனவாத குரோதம்:
தற்சமயம் ஆட்சிக்கு வந்துள்ள NPP அரசானது இனிமேல் நாட்டில் இனவாதத்திற்கோ
மதவாதத்திற்கோ இடமில்லை என்று கூறிக்கொண்டு தொடர்ச்சியான அத்து மீறல்களை செய்து வருகின்றது.
நாட்டில் அதிகாரமளிக்கப்பட்டுள்ள அரச அதிகாரிகளினாலையே பல்வேறு உயிர் அச்சுறுத்தல் உருவாகும் நிலை காணப்படுகிறது.
மட்டக்களப்பு வாகரைப் பிரதேசத்திற்குட்பட்ட புச்சாக்கேணி கிராமசேவகர் பிரிவில் உள்ள நான்காம் கட்டை பகுதிக்குச் 25.02.2025 இரண்டு மணியளவில் சென்ற வனவள இலகா பிரிவினர் நீண்ட காலமாக குடியிருந்து வரும் மக்களை அச்சுறுத்தி அங்கிருந்து உடனடியாக வெளியேற வேண்டும் என எச்சரிக்கை விடுத்தனர். அச்சுறுத்தியதோடு மூன்று பேருக்கு எதிராக தகவல்களைச் சேகரித்து வழக்கு பதிவு செய்வதற்காக சென்றுள்ளனர்.
அது மட்டுமல்லாது அங்கிருந்த மூன்று குடியிருப்புக்களையும் எரியூட்டியுள்ளனர். இது தொடர்பாக கேள்வியுற்று கதிரவெளியில் இருந்து சென்ற இரு சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் நியாயம் கேட்டபோது அவர்களும் மிக மோசமாக தாக்கப் பட்டதுடன் கைவிலங்கு போடப்பட்டு குற்றவாளிகளை அழைத்துச் செல்வதுபோன்று மிகவும் கடுமையாக நடந்து கொண்டனர்.
இது தொடர்பாக மட்டக்களப்பு மாவட்ட மனித உரிமைகள் இணைப்பாளர் திரு.இசைதீன் அவர்ளிடம் முறைப்பாடு செய்யப்பட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
காணாமலாக்கப்பட்டோர் போராட்டம்:
சர்வதேச கவனத்தைப் பெற்றுள்ள காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் போராட்டம் குறித்து இன்றைய அரசு எதுவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது உலகறிந்த உண்மை ஆகும். இலங்கையில் குறிப்பாக வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் குடும்பத்தினரால் முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டங்கள் மற்றும் மனித உரிமைகள் பேரவை உள்ளிட்ட சர்வதேச தளங்களில் பங்கேற்று அவர்கள் வெளிப்படுத்தும் கருத்துக்கள் என்பவற்றின் ஊடாக பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதை இலக்காகக்கொண்ட அவர்களது கோரிக்கை சர்வதேச அவதானம் பெற்றிருப்பதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
அத்தோடு இம்முயற்சிகள் சிவில் சமூக அமைப்புக்கள் ஊடாக மேலும் வலுப்படுத்தப்
பட்டிருப்பதாகவும், குறிப்பாக பாதிக்கப்பட்ட தரப்பினருடனான பரந்துபட்ட கலந்துரையாடல்களின் அடிப்படையில் கடந்த 2016 ஆம் ஆண்டு நல்லிணக்கப்பொறிமுறை தொடர்பான ஆலோசனை செயலணியின் அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள் மீது கவனம் பாய்ச்சுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இத்தகைய இருவழி அணுகுமுறையானது கடந்தகால ஆயுதமோதல் மற்றும் வன்முறைகளின் தாக்கங்களை உரியவாறு கையாள்வதற்கு ஏற்றவாறு எதிர்கால வாய்ப்புக்களைப் பயன்படுத்துவதற்கான அடித்தளத்தை இட்டிருப்பதாகவும் ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலக அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
![]()