மீரா பதிப்பக டேவிட் லிகோரி: ஈழப் போர்க்கால பதிப்புத்துறையின் முன்னோடி!… ஐங்கரன் விக்கினேஸ்வரா

(ஈழத்தில் போர்க்கால நூல்கள் வெளியீட்டுத் துறையின் முன்னோடியாக விளங்கிய மீரா பதிப்பக டேவிட் லிகோரி கடந்த ஜனவரி மாதம் 13ம் திகதியில் யாழ்ப்பாணத்தில் இயற்கை எய்தினார். அவரின் பதிப்புத் திறன் நினைவாக இந்த அஞ்சலியாக்கம் உரித்தாகட்டும்)
போர்க் காலங்களில் யாழ்ப்பாணத்தில் பாரிய அளவில் பத்திரிகை தட்டுப்பாடு இருந்தது. ஆனாலும் பல தடைகளைத் தாண்டி தாயகத்தின் பல்வேறு எழுத்தாளர்களை முன்னேற்றும் பொருட்டு, அவர்கள் படைப்புக்களை நூல்களாக வெளியிட்ட பெருமை மீரா பதிப்பகத்தின் மறைந்த (13/1/2025) டேவிட் லிகோரிக்கே உள்ளது.
பதிப்பித்துறையில் உள்ள பல்வேறு கடினமான விடயங்களையும் கடந்து மீரா பதிப்பகத்தின் மறைந்த டேவிட் லிகோரி செய்த பணியானது மிக அளப்பரியது. ஈழப் போராட்டத்தில் இரண்டு இராணுவங்களின் கொடூரமான காலகட்டத்தில், அவரை 1989 நடுப்பகுதியிலும் பதிப்பக பணி காரணமாக முதன் முதலில் சந்தித்த ஞாபகங்கள் உண்டு.
போர்க்கால இலக்கியங்கள் பலவற்றை வெளியிட்டுப் பெரும்பங்காற்றிய டேவிட் லிகோரி அவர்கள் ஆரம்பத்தில் சினிமா பாடல் புத்தகங்களை வெளியிட்டு வந்தார். அதன் பின்னர் 1988 முதல் 1994 வரை 28 நூல்களை பதிப்பாளராக, தனது மீரா வெளியீட்டு நிறுவனம் மூலம் வெளியிட்ட பெருமைக்குரியவர்.
அன்றைய போர்க் காலச் சூழலில், அரசியல் அழுத்தங்கள்- ராணுவ அச்சுறுத்தகள் மத்தியிலும் அவரை பல்வேறு அச்சகங்களில் காணக் கூடியதாக இருந்தது. பல நூல் வெளியீட்டு விழாக்களிலும் அவரை சந்திக்க நேர்ந்தது. அத்துடன் பல புதிய படைப்புக்களை அவர் வெளியிட்டு வந்தார்.
பின்னர் போர்க்காலம் உச்சமான போதிலும், 1990-ல் பின்னர் பல்வேறு இராணுவ நடவடிக்கை காரணமாக தமிழ் மக்கள் இடப்பெயர வேண்டிய நிலை ஏற்பட்டது. அப்போதும் தொடர்ந்து தனது செம்மையான நூல் வெளியீட்டு பணியை மீரா பதிப்பகத்தின் மறைந்த டேவிட் லிகோரி செய்து வந்தார். இவரது பணியானது காலங்கடந்தும் போற்றத்தக்கது.
மீரா பதிப்பகத்தின் மறைந்த டேவிட் லிகோரி பற்றிய இன்னொரு விடயத்தை நாங்கள் முக்கியமாக கருத வேண்டும். ஏனெனில் பதிப்பகம் என்பது நூல்களை வெளியிடும் போது பல்வேறு இடஞ்சல்களையும் இன்னல்களையும் சந்திக்கும்.
அத்தகைய இடைஞ்சல்கள், விநியோக தடங்கள்கள் இவற்றையெல்லாம் தன் மேனி மேல் சுமந்து புத்தகங்களை தொடர்ந்து வெளியிட்ட பெருமை மீரா பதிப்பகத்தின் மறைந்த டேவிட் லிகோரி அவர்களுக்கு உரித்தாகும்.
தானே தன் கையால் சுமந்து சென்று நூல்களை விற்கும் பணியானது ஒரு வரலாற்று
கடமையாகவே நாங்கள் கருத வேண்டும். அவரது வெளியீடுகள் பல்வேறு நாடுகள் சென்றடைந்ததும் ஒரு வரலாற்றுச் சாதனையாகவே கருதப்பட வேண்டும்.
ஈழத்து இலக்கிய வரலாற்றில் அவருடைய பங்களிப்பை நாங்கள் ஒருபோதும் மறக்கவே முடியாது. 1995 பாரிய இடப்பெயர்வின் பின்னர் வன்னியில் இருந்த போது மிகவும் பெரிய கஷ்டங்கள் எதிர்நோக்கி இருந்தார். ஆனாலும் அவரது வாழ்க்கை முழுவதும் நூல்களை வெளியிட வேண்டும் என்ற எண்ணத்திலேயே இருந்தது.
ஈழத்து பதிப்பு துறையில் மீரா பதிப்பகம் ஆனது ஆளுமை மிக்க பங்களிப்பை வழங்கி உள்ளது.
பொருளாதார தடையினால் அச்சுத் தாள்கள், அச்சு மை, வார்ப்புரு எழுத்துகள் தட்டுப்பாடாகவும், அதிக விலையிலும் விற்ற காலத்தில் அப்பியாசப் புத்தக கோட்டுத் தாள்களில் அச்சிட்டு, மர புளொக் அட்டையுடன் வெளிவந்த மீரா வெளியீடுகள் பல வெளி வந்தன.
தனது பதிப்பக புத்தகங்களை அச்சிட்டு கடை கடையாக விநியோகம் செய்ததும் அவரே. செங்கை ஆழியான், செம்பியன் செல்வன், து.வைத்திலிங்கம், தாமரைச் செல்வி, கே.எஸ். ஆனந்தன், இணுவையூர் சிதம்பர திருச்செந்திநாதன், இயல்வாணன், பொன். கணேசமூர்த்தி, வளவை வளவன், ஓ.கே.குணநாதன், வாமதேவன், முருகு, இந்திரா பிரியதர்சினி ஆகியோரின் நாவல்களை இவர் வெளியிட்டுள்ளார்.
ஈழத்தில் போர்க்கால வாழ்வியல் அனுபவங்களை வெளிக்கொணர்ந்த முக்கிய இலக்கியப் பங்களிப்பாளராக இவரை அடையாளம் காணலாம். புதிய எழுத்தாளர்களை ஊக்குவித்து நாவல் வெளியீட்டினைச் செய்தும் வந்தார்.
ஈழப் போர்க்கால பதிப்புத்துறையின் முன்னோடியான டேவிட் லிகோரி பொருளாதார பலமற்ற எளிமையான வாழ்க்கை வாழ்ந்த போதிலும் அவர் சமூக அக்கறையுடன் செய்த சேவை மகத்தானது. அவரது வெளியீடுகள் இன்னமும் நிலைத்து நிற்கினறன.
மீரா பதிப்பகத்தால் 1988இல் மழைக்காலம், ராதையின் நெஞ்சம்,
பூம்பனிமலர்கள், முடிவல்ல ஆரம்பம் ஆகிய நூல்கள் வெளிவந்துள்ளன.
இதன் தொடர்ச்சியாக 1989இல் மண்ணின் தாகம், பாலைவனப் பயணிகள்,கானகத்தின் கானம், முற்றத்து ஒற்றைப்பனை, சங்கரன் ஆகிய படைப்புக்களும் வெளிவந்தன.
பூஜைக்காக வாழும் பூவை, இராவணன் கோட்டை, நிலவே நீ மயங்காதே, இருள் இரவில் அல்ல
போன்ற நூல்கள் மீரா பதிப்பகத்தால் 1990இல் வெளியிடப்பட்டன. மேலும் 1991இல் அக்கினி, வெள்ளையடிக்கப்பட்ட கல்லறை, முள்முடி மன்னர்கள், விடியலைத் தேடி, ஊருக்கல்ல ஆகிய படைப்புக்களும் வெளிவந்தன.
ஒரு இல்லத்தில் சில உள்ளங்கள், மீண்டும் புதிதாய்ப் பிறப்போம், விண்ணில் அல்ல விடிவெள்ளி, சுவடுகள் ஆகிய படைப்புக்களும் 1992இல் வெளிவந்தன. 1993ஆம் ஆண்டில் தாகம் என்ற நூலும் 1994 இல் ஆறுகள் பின்னோக்கி பாய்வதில்லை, கனவுகள் சுமக்கும் தேசம் ஆகிய நூல்களும் வெளிவந்தன.
ஈழத்து இலக்கிய வரலாற்றில் அவருடைய பங்களிப்பை நாங்கள் ஒருபோதும் மறக்கவே முடியாது. ஈழப் போர்க்கால பதிப்புத்துறையின் முன்னோடியான டேவிட் லிகோரிக்கு தோழமையான அஞ்சலிகள் உரித்தாக !
![]()