அர்ஜுன மகேந்திரனை நாட்டுக்கு கொண்டு வருவதற்கான முயற்சியை அரசு கைவிடாது

மத்திய வங்கி பிணைமுறி மோசடியுடன் தொடர்புடைய முன்னாள் மத்தியவங்கி ஆளுநர் அர்ஜுன மகேந்திரனை நாட்டுக்கு அழைத்து வருவதற்கான முயற்சியை அரசாங்கம் கைவிடாது என்று அமைச்சரவை பேச்சாளரான அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவரால் அர்ஜுன மகேந்திரன் தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு கூறினார்.
அதன்போது அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,
அர்ஜுன மகேந்திரனை நாட்டுக்கு கொண்டு வருவதில் சட்டப்படியான சிக்கல்கள் ஊள்ளன. எனினும் நாங்கள் அவரை நாட்டுக்கு கொண்டு வருவதற்காக முடிந்தளவு முயற்சிகளில் ஈடுபடுகின்றோம். அவர் வந்தாலும் வராவிட்டாலும் வழக்கு விசாரணைகள் தொடரும். அதேபோன்று அவரை நாட்டுக்கு கொண்டுவரும் முயற்சிகளும் இடம்பெறும்.
மகேந்திரனை கொண்டுவரும் பொறுப்பு முன்னாள் ஜனாதிபதியான ரணில் விக்கிரமசிங்கவுக்கும் உள்ளன. ஆனால் எங்களின் முயற்சிகளை கைவிடப் போவதில்லை.
இதேவேளை வழக்கு நடவடிக்கைகளில் பிணைமுறி செயற்பாடுகளை திடீரென மாற்றியமை உள்ளிட்ட பல விடயங்களுக்கு ரணில் விக்ககிரமசிங்க பதிலளிக்க வேண்டியவராக இருக்கின்றார் என்றார்.
![]()