மகிந்தவே கௌரவமாக வீட்டிலிருந்து வெளியேறுங்கள்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கௌரவமான முறையில் தனது உத்தியோகபூர்வ இல்லத்தில் இருந்து வெளியேறுவதே நல்லது என்றும் இல்லையென்றால் சட்டப்படி வெளியேற்றும் நிலைமை ஏற்படும் என்று அமைச்சர் சமந்த வித்தியாரட்ன தெரிவித்துள்ளார்.
வெள்ளிக்கிழமை நடத்தப்பட்ட ஊடக சந்திப்பொன்றிலேயே அமைச்சர் இவ்வாறு கூறியுள்ளார்.
அனுதாபங்களை பெற்றுக்கொள்ள அவர்கள் முயற்சிக்கின்றனர். பூகம்பம் வரும் போது அனுதாபத்தின் மூலம் தப்பிக்க முடியது. நியாயமாக நடந்துகொள்வார்களாக இருந்தால் அவர்கள் வீட்டை கொடுத்துவிட்டு போய்விட வேண்டும். ரணில் விக்கிரமசிங்க மற்றும் கோதாபய ராஜபக்ஷ ஆகியோர் வீட்டை ஒப்படைத்துவிட்டு போயுள்ளார்கள். ஏன் இவர்களால் போக முடியவில்லை. வீடு இல்லாதவர்களாக இருந்தால் பரவாயில்லை. மலையகத்தில் வீடில்லாத மக்கள் எவ்வளவோ இருக்கின்றனர். அவர்கள் ஒரே வீட்டில் ஐந்து குடும்பங்கள் இருக்கும் நிலைமையும் உள்ளது. ஆனால் பதவியில் இருந்த இவர்கள் சொகுசு வாழ்க்கை வாழ்கின்றனர்.
அந்த வீட்டில் இருப்பதற்கு வெட்கமில்லையா? மில்லியன் கணக்கான மக்கள் பணத்தை பயன்படுத்தி சுகபோக மாளிகையை அமைத்துக்கொண்டு இருக்க முடியுமா? இருக்கும் சட்டத்திற்கமைய ஓய்வுபெற்ற முன்னாள் ஜனாதிபதிகளுக்கு மாதத்தில் முப்பதாயிரம் வழங்கலாம். ஆனால் கோடிக்கணக்கில் பெறுமதியான வீட்டில் இருக்க முடியுமா? மக்களின் அனுதாபங்களை பெற்றுக்கொள்ள முயற்சிக்காது வீட்டில் இருந்து போக வேண்டும்.
அவரை வீட்டில் இருந்து வெளியேற்றினால் வீடு வழங்க பலர் வெளியில் இருக்கின்றனர் என்று சாமர சம்பத் எம்.பி கூறியுள்ளார். அப்படியென்றால் நண்பர்களின் மூலம் வீட்டை பெற்று இருக்கலாம். எழுத்து மூலமாக எதனையும் கொடுக்க வேண்டியதில்லை. நியாயம் இருக்குமாக இருந்தால், தமக்கென எஞ்சியுள்ள எதனையாவது பாதுகாத்துக்கொள்ள வேண்டுமாயின் கௌரமாக போய்விடுவதே நல்லது. இல்லாவிட்டால் சட்டப்படி வெளியேறும் நிலைமையே ஏற்படும்.
![]()