காரைக்கால் மீனவர் மீது இலங்கை கடற்படை துப்பாக்கிச் சூடு; இலங்கை தூதரை நேரில் அழைத்து இந்திய அரசு கடும் கண்டனம்

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் காரைக்கால் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை துப்பாக்கிச் சூடு நடத்தியதற்காக   இந்தியாவுக்கான இலங்கை தூதரை நேரில் அழைத்து மத்திய அரசு தமது கண்டனத்தை தெரிவித்துள்ளது.

புதுச்சேரி யூனியன் பிரதேசத்துக்குட்பட்ட காரைக்கால் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது இலங்கை கடற்படை துப்பாக்கிச் சூடு நடத்தி 13 மீனவர்களை கைது செய்தது. இலங்கை கடற்படையின் துப்பாக்கிச் சூட்டில் 2 மீனவர்கள் படுகாயமடைந்த நிலையில் 2 பேரும்  யாழ்ப்பாணம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் இலங்கை கடற்படையின் இந்த துப்பாக்கிச் சூட்டுக்கு மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. டெல்லியில் உள்ள இந்தியாவுக்கான தூதரை நேரில் அழைத்து மத்திய அரசு தமது கண்டனத்தை தெரிவித்தது.

இது தொடர்பாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்  இலங்கையின் ஊர்காவற்றுறை பகுதியில் இன்று(நேற்று)  அதிகாலை இந்திய மீனவர்கள் மீது (காரைக்கால், புதுச்சேரி) இலங்கை கடற்படை துப்பாக்கிச் சூடு நடத்தி 13 பேரை கைது செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த துப்பாக்கிச் சூட்டின் போது படகில் இருந்த 13 பேரில் படுகாயமடைந்த 2 பேர் தற்போது இலங்கையின் யாழ்ப்பாணம்  மருத்துவமனையில் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 3 மீனவர்களும் இந்த துப்பாக்கிச் சூட்டில் சிறு காயமடைந்துள்ளனர்

இலங்கை யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள், யாழ்ப்பாணம் மருத்துவமனைக்கு நேரில் சென்று துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வரும் மீனவர்களை சந்தித்து தேவையான உதவிகளை செய்து வருகின்றனர்.

இதனையடுத்து டெல்லியில் உள்ள இலங்கைக்கான இந்திய தூதரை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்துக்கு நேரில் வரவழைத்து இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துக்கு மத்திய அரசின் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இலங்கை தலைநகர் கொழும்பில் உள்ள இந்திய தூதரகமும் இலங்கையின் வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் கவனத்துக்கு இந்த விவகாரத்தை கொண்டு சென்றுள்ளது. மீனவர்கள் விவகாரத்தில் எப்போதும் மனிதாபிமான கண்ணோட்டத்தில்தான் நடந்து கொள்ள வேண்டும் என்பதை இந்தியா எப்பொபொதும் அழுத்தம் திருத்தமாக வலியுறுத்தி வருகிறது. எந்த ஒரு சூழ்நிலையிலும் இத்தகைய தாக்குதல்களை நடத்துவதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button