ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் மீண்டும் போராட்டம்; கரைவலை மீனவர்கள் ஆரம்பித்தனர்

தமது வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதற்காக நிலையான வேலைத்திட்டமொன்றை தயாரிக்குமாறு கோரி, கரைவலை மீனவர் சமூகம் கொழும்பில் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக மீண்டும் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
தமக்கு வழங்கி வாக்குறுதிக்கமைய ஆட்சியாளர்களினால் இதுவரை எவ்வித திட்டவட்டமான தீர்மானமும் அறிவிக்கப்படவில்லை என்றும், இதனாலேயே தாம் மீண்டும் போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாகவும் அந்த மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
சில மாதங்களுக்கு முன்னர் தொடர்ச்சியாக 9 நாட்களாக சத்தியாக்கிரகப் போராட்டத்தின் இவர்கள் ஈடுபட்டிருந்த போது, ஜனாதிபதியுடன் நடத்தப்பட்ட கலந்துரையாடலை தொடர்ந்து அந்தப் போராட்டம் கைவிடப்பட்டது.
இதன்போது, ஒன்றரை அல்லது இரண்டு மாதங்களுக்குள் நிரந்தரத் தீர்வு வழங்கப்படும் என இணக்கப்பாடு எட்டப்பட்ட போதிலும், இதுவரையில் எவ்வித நடைமுறைச் சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என அகில இலங்கை கரைவலை மீனவர் சங்கத்தின் செயலாளர் ஆர். ஏ. டில்ருக் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
இதனால் தொடர்ச்சியாக இதே இடத்தில் தங்கியிருந்து அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட தாம் தீர்மானித்துள்ளதாகவும், இதன்போது எதிர்வரும் புதன்கிழமையளவில் அதிகாரிகளிடமிருந்து சாதகமான பதில் கிடைக்காவிடின், நாடு முழுவதும் இருந்து மேலம் 2,000க்கும் மேற்பட்ட மீனவர்களைத் தலைநகருக்கு வரவழைத்துப் போராட்டத்தை தீவிரப்படுத்த நடவடிக்கை எடுப்போம் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
![]()